- மழைச்சாரல்: தனித்திரு - 5
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 29 May 2013

தனித்திரு - 5

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
இன்று பேருந்தில் இருந்து இறங்கியதும் திருவை திரும்பி கூட பார்க்காமல் வேகமாக வீடு நோக்கி வந்தேன். அக்கா வந்ததும் நடந்தது அனைத்தும் கூறினேன். அவள் கூறியது

“உன் கூட பழகற யாருக்கும் கொஞ்சம் கூட பக்குவம் இல்லை. ஒரு பையனும் பொண்ணும் பேசுனா கொஞ்ச நாள்-ல காதலிச்சுடுவாங்கனு சினிமாவ பார்த்து நம்பிகிட்டு இருக்காங்க. அவங்க தனியா ஒரு பையன் கூட பேச ஆரம்பிச்சா கொஞ்ச நாள்-ல காதலிச்சுடுவாங்க. ஆனா இனிமேல் அவங்ககிட்ட மத்த பசங்களை குறிப்பிட்டு பேசாத. இந்த வயசுல நாம எதை பத்தி பேசுனாலும் அது காதலுக்கு அறிகுறினு சொல்லி நம்மளை அதுக்குள்ள தள்ளிவிடத்தான் எல்லாரும் பார்ப்பாங்க. அதே மாதிரி அந்த திரு நல்லவனா, கெட்டவனானு தெரியாம பழகறது தப்பு, அதுலயும் அவனை பத்தி தெரிஞ்ச நண்பன்னு யாரும் இல்லாதப்ப அவனை தவிர்க்கறதுதான் நல்லதுன்னு எனக்கு படுது”

அக்காவிடம் பேசியபின் யோசித்து பார்த்ததில் எனக்கும் அதுதான் சரியென பட்டது. திருவிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென்று முடிவு செய்தேன்.
என்னால் திருவிடம் பேசாமல் இருக்க முடிந்தது. ஆனால் அவனை கவனிக்காமல் இருக்க முடியவில்லை. வகுப்பில் பாடம் நடக்கும் போதும், வீட்டிற்கு செல்லும் போதும் அவ்வப்போது திரும்பி பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் திருவிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. என்னிடம் பேசவும் முயற்சிக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவனை கவனிப்பது குறைந்துக் கொண்டே வந்தது. அக்காவிடமும் அதை பற்றி பேசுவதில்லை. 10 நாட்கள் கடந்திருக்கும். வெள்ளிக்கிழமை அன்று அக்கா என்னை கோவிலுக்கு அழைத்தாள். எனக்கு பெரிதாக பக்தி இல்லை. ஆனால் அக்காவுடன் செல்வது பிடிக்கும் என்பதால் அவளுக்கு பொருத்தமாக தாவணி அணிந்து கொண்டு கிளம்பினேன்.

http://2.bp.blogspot.com/--NWexDcfthE/TkshZWqpDqI/AAAAAAAAA6U/m5n2OcGhG1g/s1600/trisha+half+sarees+sexy.jpg
ஐயப்பன் கோவில், மிகவும் ரம்மியமான் இடம். கூட்டமாக இருந்தாலும் அமைதியாக இருந்தது. எனக்கு எப்படி எப்படி வணங்க வேண்டும் என்ற முறைகளெல்லாம் தெரியாது. அக்காவிற்கு நன்றாக தெரியும். ஏதேதோ ஸ்லோகமெல்லாம் கற்று வைத்திருக்கிறாள். நான் அவள் செய்வதை அப்படியே பார்த்து செய்து கொண்டிருந்தேன்.

கோவில் சபா மண்டபத்தில் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் பொழுது பார்த்தேன். பாடிக் கொண்டிருப்பவர்களை விட அதை இரசிப்பவர்களை பார்க்க தோன்றியது. பார்த்தேன். எதிர்பாராத விதமாய் என் கண்களுக்கு திரு தென்பட்டான்.

உடனே முகத்தை திருப்பிக் கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த அக்காவிடம்

“சுபா, திரு வந்திருக்கான்”

“இங்கேயா? எங்க இருக்கான்?”

“அங்கே சபா மண்டபத்துல”

“அடுத்த சுற்றுல பார்க்கலாம். யார்னு காட்டு”

அடுத்த தடவை சுற்றி வரும் போது அக்காவிற்கு அவனை காட்டினேன். கண்களை மூடிக்கொண்டிருந்தான். பார்த்துவிட்டு சுற்றும் பொழுது இருவரும் பேச ஆரம்பித்தோம்.

“சுபா பார்த்தியா?”

“ம், ரொம்ப அமைதியா தெரியறான்”

“பேசும் போதும் அமைதியாதான் பேசுவான்"

“நீ என்ன நினக்கற?”

“எதை பத்திக் கேட்கற?”

“இல்லை அவன் எதுக்காக வந்துருப்பானு நினைக்கற?”

“இது என்ன சுபா கேள்வி? கோவிலுக்கு எதுக்கு வந்துருப்பான், சாமி கும்பிடத்தான் வந்துருப்பான்”

“உனக்கு சந்தேகப்பட தோணலையா?”

“உன் கேள்வி புரியலை எனக்கு?”

“போன தடவை அவனை பத்தி பேசும் போது என்ன பேசுனோம்-னு ஞாபகம் இருக்கா?”

“என்ன பேசுனோம்?”

“அவன் உன்னை அவன் பக்கம் ஈர்க்கறதுக்கு முயற்சி பண்ண வாய்ப்பிருக்குனு சந்தேகப்பட்டோமே?”

“ஆமா, அதுக்கென்ன இப்போ?”

“ஒருவேளை இப்ப உன்னை பின்தொடர்ந்து வந்துருப்பானோ?”

“பைத்தியகாரத்தனமா இருக்கு உன் பேச்சு, நான் கோவிலுக்கு வரப்போறேங்கிறது அவனுக்கு எப்படி தெரிஞ்சுருக்கும்னு சொல்ற? உன் சந்தேகம் அர்த்தமில்லாதது”

“சரி, சந்தேகப்பட்டது தப்புதான், ஆனா கவனிச்சியா? நல்லா கண்மூடி இரசிச்சுட்டு இருந்தான்”

“எனக்கு அது ஆச்சரியமா படலை. இந்த மாதிரி இரசனை இருக்கவங்க அமைதியாதான் இருப்பாங்க”

“எனக்கு இப்ப வேற தோணுது”

“என்ன சுபா?”
“சராசரியா இருக்க மத்த பசங்க பொண்ணுங்களோட பழகுனா, பொழுது மட்டும்தான் போகும். வேற எதுவும் உருப்படியா நடக்காது. இவனை மாதிரி பசங்களோட பழகறது பல நன்மைகள் தரும்”

“எதை பத்தி சொல்ற?”

“முதல் விஷயம் இவன் கூட பழகுனா கண்டிப்பா உன்னை நீ நல்லா தெரிஞ்சுப்ப, நீயும் அவனை மாதிரி அமைதியா மாறவும் வாய்ப்பிருக்கு”

“மறுபடியும் நானா போய் அவங்கிட்ட பேசவா? தப்பா நினைச்சுக்க மாட்டானா?”

“அதெல்லாம் அவனை பாதிக்காதுன்னுதான் தோணுது. ஒன்னு சொல்லவா?”

“சொல்லு?”

“இப்போ அவன் கோவில்ல ரொம்ப படுத்து விழுந்து சாமி கும்பிட்டு இருந்துருந்தா கூட அவனை நான் சராசரியானவனாதான் பார்த்துருப்பேன். சங்கீதம் கேட்கறது கொஞ்சம் சிறப்புதானே”

“எனக்கென்னவோ மறுபடியும் நானா போய் அவங்கிட்ட எப்படி பேசறதுனு தெரியலை”

“உன்னை அந்த மாதிரி போய் பேச சொல்லலை. சந்தர்ப்பம் வரும் போது தயங்காதேனு தான் சொல்றேன்”

அடுத்த முறை அந்த பக்கம் வந்து பார்த்த போது திருவை காணவில்லை. சென்று விட்டான் போலும்.

அக்கா சொன்னது போல் அடுத்த முறை அவனை பார்க்கும் போது சிநேகமாக சிரிக்க துவங்கினேன். அவன் பதிலுக்கு சிரித்தானே தவிர என்னுடன் பேச முயற்சிக்கவில்லை. எங்கள் இருவருக்குமிடையே பேசுவதற்கும் எதுவும் இல்லை. ஆனால் அவ்வப்போது அவன் செய்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். கொஞ்சம் கூட மாற்றம் தெரியவில்லை.

ஒரு வாரம் போனது. சனிக்கிழமை வகுப்பில் திங்கள் வரும் போது முடித்து வர சொல்லி எழுத்து வேலை குடுத்திருந்தனர். என் தோழியிடம் பார்த்து எழுதுவதற்கு வாங்கி செல்வதாக இருந்த நோட்டினை ஏதோ ஞாபகத்தில் வாங்காமல் வந்து விட்டேன். வீட்டிற்கு வந்த பின்புதான் அது நினைவுக்கு வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அக்காவிடம் கேட்டேன். அவள் அருகில் யாராவது நண்பர்கள் இருந்தால் வாங்கி எழுத சொல்லி சொன்னாள். எனக்கு யோசித்து பார்த்ததில் திருதான் நினைவுக்கு வந்தான். அக்காவிடம் சொன்னேன். ‘சரி போய் வாங்கி வா' என்றாள்.

“எனக்கு அவன் வீடு தெரியாதே”

“போன் பன்னி கேளு”

“எங்கிட்ட அவன் நம்பர் இல்லை”

“உன் ஃபிரென்ட்ஷ் யாருக்காவது கால் பன்னி அவன் நம்பர் வாங்கு”

நான் விசாரித்ததில் 3-வது நபரிடம் தான் அவனது வீட்டு எண் இருந்தது. வீட்டு எண் என்றால் வேறு யாராவது எடுப்பார்களே, ஏதாவது நினத்துக் கொண்டால் என்று பயமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. இன்னொரு பக்கம் அவன் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்ததால் தைரியமாக போன் செய்தேன்.

“‟ஹலோ” பெண் குரல்

“‟ஹலோ, திருமுருகன் வீடுங்களா?”

“ஆமா, நீங்க?”

“என் பேர் வரலட்சுமி, திருவோட கிளாஷ்மேட்”

“சொல்லும்மா, திரு உன்னை பத்தி சொல்லிருக்கான்”

“இல்லைம்மா, ஒரு நோட் ஒன்னு திருகிட்ட வாங்கனும்”

“அவன் வீட்ல இல்லைம்மா, இப்ப வந்துடுவான், உங்க வீட்டுக்கு கொண்டு வந்து தர சொல்லட்டுமா?”

“இல்லைம்மா, நானே வந்து வாங்கிக்கறேன்”

“சரிம்மா, உனக்கு வீடு தெரியுமாம்மா?”

“தெரு வரைக்கும் வந்துடுவேன். வீடு எங்கேனு தெரியாது”

“தெருவுல நுழைஞ்சதும் 3-வது வீடும்மா, வீட்டுக்கு முன்னாடி அவங்கப்பாவோட Name board இருக்கும். Joint engineer, Railway department னு போட்டுருக்கும்”

“சரி நான் வந்துடறேன்ம்மா”

“ஒரு கால் மணி நேரத்துல வருவியாமா?”

“வந்துருவேன்மா”

“சரி வாம்மா”

நான் சுபாக்காவிடம் பேசியதை கூறினேன். எனக்கு திரு அவன் அம்மாவிடம் என்னை பற்றி என்ன கூறியிருப்பான் என்ற கேள்வி எழுந்தது. அதை அக்காவிடம் கேட்ட பொழுது

“நேராய் போனால் தெரிஞ்சுடும்”

“நீயும் வர்றியா சுபா”

“நான் எதுக்குடி?”

“எனக்கு கொஞ்சம் தடுமாற்றமா இருக்கு, நீ வந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்னு தோணுது”

“சரி வர்றேன், ஆனா போனதும் வந்துடனும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சரியா?”

“சரி வா போலாம்”

“உடனேவா?”

“ஆமா, பத்து நிமிஷத்துல வர்ரதா சொல்லியிருக்கேன்”

“அதுவும் நல்லதுதான். அப்பா வர்ரதுக்குள்ள வந்துடலாம். கிளம்பு போலாம்”

இருவரும் நடந்துதான் கிளம்பினோம். போகும் வழியில் வீட்டிற்கான அடையாளத்தைக் கூறினேன். எங்கள் வீட்டிலிருந்து செல்ல சரியாக 5 நிமிடம் தான் ஆனது. வீட்டை நெருங்கி கதவை தட்டினோம். கதவை திறந்தது பெண். பள்ளி செல்பவள் போல தெரிந்தது.

“யார் வேணும்?”

“திருமுருகன் இருக்காருங்களா?”

“எங்கண்ணன் தான். உள்ளே வாங்க”

உள்ளே நுழைந்தோம். ஹாலில் நுழைந்து பார்க்கும் பொழுது சமையலறை தெளிவாக தெரிந்தது. திரு அமர்ந்து சப்பாத்திக்கு மாவு தேய்த்துக் கொண்டிருந்தான். எங்களை பார்த்ததும் எழுந்து வந்தான். அவன் பின்னேயே வந்தது அவன் அம்மாவாக இருக்கும்.

“வாங்க வாங்க”

அவன் ஒரு முறையும், அவன் தாய் ஒரு முறையும் வரவேற்றனர்.

“என்ன திடிர்னு, வரப் போறதா சொல்லவே இல்லையே?”

நான் அவர்கள் அம்மாவை பார்த்தேன்.

“ஃபோன் பன்னியிருந்தாங்கடா, நான்தான் சொல்ல மறந்துட்டேன்”

உட்கார வைத்து தண்ணிர் குடுத்தனர். அக்கா பார்க்கிறாள் என்பதற்காக நானும் ஒருமுறை வீட்டை நன்றாக கவனித்தேன். எல்லாமே சரியாக அடுக்கியிருந்தது. எங்கள் வீட்டில் ஆயுத பூஜை, பொங்கல் அன்று மட்டும்தான் இவ்வளவு சுத்தம் இருக்கும். திரு எதிரில் அமர்ந்து பேச துவங்கினான்.

“சொல்லுங்க, முதல்ல எங்க வீட்ல எல்லோரையும் அறிமுகபடுத்திடறேன். இவ என் தங்கச்சி தெய்வானை. 9th படிக்கறா. இது எங்கம்மா, அப்பா இன்னும் வரலை”

பதிலுக்கு நானும் என் அக்கா சுபலட்சுமியை அறிமுகபடுத்தினேன். இப்போது அவன் தங்கை அவனை ஒட்டி உட்கார்ந்திருந்தாள். நான் வந்த விசயத்தைக் கூறினேன். நாளை மாலைக்குள் முடித்து, திருப்பி குடுப்பதாக இருந்தால் தருவதாக கூறினான். உள்ளே சென்று அதை அவன் எடுத்து வருவதற்குள் அவன் அம்மா எங்களை சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்த துவங்கினார்கள். நாங்கள் வீட்டில் எங்களுக்காக அப்பாவும் அம்மாவும் சாப்பிடாமல் காத்திருப்பார்கள் என்று கூறி தவிர்க்க முயற்சி செய்தோம்.

கையில் நோட்டுடன் வந்த திருவும் சாப்பிட அழைத்தான். மீண்டும் மறுத்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத விதமாக திரு, தன் தங்கையிடம் கூறி ஒரு பிளாஸ்டிக் பாக்ஸ்-ல் சப்பாத்தியை பார்சல் செய்து எடுத்து போக சொன்னான். இன்னோரு நாள் கண்டிப்பாக வந்து சாப்பிடுகிறோம் என்று சொல்லி தவிர்க்க பார்த்தோம்.

“நான் செஞ்ச சப்பாத்தி, எங்க வீட்ல எல்லோரும் நல்லாயிருக்குனு சொல்றாங்க, அது உண்மையானு தெரிஞ்சுக்கனும், நீங்க சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க, எடுத்துகிட்டு போங்க”

என்றதும் என்னால் மறுக்க முடியவில்லை. கையில் வாங்கி கொண்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பினோம். வழியில் அக்கா

“வரலட்சுமி, நீ திரு கூட பழகி எதை கத்துக்க போறியோ இல்லையோ, அவங்கிட்டயிருந்து சமைக்கவாவது கத்துக்கற என்ன?" என்றாள். எனக்கு மெலிதாய் சிரிப்பு வந்தது.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

No comments:

Post a Comment