தனித்திரு - 6

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
திருமுருகனுக்கு திருப்பி தர வேண்டும் என்பதற்காகவே வேகவேகமாக எழுதி முடித்தேன். எழுதி முடித்த பின்பு அவன் வீட்டை பற்றி சிந்தித்து பார்த்தேன். எனக்கு ஒரு பக்கம் அந்த வீட்டை பிடித்திருந்தது.

எங்கள் வீட்டிற்கு யாரேனும் வந்தால் நாங்கள் அவர்கள் செல்லும் வரை அறையை விட்டு வெளியே வரவே மாட்டோம். எங்களை பார்த்தபின் அவன் தங்கை அவனருகே அமர்ந்த விதம் எனக்கு பிடித்திருந்தது. அந்த வீட்டில் இருப்பவர்களுடன் இன்னும் நெருக்கமாக பழக வேண்டுமென்ற ஆவல் பிறந்தது.

எழுதி முடித்தாகி விட்டது. வாங்கிய நோட்டினை திருப்பி தர வேண்டும். ஆனால் அக்கா வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தாள். அவள் வந்தால் உடனே கிளம்பலாம் என்று காத்திருந்தேன். கொஞ்சம் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தாள்.

உடனே திரு வீட்டிற்கு செல்ல வேண்டும் என தயாராக சொல்லி அவளை கிளப்பினேன். ஆனால் அதற்குள் வாசலில் நிழலாடியது. நான் கண்ணாடி முன் நின்றிருந்து, அந்த கண்ணாடி வழியாக பார்த்தேன். திருதான் வந்திருந்தான். நான் திரும்பி கதவருகே சென்று உள்ளே வருமாறு அழைத்தேன். நான் மரியாதையாக யாரை அழைக்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக அம்மாவும் அப்பாவும் எட்டிப் பார்த்து விட்டு அவர்களும் திருவை வரவேற்றனர். அவன் உள்ளெ வந்து அமர்ந்த பின் அப்பா அவன் யார் என்று கேட்பது போல் என்னை பார்த்தார்.

“அப்பா, இது திரு, என் கிளாஸ்மேட்பா, திரு இது என் அம்மா, என் அப்பா”
அதற்குள் அக்காவும் வெளியே வந்திருந்தாள். திருவை பார்த்ததும் அவளும் உற்சாகமானாள்.

“வாங்க, வாங்க, அப்பா நேத்து சப்பாத்தி செஞ்சது யார்னு கேட்டிங்களே, இவர்தான், திரு எங்க வீட்ல எல்லோருக்கும் உங்க சப்பாத்தி பிடிச்சுருந்தது.”

அதற்குள் நான் சென்று கண்ணாடி கோப்பையில் குளிர்பானத்தை நிரப்பி கொண்டு வந்து குடுத்தேன். மறுக்காமல் வாங்கி கொண்டான். அப்பா அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தார். அம்மா அவன் செய்த சப்பாத்தியையும், சமையல் கற்றது பற்றியும் விசாரித்தாள். நான் உள்ளே சென்று நோட்டினை எடுத்து வந்தேன். அக்கா அவனிடம் எப்படி வீட்டை கண்டுபிடித்தீர்கள் என்று கேட்டாள்.

“உங்க பின்னாடி தாங்க வந்தேன், நீங்க வீட்டுக்குள்ள நுழையறப்ப நான் தெருக்குள்ள நுழையறேன்”

"என்னை கூப்பிட்டுருக்கலாமே?”

“ரொம்ப தூரத்துல இருந்திங்க. உங்க பேரை சத்தம் போட்டு கூப்பிட பிடிக்கலை. அதான்”

என் அப்பாவிற்கு அவனை பிடித்திருக்க வேண்டும். ரொம்ப உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார். வகுப்பில் என் நடவடிக்கை பற்றியும், அவனது எதிர்கால திட்டம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார். அம்மாவும் வழக்கம் போல் சமையலறைக்குள் நுழையாமல், நின்று அவன் பேசுவதை கவனித்து கொண்டிருந்தாள். என்னை பார்த்து

“எழுதி முடிச்சாச்சா?” என்று கேட்டான்.

நான் முடித்து விட்டேன் என்று தலையசைத்து விட்டு அவனிடம் நோட்டினை திருப்பி ஒப்படைத்தேன். எல்லோரிடமும் தனித்தனியாக விடைபெற்று கொண்டு கிளம்பினான். நான் அப்பாவை பார்த்த போது

“நல்ல பையனா இருக்கான் இல்லை” என்றார்.

அன்றிரவு சாப்பிட்டு முடித்த பின் அக்கா ஏதோ எழுத துவங்கினாள். நான் அருகில் சென்று அமர்ந்ததும் என்னை பார்த்து புன்னகைத்தாள். அதற்கு ‘என்ன விஷயம்' என்று அர்த்தம். நானும் பதிலுக்கு புன்னகைத்தேன். அக்காவே நேரடியாக விசயத்திற்கு வந்தாள்.

“என்னடி, திருவ பத்தி பேசனுமா?”

“திருவ பத்தியும் பேசனும்”

“சரி அப்ப மத்த விஷயங்கள முதல்ல பேசிடுவோம். சொல்லு?”

“முதல்லயே திருவ பத்தி பேசலாமே?”

என் கன்னத்தை கிள்ளி இழுத்தாள்.

“சரி சொல்லு”

“ஏன் சுபா, இப்பவும் உனக்கு திரு மேல சந்தேகம் இருக்கா?”

“இல்லை, நேத்து அவங்கம்மா உன்னை பத்தி திரு சொல்லியிருக்கான்னு சொன்னப்பவே சந்தேகம் எல்லாம் மொத்தமா போயிடுச்சு. இன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்துருந்தப்ப கவனிச்சதுல சுத்தமா எல்லாமே போயிடுச்சு”

“எப்படி சொல்ற?”

“தப்பான எண்ணம் இருக்கவன் அவங்கம்மாகிட்ட என்னை பத்தி சொல்லியிருக்க மாட்டான்”

“சரி, இப்ப நான் என்ன செய்யட்டும்?”

“எந்த தயக்கமும் இல்லாம அவங்கிட்ட பழகு, நீயாவே கூட பேசு, முதல்ல அவனுக்கு என்னென்ன தெரியும்னு தெரிஞ்சுகிட்டு உனக்கு தேவைப்படறத அவங்கிட்டருந்து கத்துக்கோ”

“என்னக்கா, எதோ கோச்சிங் கிளாஸ்-ல சேர்ரது மாதிரி சொல்ற”

“நான் சொல்றது புரியலை உனக்கு, இந்த computer class, typewriting-லாம் வேலை தேடும் போதுதான் பயன்படும். நான் கத்துக்க சொல்றது எப்படி வாழனும்னு”

“அவனை பெரிய ரிஷி மாதிரி நினைச்சு பேசற நீ?”

“அவனுக்கு தெரியுமோ, தெரியாதோ? அதை விடு, நான் உன்னை அவன்கிட்டருந்து எதையும் கத்துக்க சொல்லலை, அவன் மூலமா கத்துக்க சொல்றேன்”

“அதான் எதை கத்துக்க சொல்ற?”

“எப்படி கத்துக்கனும்கறத கத்துக்கோ”

“புரியலை சுபா”

“உனக்கு சொன்னா புரியாதுடி, அவன் கூட பழகு, கொஞ்சம் கொஞ்சமா புரியும்”

“சரி, இனிமேல் அவனை பார்க்கும் போதுலாம் எதாவது கேட்டுகிட்டே இருக்கேன், சரியா?”

“சரி, ஆனா கேள்வி கேட்கறத வச்சு உன்னை அவன் முட்டாள்னு நினைக்காத அளவுக்கு கேளு”

“நான் அவங்கிட்ட அதிகமா பேசுனா யாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா?”

“இந்த கேள்வியலாம் இனிமேல் நீ அவன்கிட்டதான் கேட்கனும்”

“கேட்கறேன், கேட்கறேன்”

“அதெல்லாம் கேட்கறதுக்கு முன்னாடி, அவன் சப்பாத்தி போட்டு குடுத்துவிட்ட பாக்ஸ்-அ திருப்பி குடுத்துடு, இல்லைனா அதை அவன் கேட்டு கேவல படுத்திட போறான்”

“ஆமா நாளைக்கு மறக்காம அதை திருப்பி குடுத்திடனும்”

அடுத்த வந்த நாட்களில் திருவிடம் அதிகம் நெருங்கியிருந்தேன். ஆனால் அவன் என் பக்கம் நெருங்கியதாக தெரியவில்லை. அதே நிலையில் நின்றிருந்தான். நான் அவனிடம் முதலில் கேட்ட கேள்வி அவன் இலட்சியம் என்ன என்பதுதான்.

ஏதோ பெரிய விஞ்ஞானி அல்லது ஏதாவது சமுதாயத்தை திருத்த போவதாக கூறுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவன் இதுவரை அதை பற்றி சிந்தித்ததே இல்லை என்றான். நான் ஏன் என்று கேட்டதற்கு அதைப் பற்றி சிந்திப்பதற்கு தனித்தகுதி வேண்டும் என்றான்.

‘எந்த மாதிரி தகுதி' என்றேன். ‘படிப்பை முடிக்க வேண்டும். சுயமாக சம்பாதிக்க வேண்டும். என் வரையில் நான் ஒழுங்காக இருப்பதாக எனக்கு திருப்தி வர வேண்டும்' என்றான்.

“திரு, எனக்கு புரியலை. எனக்கு தெரிஞ்ச எல்லாரும் டாக்டர், கலேக்டர்னு தான் சொல்வாங்க. நீ வேற மாதிரி சொல்ற?”

“இல்லைங்க, அதெல்லாம் தொழில், பணம் சம்பாதிப்பதற்கான துறைகள், சமுக அந்தஸ்து அப்புறம் தங்களோட ஆளுமைய காட்டறதுக்காக புகழுக்காக தேர்ந்தெடுக்கறது தானே அதெல்லாம்”

அப்புறம் உன் பார்வையில இலட்சியம்-னா என்ன?”

“இலட்சியம் னா சாதனைன்னு சொல்லலாம். சாதனைன்னா இதுவரைக்கும் யாரும் செய்யாததா இருக்கனும். ஆனா பல பேர் பாஸ் பண்றதயும் சினிமால ஹீரோ ஆகறதயும், காதலிச்ச பெண்ணை கல்யாணம் பண்றதயும் தான் இலட்சியம்னு சொல்றாங்க”

“நல்ல வேலைக்கு போறதயும் இலட்சியமா சொல்ல கூடாதா?”

“நல்ல வேலைக்கு போகனும்கறது என்னோட ஆசைகள்-ல ஒன்னுனு வேணா சொல்லலாம்”

“நல்ல படிப்பு?”

“இங்கே எல்லோரும் நல்ல வேலைக்கு போகனுங்கறதுக்காக மட்டும்தானே படிக்கறாங்க”

“அப்படி எப்படி பொதுவா சொல்ல முடியும்?”

“எப்படின்னா பல பேருக்கு எந்த படிப்பு படிச்சா எந்த வேலைக்கு போகனும்னே தெரியாம இருக்காங்களே, மத்தவங்க தேர்ந்தெடுத்து குடுத்தோ, இல்லை தெரிஞ்சவன் பண்றத பார்த்தோ தானே மேல் படிப்ப தேர்ந்தெடுக்கறாங்க”

“விவரம் தெரியாதவங்க வேற என்ன பன்ன முடியும்?”

“அது தப்பு, +2 முடிக்கற பையனுக்கு அடுத்து என்னென்ன படிப்பு இருக்குன்னும், என்ன படிச்சா என்ன ஆகலாம்கறதயும் தெரிஞ்சு வச்சுருக்கனும், அது பெரிய விஷயமில்லை. தினமும் பேப்பர் படிச்சா கூட போதும் அதை பத்தி தெரிஞ்சுக்கலாம்”

“சரி நீ அப்படித்தான் தேர்ந்தெடுத்தியா?”

“அப்படியும் சொல்லலாம். +2-ல நான் வாங்குனதுலயே குறைஞ்ச மார்க் வாங்குனது இயற்பியல்-லதான். அப்படி அதுல என்னதான் இருக்குனு தெரிஞ்சுக்கனும்னு ஆசைப்பட்டேன். அதுக்காகதான் இந்த படிப்பை தேர்ந்தெடுத்தேன்”

“நல்லது, நான் அப்படி பண்ணலை. என் அக்கா சொன்னதாலதான் எடுத்தேன். சரி உன் ரசனை பத்தி சொல்லேன்”

“எந்த விஷயத்துலனு தெளிவா கேளு”

“பொதுவா உனக்கு பிடிச்சது?”

“எனக்கு தனியா பயணிக்க பிடிக்கும்”

“பஸ்லயா? ட்ரெய்ன்-லயா?”

“மொத்தமா எல்லாமே பிடிக்கும். பல நேரம் நடந்தே போவேன். கையில எதையும் எடுத்துக்காம யார் கூடயும் பேசாம, பசிக்கும் போது எங்கயாவது சாப்பிட்டு, திரும்ப வரனும்னு தோணுற வரைக்கும் எங்கேயாவது போய்கிட்டு இருப்பேன்”

“எத்தனை தடவ இப்படி போயிருக்கிங்க?”

“சரியா தெரியலை, +1-லருந்து தோணும் போதுலாம் அப்பப்ப இது மாதிரி போய்ட்டு வருவேன்”

“உங்க வீட்ல எதுவும் கேட்க மாட்டாங்களா?”

“நான் திரும்பி வந்துடுவேன்னு தெரியும். இன்னோன்னு நான் நடந்து போறதுலாம் அவங்களுக்கு அதிகமா தெரியாது”

“அதுல என்ன கிடைக்கும் உங்களுக்கு?”

“தனிமை, அதுல கிடைக்கற நிம்மதி”

“நல்லாயிருக்குமா?”

“நீங்க வேணா முயற்சி பண்ணி பாருங்களேன்”

“நானா? எப்படி?”

“இனி எதாவது ஊருக்கு போறப்ப ஒரு தடவை தனியா போகப் பாருங்க. தூங்காம, படம் பார்க்காம உங்களுக்குள்ள கேள்வி கேட்டுகிட்டு, இரசிச்சுகிட்டு போனா உங்களுக்கு தெரியும்”

"தப்பா நினைக்காதிங்க, நீங்க சொல்றதலாம் பார்த்தா, குடும்ப வாழ்க்கையில இருந்து விலகிடுவோமோனு தோணுது”

“சேச்சே, வெயிலோட கொடுமை தெரிஞ்சவனுக்குதான் நிழலோட அருமை புரியும். உங்களுக்கு எப்படி புரிய வைக்கறதுனு தெரியலை. தெரிஞ்சக்கனும்னு ஆர்வம் இருந்தா நீங்களா முயற்சி பண்ணி கத்துக்கோங்க, விருப்பம் இல்லைனா விட்டுடுங்க”

“சரி, உங்களை மாதிரியே இருக்கறவங்களை பார்த்திருக்கிங்களா?”

“நிறைய பேரை பார்த்துருக்கேன்”

“உங்க நண்பர்களா?”

“உங்களுக்கு எப்படி சொல்றதுனு தெரியலை. ஒரு கட்டத்தை தாண்டிட்டா நண்பர்கள்னு யாரையும் தனியா சொல்ல வேண்டியது இல்லை. எல்லோரையும் நேசிச்சு, ஒரே அளவுல வச்சுக்கற பக்குவம் வந்துடும்”

“எனக்கு நீங்க சொல்றதுல முழுசா நம்பிக்கை வரமாட்டேங்குது?”

“அதாவது, கரையில நின்னுகிட்டு இருக்கவங்கிட்ட ஆத்துக்குள்ள நீச்சல் அடிச்சுட்டு இருக்கவன் எவ்வளவு விளக்கமா நீச்சலடிக்க கத்து குடுத்தாலும் புரியாது. ஆத்துக்குள்ள இறங்குனாதான் நீச்சல் கத்துக்க முடியும்”

“நீங்க சொல்ற மாதிரி நடந்துகிட்டா எல்லோர்கிட்டயும் குடும்பம் மேலயும் காட்டற அன்பு குறைஞ்சுடுமா?”

“இது சரியான கேள்வி, பாசம் குறையாது அதிகமாகும். கோபம்தான் காணாமல் போகும். எளிமையா சொல்லனும்னா நீங்க உங்களை புரிஞ்சுகிட்டா, மத்தவங்க இடத்துல உங்களை வச்சு யோசிச்சு பார்ப்பிங்க, உங்களுக்கு மத்தவங்கள புரிஞ்சுக்கறது சுலபமாயிடும். மத்தவங்க கஷ்டத்த புரிஞ்சுகிட்டா கோபமே வராது. அன்பு அதிகமாகும்”

“சரி தனியா இருக்கறதுனா யார்கிட்டயும் பேசாம இருக்கறதா?”

“இல்லை, தனியா இருக்கறதுனா எனக்குள்ல நான் பேசிக்கறது. இதுக்கு யார் கூடவும் பேசாம இருக்கனும்னு அவசியம் இல்லை. எல்லோரையும் போல இயல்பா இருந்துகிட்டே இதை பன்னலாம்”

“எங்கக்கா கூட தன்னை அறிதல் பத்தி உங்ககிட்ட கத்துக்கலாம்னு சொன்னாங்க”

“நானே அதை இன்னும் முழுசா கத்துக்கலை. எங்கிட்டருந்து எதையும் கத்துக்க முடியாது. என் கூட சேர்ந்து கத்துக்கலாம்”

“இதெல்லாம் கத்துகிட்டு நாம என்ன செய்ய போறோம்? இது எங்கே போய் முடியும்?”

“எனக்கு ஏன் கத்துக்கனும்னு விளக்க தெரியாது. கத்துகிட்டதுக்கு அப்புறம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி பயன்படும். வீணா போகாது. எங்கே போய் முடியும் தெரியுமா? கடவுளை உங்ககிட்ட கொண்டு வரும். உங்களையே கடவுளோட அம்சமா மாத்தும்”

“தன்னை அறிதலுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?”

“நான் உங்களுக்கு கேள்விய சொல்லி குடுத்துருக்கேன். பதிலை நீங்க கண்டு பிடிச்சு சொல்லுங்க,அந்த பதில் சரியா தப்பானு நான் சொல்றேன்”

“எதாவது புத்தகத்த தேடுனா பதில் கிடைக்குமா?”

“பதில் தேடுற வழிய உங்க இஷ்டபடி நீங்க தேர்ந்தெடுக்கலாம். Internet ல கூட தேடுங்க, உங்க விருப்பம்”

“பதில் கிடைக்க எவ்வளவு நாளாகும்?”

“அது உங்க முயற்சிய பொறுத்தது”

என்னிடம் டீவி, சினிமா, காதல், குடும்பம் இதெல்லாம் பற்றி அரட்டை அடிக்காமல் கொஞ்சம் புதிதாய் பேசுவது திருமுருகன்தான். கொஞ்ச நாள் போக போக எனக்கு அவனிடம் பேசும்பொழுது பணிவு வர துவங்கியது என்னையறியாமல்.

நாள் போக போக எனக்குள் அவனை போன்ற நண்பனை பெற்ற பெருமிதம் இருந்தாலும் மற்ற பெண்களைப் போல் அதிகம் சிரித்து பேசுவதில்லை என்ற குறை இருந்தது. அதற்கு என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் மற்ற பெண்களிடம் இது விஷயமாக எனக்கு கொஞ்சம் பொறாமை இருந்தது. அக்காவிடம் இதை பற்றி இலை மறைவு காயாக கேட்டேன். அவளும் திருவை போலவே சூட்சமாமகவே பதிலளித்தாள்.

‘உன் வாழ்க்கை உன் கையில்' என்று. நானேதான் முயல வேண்டும் என்று புரிந்தது. முன் போல் இல்லை. இப்போது என்னிடம் அவன் செல் நம்பர் இருக்கிறது. ஆனால் கூப்பிட்டு என்ன பேசுவது என்று தெரியவில்லை.

http://www.facenfacts.com/daily_img/1489_L_girl%20m.jpg

ஒருமுறை ஏதாவது பேசலாம் என்று 8 மணி சுமாருக்கு கால் செய்தேன்.

“ஹலோ, திரு?”

“சொல்லுங்க வரலட்சுமி”

“வீட்லயா இருக்கிங்க?”

“ஆமா ஏன்?”

“இல்லை சும்மாதான் கேட்டேன்”

“என்ன விஷயம்னு சொல்லுங்க”

“ஒன்னுமில்லை, சும்மாதான் கால் பன்னேன்”

“உங்களுக்கொன்னு தெரியுமா? ஒரு மகான்கிட்ட போய் வாழ்க்கைல நிம்மதியா இருக்கிறதுக்கு எதாவது தத்துவம் சொல்லுங்கனு கேட்டதுக்கு ‘சும்மா இரு' ன்னு சொன்னாராம்”

“சும்மா இருன்னா? ஏன் அப்படி சொன்னார்?”

“சும்மா இருன்னா கடந்த கால கவலைகள் இல்லாம எதிர்கால பயம் இல்லாம, நிகழ் காலத்துல இருக்கனும்னு அர்த்தமாம். எப்படி பார்த்திங்களா?”

“திரு ஏன் ரொம்ப பெரிய ஆன்மீகவாதிங்களாம் குழப்பற மாதிரியே பேசறாங்க, நேரடியாவே பதில் சொல்ல மாட்டாங்களா?”

“நேரடியா பதில் சொல்லிட்டா, நம்ம அறிவுக்கு என்ன வேலை? புரிஞ்சுக்கனும்னு நினைச்சா எவ்வளவு சூட்சமமா சொன்னாலும் யோசிச்சு யோசிச்சு கண்டுபிடிச்சுடலாம். ஆர்வம் இல்லாதவனுக்கு நேரடியா சொன்னாலும் புரியாது”

“நான் நேரடியா கேட்கறேன் திரு, எங்கிட்ட உனக்கு வேற எதுவும் பேச தோணலையா?”

“இதுவரைக்கும் உங்க கூட இதுஇதுலாம் பேசனும்னு நினைச்சதில்லை. உங்களுக்கு எதை பத்தியாவது பேசனும்னா சொல்லுங்க பேசலாம்.”

“இல்லை, அப்படி எதுவும் இல்லை. வச்சுடறேன்"

மனதிற்குள் அவனை நன்றாக திட்டினேன். கருங்கல், ஜடம், உணர்ச்சியே இல்லாதவன், கல்லூளி மங்கன்-னு பலவாறு திட்டினேன். எவ்வளவு திட்டினாலும் கோபப்பட்டாலும் எனக்கு திருவை தவிர வேறு எவரிடமும் பழக பிடிக்கவில்லை என்பதை மட்டும் நான் மறுக்க போவதில்லை.

அடுத்த நாள் நானே எதிர்பாராத விதமாய் வீடு வந்து சேர்ந்ததும் திருவிடமிருந்து அழைப்பு வந்தது.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2