- மழைச்சாரல்: தனித்திரு - 7
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 29 May 2013

தனித்திரு - 7

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் நானே எதிர்பாராத விதமாய் வீடு வந்து சேர்ந்ததும் திருவிடமிருந்து அழைப்பு வந்தது. நம்ப முடியாமல் பேசினேன். நான் எதிர்பார்த்தது போல் எதுவும் இல்லை. அவன் தங்கைக்கு ஏதோ சில துணிகள், அலங்கார பொருட்கள் வாங்க துணைக்கு போய் வர முடியுமா என்று கேட்டான். எனக்கும் அந்த முட்டை கண்ணியை மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்ததால் சரி என்று ஒத்துக்கொண்டேன். நான் உடை மாற்றி தயாராவதற்குள் வீட்டிற்கு அழைத்து வந்து, என் வீட்டில் உள்ளோரிடம் பேசிவிட்டு சென்றான். அவன் தங்கையின் பள்ளியில் ஏதோ விழா நடக்க போகிறதாம். அதற்கு நடனமாட போகிறார்களாம். 4 பெண்களுக்கு ஒரே மாதிரி துணி எடுக்க வேண்டும் என்றும் மற்ற சில அலங்கார பொருட்கள் வாங்க வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்.

எனக்கும் இது போன்ற பொருட்களை எங்கு வாங்க வேண்டும் என்று அவ்வளவுக்காய் தெரியாது, என் தோழிகளிடம் விசாரித்து அழைத்து சென்றேன். கடைகளுக்கு சென்ற பின்புதான் தெரிந்தது நான் அழைத்து வந்திருப்பது சரியான வாயாடி என்று. ஒவ்வொரு இடத்திலும் அடித்து விலை பேசினாள். நான் இனி எந்த பொருள் வாங்க செல்வதாக இருந்தாலும் தெய்வானையை அழைத்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.
எல்லாம் வாங்கி முடித்த பின் பணம் தரும் பொழுது என்னை ஒரு பார்வை பார்ப்பாள். பேசி இன்னும் கொஞ்சம் விலையை குறைக்க முடியுமா? என்பதுதான் அந்த பார்வைக்கான அர்த்தம். எனக்கு அது போல் விலை குறைத்து தர சொல்லி பேசி பழக்கம் இல்லை. ஆனால் அவள் கண்களை உருட்டி உருட்டி பேசியது எனக்கு பிடித்திருந்தது.

வாங்க வேண்டியது எல்லாம் வாங்கிய பின் திரும்பி வரும் போது இருவருக்குள்ளும் பேசிக்கொள்ள தயக்கம் இல்லை.எப்போதும் வயதில் சிறியவர்களிடம் எல்லாம் கேட்பது போல் நானும் முதலில் படிப்பை பற்றித்தான் பேச ஆரம்பித்தேன். அதிகம் சுற்றி வளைக்காமல் அவள் அண்ணனை பற்றி பேச துவங்கினேன்.

“உங்க அண்ணன் கொஞ்சம் வித்தியாசமா இருக்காங்க இல்லை?”

“எப்படி சொல்றிங்கக்கா?”

“எனக்கு அப்படி தோணுது, சரி வீட்ல எல்லோர்கிட்டயும் நல்லா பேசுவாரா?”

“வீட்ல அந்த வேலையைதான் செய்வார். தினமும் என்ன நடந்ததுன்னு அம்மாகிட்ட சொல்லிடுவாரு, அப்புறம் அதை அப்படியே டைரில எழுதிடுவார்"

“ஒகோ அந்த பழக்கமெல்லாம் வேற இருக்கா?”

“உங்ககிட்ட சொன்னதில்லையா?”

“நானா கேட்காம உங்கண்ணன் எங்கிட்ட எதையுமே சொல்ல மாட்டார். ரொம்ப reseved”

“யாரு எங்கண்ணனா? பொய் சொல்றிங்க, என் கூட தினமும் பேசுவார். விளையாடுவாரு, எதை வச்சு அப்படி சொல்றிங்க?”

“எங்கிட்ட பேசறதை வச்சுதான்”

“என்னமோ எனக்கு நீங்க சொல்லிதான் எங்கண்ண்ன் reserved-னு தெரியுது. ஆனா நான் நம்ப மாட்டேன்”

“உங்கண்ணன் jolly type னு சொல்றியா?”

“ஆமா, எங்கண்ணன் எப்பவும் கோபப்பட மாட்டார். எனக்கு படிப்பு சுமாராதான் வரும். அந்த சுமாரும் அவர் சொல்லி தர்ரதாலதான். ஆனா எனக்கு நடனத்துலதான் விருப்பம்னு எங்கம்மாகிட்ட பேசி அவர்தான் வாரவாரம் dance class போக உதவி பண்ணார். தினமும் பாட்டு பாடி என்னை ஆட சொல்லி பார்த்து கை தட்டி என்னை உற்சாக படுத்துவார் தெரியுமா?”

“உங்கண்ணன் நல்லா பாடுவாரா?”

“ரொம்ப நல்லா பாடுவார்னு சொல்ல முடியாது, ஆனா கூச்சபடாம பாடுவார்”

“எப்படி வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்கறார்?”

“அப்படிலாம் இல்லையே, அப்பப்ப library தான் இருப்பார். எதாவது படிச்சுகிட்டே இருப்பார். அதுக்காக reserved னுலாம் சொல்ல முடியாது”

“சரி சரி ஒத்துக்கறேன். உங்கண்ணன் reserved இல்லை”

அதன் அவளை பற்றி பொதுவான விஷயங்களை பற்றி கொஞ்ச நேரமும் பேசினோம். எனக்கு தெய்வானை பேசும் விதம் பிடித்திருந்தது. திருவிற்கு அது நேரேதிராக கொஞ்சம் சிறுபிள்ளைத்தனமாக இருக்கும்.

அடுத்த முறை திருவிடம் பேசியபோது நேரடியாக என்னையும் நூலகத்தில் உறுப்பினராக சேர்த்து விடச்சொல்லி கேட்டு, அடுத்து வந்த ஞாயிறன்றே நானும் அக்காவும் உறுப்பினரானோம். முதல் நாள் அக்கா ‘இரமணி சந்திரன்' நாவல்களை எடுத்துக் கொண்டாள். நானும் அதே போல் கைக்கு கிடைத்த நாவல்களை எடுத்து கொண்டு வந்தேன்.

எனக்கு புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால் ஆர்வத்தை வரவழைத்துக் கொண்டு படித்தேன். அப்போதும் முடியவில்லை. அடுத்த முறை திருவை பார்த்த போது நேரடியாக அதை பற்றி கூறினேன்.

“ந்னக்கு படிச்சு தெரிஞ்சுக்கறதுல அவ்வளவா ஆர்வம் இல்லை, வரவும் மாட்டேங்குது, பேசலாம்னா எவ்வளவு நேரம் வேணா பேசலாம்.”

“அதுல தப்பில்லையே, பேசியும் தெரிஞ்சுக்கலாமே”

“அப்ப நான் கேட்கறேன், நீ சொல்றியா?”

“எனக்கு தெரிஞ்சத சொல்றேன்”

“நான் பெருசா ஒன்னும் கேட்க போறதுல்லை, உன்னை பத்தி சொல்லு?”

“என்னை பத்தியா? என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு?”

“உன் பள்ளிக்கூட வாழ்க்கைய பத்தி சொல்லு?”

“நான் 5வது வரைக்கும் இந்த ஊர்லதான் படிச்சேன். அடுத்த 7 வருசம் அப்பாக்கு மாற்றல் ஆகி சேலம் போய்ட்டோம். நான் ஓரளவுக்கு படிப்பேன்னு பேர் இருந்தது. அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. என்னால மறக்க முடியாத என் வாழ்க்கையோட பகுதி அதுதான், யாராலயும் அவங்க பள்ளிகூட நினைவுகள மறக்க முடியாது”

“எனக்கு ஒரே school லயே lkg-லருந்து +2 வரைக்கும் முடிஞ்சுடுச்சு. அதுவும் ரொம்ப கண்டிப்புனு சொல்லிக்கற பொண்ணுங்க மட்டும் படிக்கற இடம். அக்கா இருந்ததால ஒன்னும் கஷ்டமா இல்லை”

“உனக்கும் உங்கக்காக்கும் சண்டை வருமா?”

“வரும், பேசிக்காம இருப்போம், உடனே அப்பா சமாதானபடுத்தி வச்சுடுவார். திரு உனக்கு புத்தகம்-னா ரொம்ப பிடிக்குமா?”

“ம், கேள்வி கேட்க கத்து தரும்”

“சரி என் எங்கிட்ட பேசற மாதிரி மத்தவங்ககிட்ட நல்லா பேசமாட்டேங்குற?”

“எஎன்னா நீ என்னை ஓரளவுக்கு புரிஞ்சுக்க முயற்சி பண்ற, மத்தவங்களுக்கு நான் பேசறது கேட்க போர் அடிக்கும் அதான்”

“பசங்களுக்கு வேணா அப்படி சொல்லலாம், பொண்ணுங்களுக்கும் நீ பேசறது பிடிக்காதுனு எப்படி சொல்ல முடியும்?”

“எனக்கு அப்படித்தான் தோணுது”

“என்னை பார்த்தா பொண்ணு மாதிரி தெரியலையா உனக்கு? நான் உங்கிட்ட பழகிட்டு இருக்கனே, அப்புறம் என்ன?”

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லப்பா, ஆனா என்ன பேச சொல்ற?”

“என்னவா இருந்தா என்ன? எதாவது பேசு, ஒதுங்கி ஒதுங்கி போகாதப்பா”

“சரி, பேசறேன்”

எனக்கு அவன் என் பேச்சை ஒப்புக் கொண்டதும் சந்தோஷமாக இருந்தது. ஒரு குழந்தையை 4 பேர் அழைக்கும் பொழுது, அந்த குழந்தை ஒருவரிடம் மட்டும் சென்றால் அவருக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும். எனக்கும் அப்படித்தான் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் ஒருமுறை திருவை என் தோழிகளுடன் பேச வைப்பதற்காக மதிய உணவு இடைவேளையின் போது canteen-ல் வட்ட மேஜை மாநாடு ஏற்பாடு செய்தேன். திரு எந்த தயக்கமும் இல்லாமல் வந்து அம்ர்ந்தான். பெண்களில் சிலர் குசுகுசுவென்று பேசிக் கொண்டனர். சிறிது சிறிதாக அரட்டை துவங்கியது. நான் நினைத்ததற்கும் மேலாக திரு சிரித்து பேசினான்.

பெண்கள் அவனை கேலி செய்த பொழுது உரக்க சிரித்து கொண்டான். பதிலுக்கு அவனும் கேலி செய்தான். செய்து விட்டு உடனே “தப்பா எடுத்துக்காதிங்க சும்மா விளையாட்டுக்குதான் சொன்னேன்” என்றான்.

கொஞ்சம் கொஞ்சமாக அந்த இடத்தில் உற்சாகம் பொங்கியது. அரை லிட்டர் குளிர்பானத்தை வாயிலிருந்து எடுக்காமல் குடிப்பதாய் பந்தயம் கட்டி ஜெயித்தான். கை விரலை முழுவதுமாய் வளைத்துக் காட்டினான். சினிமாவை விமர்சனம் செய்து சிரித்து பேசினான்.

நாக்கால் மூக்கை தொட முயற்சி செய்து தோற்றும் போனான். அடுத்த வகுப்பிற்கு மணியடிக்கும் பொழுது யாருக்கும் எழுந்து போகவே விருப்பமில்லை. நான் அமைதியாக அவன் பக்கத்தில் பெருமையுடன் அமர்ந்திருந்தேன்.

http://1-ps.googleusercontent.com/x/www.nst.com.my/w1.nst.com.my/polopoly_fs/1.265084.1366975278!/image/image.jpg_gen/derivatives/landscape_454/ximage.jpg.pagespeed.ic.QN_cj3dOis.jpg

அன்று மாலை வீட்டுக்கு செல்லும் போது உற்சாகமாய் ‘எப்படி இருந்தது?' என்று கேட்டேன்.

“நல்லாதான் இருந்தது. நான் ஒண்ணு கேட்கவா?”

“கேளு திரு”

“நான் அப்படி சிரிச்சு, சத்தம் போட்டுகிட்டு கேலியும் கிண்டலுமாய் இருந்தா உனக்கு பிடிச்சுருக்கா?”

"ஏன் அப்படி கேட்கற?”

“இல்லை, உன் முகத்துல பெருமை தெரியுதே தவிர சந்தோஷம் தெரியலையே”

“எப்படி திரு சொல்ற?”

“நான் தினமும் உன் முகத்தை பார்த்துகிட்டு இருக்கேன். பல தடவை உன் சந்தோஷமான முகத்தை பார்த்துருக்கேன். இன்னைக்கு நீ சந்தோஷபட்ட மாதிரி தெரியலை. அதான் கேட்டேன்”

“எனக்கு அப்படி எதுவும் தெரியலைப்பா”

“சரி விடு, உனக்கு சந்தோஷம்னா எனக்கும் சந்தோஷம்”

எனோ அவன் அப்படி சொன்னதுதான் எனக்கு சந்தோஷத்தை தந்தது. எனக்கு இன்னும் கொஞ்சம் திருவிடம் நெருங்க வேண்டும் போல இருந்தது. இதை நான் அக்காவிடம் சொல்லவில்லை. அடுத்து அவனுடன் பேசுகையில் காதலை பற்றி பேச வேண்டும் என நினைத்து கொண்டேன். அதற்கான சந்தர்ப்பமும் தானாய் அமைந்தது.

ஒரு ஞாயிறன்று திருவுடன் நூலகத்திற்கு சென்று வருகையில் வழக்கம் போல் விவாதித்து கொண்டு வந்தோம். எனக்கு மனதில் சின்னதாக ஒரு ஆசை இருந்தது. ஏதேனும் விடுதியில் ஒன்றாக தேநீர் அருந்தவோ, அல்லது வேறேதேனும் சாப்பிடவோ வேண்டும் என்று.

ஆனால் எனக்கு இது போன்ற அனுபவமில்லை. எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. வெட்கம் என்று சொல்ல முடியாது, தயக்கமாக இருந்தது. இதை பற்றிய சிந்தனைகள் வந்ததும் என்னால் அதிகம் பேச முடியவில்லை. அதை கவனித்த திரு ‘என் ஒரு மாதிரி இருக்க?' என்று கேட்டான். நான் ‘ஒன்னுமில்லை, தலை வலிக்கற மாதிரி இருக்கு' என்றேன். அப்படி சொன்னால் ‘டீ சாப்பிடலாமா?' என்று கேட்பான் என எதிர்பார்த்தேன்.

ஆனால் அவன் வேறு விதமாக கேட்டான். ‘மாத்திரை வாங்கி தரட்டுமா?' என்று. ஏதோ அந்த அளவுக்கு அக்கறை வைத்திருக்கிறானே என்று நினைத்துக் கொண்டு ‘இல்லை வேண்டாம் பரவாயில்லை' என்றேன். ஆனால் அப்படியே பேசிக் கொண்டு வரும் வழியில் ஒரு மெடிக்கல் ஷாப் வந்ததும் மாத்திரை வாங்க சென்றான். நான் அருகில் ஒட்டி இருந்த காபி ஷாப்பினை எக்கமாக பார்த்து கொண்டிருந்தேன். இது ஒன்றும் பெரிய ஆசை இல்லைதான். ஆனால் மற்றவர்களை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறதே. என்ன செய்ய?

திரும்பி வரும் பொழுது திரு சிரித்து கொண்டே வந்தான். அந்த சிரிப்பில் குறும்பு தொனித்திருந்தது. மெதுவாக ‘அந்த பக்கம் பாரு, யாருன்னு' என்றான். நான் எட்டி பார்த்தேன். உள்ளே என்னுடன் படிக்கும் பெண்ணோருத்தி யாரோ ஒருவனுடன் அமர்ந்து ஐஸ்கிரிம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்.

திரு ‘இங்கே நிற்க வேண்டாம்' என அழைத்து சென்றான். ‘அந்த பையன் யார்னு தெரியுதா?' என்றான். ‘யாரு? உனக்கு தெரியுமா?' என்றேன்.

“நம்ம சீனியர்தான், பேர் ஞாபகம் இல்லை”

“வனிதா கூட உட்கார்ந்துருக்கார், ரிலேட்டிவ்வா?”

“ஆகப் போறாங்கனு நினைக்கறேன்”

“லவ்-ஆ?”

“அப்படித்தான் நினைக்கறேன்”

“உனக்கெப்படி தெரியும்?”

“பல இடத்துல 2 பேரையும் பார்த்துருக்கேன். அதிகமா சாயங்கால நேரத்துல பார்க்-லதான் இருப்பாங்க”

“நீ அடிக்கடி பார்க் போவியா?”

“எப்பவாவது போவேன்”

“ஏன் இது வரைக்கும் எங்கிட்ட அவங்களை பத்தி சொல்லவேயில்லை?”

“சொல்லனும்னு தோணலை, ஏன் தப்பா?”

“சொல்லாம இருக்கறது தப்பில்லை, பார்க்குக்கு போகும் போது ஏன் என்னை கூப்பிடனும்னு தோணலை?”

“உனக்குலாம் இது மாதிரி என் கூட வரத்தோணும்னு எனக்கு எப்படி தொ¢யும்? நீ கேட்டதேயில்லையே?”

“இதெல்லாம் நானா கேட்க முடியும்?”

“சரி விடு”

எனக்கு நான் ஏன் அப்படி பேசினேன் என்று தெரியவில்லை. நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் பேசிவிட்டேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் சந்தோசமாகவும் இருந்தது. அதை பற்றி பேச்சு முடிந்ததும் இதுதான் சரியான தருணம் என்று காதலை பற்றி பேச துவங்கினேன்.

“ஏன் திரு, காதலிக்கறது பத்தி என்ன நினைக்கற?”

“உண்மையிலேயே அது ரொம்ப அற்புதமான விஷயம், ஆனா இங்கே அது மாதிரி உண்மையான காதல் எல்லோர்கிட்டயும் இருக்கறது இல்லை”

“தெளிவா உன் அபிப்பிராயத்த சொல்லேன்”

“காதல், கல்யாணம், குழந்தைங்க இது எல்லாமே வாழ்க்கைல மனிதனுக்கு பிடிப்ப தரக்கூடிய விஷயங்கள், ஆண்கள் கடுமையா உழைக்கறப்ப யாருக்காக இந்த கஷ்டம்னு யோசிக்கும் போது பதில் தரக்கூடியது குடும்பம்தான். அந்த குடும்பம் மேல பற்று வர காதல் தேவை. நல்ல காதல் இருக்க குடும்பத்துல நல்ல குழந்தைங்க பிறப்பாங்க, எளிமையா சொல்லனும்னா காதல் இல்லாம குடும்ப வாழ்க்கை நிம்மதியா இருக்காது”

“ஒத்துக்கறேன் திரு, காதல்னா என்னன்னு சொல்ல வர்ர?”

“நிறைய சொல்லலாம் காதல்னா முதல்ல நம்பிக்கை, நிறைய அன்பு, தன்னையே அர்ப்பணிக்கற பாசம்னு சொல்லிகிட்டே போகலாம். ஆனா இதெல்லாம் வெறும் ஏட்டறிவுதான். என்னால அனுபவ பூர்வமா சொல்ல முடியாது”

“உன் மனசுல நீ நினைக்கற அளவுக்கான காதலை யார்கிட்டயாவது பார்த்திருக்கியா?”

“இல்லை, புராணத்துலதான் படிச்சுருக்கேன், நீ பார்த்திருக்கியா?”

“நான் எனக்கு தெரிஞ்சு யாராவது லவ் பண்றாங்கனு தெரிஞ்சாலே அவங்ககிட்ட இருந்து விலக ஆரம்பிச்சுடுவேன். எனக்கு இங்கே காதலிக்கறவங்கள பார்த்து பார்த்து காதல் மேலயே கோபம் வந்துடுச்சு”

“ஏன் அப்படி சொல்ற?”

“8வது 9வது படிக்கற பசங்க பொண்ணுங்களாம் காதலிக்கறாங்கப்பா, அவங்களுக்கு காதல்னா என்னன்னே புரியாத வயசுல எதுக்கு காதல்னு சொல்லிகிட்டு மனச அழுக்காக்கிறாங்க, அதே நேரத்துல என்னால இது தப்புன்னு சொல்ல முடியுதே தவிர ஏன் தப்புன்னும் காதல் எப்படி இருக்கனும்னும் விளக்க தெரியாததால காதல்-அ விட்டு ஒதுங்கி இருக்கேன்”

“இதை எளிமையா சொல்லலாம். உன் வீட்ல இருக்கவங்ககிட்ட உன் காதலை உன்னால தைரியமா சொல்ல முடியும்னா நீ தைரியமா காதலிக்கலாம். அவங்க கேட்கற கேள்விக்கு உங்கிட்ட பதில் இருக்கும் போது நீ தைரியமா காதல் செய்”

“யார் வீட்ல பொண்ணு காதலிக்கறதா சொன்னா ஒத்துப்பாங்க?”

“பொண்ண புரிஞ்சுகிட்ட வீட்ல ஒத்துப்பாங்க”

“எப்படி சொல்ற?”

“தான் பொண்ணு தப்பு பண்ண மாட்டானு வீடு நம்பனும், நம்ம வீட்ல இருக்கவங்க நமக்கு நல்லதுதான் பன்னுவாங்கனு பொண்ணு நம்பனும், இந்த நம்பிக்கை இல்லாத வீட்ல இருக்க பொண்ணு, தன் மேல முதல்ல வீட்ல இருக்கவங்களுக்கு நம்பிக்கை வரவழைச்சுட்டுதான் காதலிக்கனும்”

“கொஞ்சம் குழப்புது”

“காதலிக்கறவங்களோட விருப்பம் என்ன? கல்யாணம் பண்ணிக்கனும்னு தானே? கல்யாணம் பண்ணிகிட்டு ஒரு குடும்பத்தை உருவாக்க போறங்க. கல்யாணம்னா என்ன? ஒரு குடும்பத்துல இருக்க பொண்ணு இன்னோரு குடும்பத்துல போய் வாழப்போறா அல்லது உருவாக்கபோறானு சொல்லலாம், இது கிட்டதட்ட ஒரு இடத்துல இருந்து ஒரு செடிய பிடிங்கி இன்னொரு இடத்துல நடற மாதிரிதான். ஒரு இடத்துல உயிரோட தழைச்சுட்டுருக்க செடியதானே இன்னொரு இடத்துல நடமுடியும்? அது மாதிரி பிறந்த குடும்பத்துல நம்பிக்கைய சம்பாதிக்க முடியாத பொண்ணு, எப்படி புதுசா ஒரு குடும்பத்துல நம்பிக்கையையும் அன்பையும் சம்பாதிக்க போறா?”

“நீ சொல்றது சரிதான், ஒருவேளை பொண்ணோட குடும்பம் சரியில்லாம இருந்து, பொண்ணு மட்டும் நல்லவளா இருக்கறப்ப நீ சொல்றது ஒத்து வராதே?”

“ஒரு இடத்துல பொண்ணு பார்க்க போறப்ப, விசாரிக்கும் போது, குடும்பத்துல இருக்கறவங்க அப்படி இப்படினு இருந்தாலும் பொண்ணு தங்கமான பொண்ணுனு சொல்ற அளவுக்காவது அந்த பொண்ணு அக்கம் பக்கத்துல பேர் வாங்கியிருக்கனும்”

“நீ சொல்றதுலாம் வீட்ல பார்த்து பண்ணி வைக்கற கல்யாணத்துக்குதான் பொருந்தும், காதல் கல்யாணத்துல இதெல்லாம் சாத்தியமில்லையே?”

“எனக்கு பிடிக்காததுல இதுவும் ஒன்னு, காதல் கல்யாணாம்னாலே கூட்டிட்டு ஒடிப்போய் யாருக்கும் தெரியாம ரிஜிஷ்டர் ஆபிஸ்-ல பண்றதாவேதான் நினைக்கறிங்க. எல்லோருமா சேர்ந்து காதல்னாலே குடும்பத்துல இருந்து பிரிஞ்சு வர்ரதுனு நினைக்க வச்சுட்டாங்க, தவிர்க்க முடியாத சூழ்நிலையில மட்டும்தான் அது சரியான வழி, மத்தபடி வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றதுங்கறது நம்மை பெத்தவங்களை செருப்பால அடிக்கறதுக்கு சமம், நீயே சொல்லு, ஒரு குடும்பத்த அவமானபடுத்திட்டு இன்னோரு குடும்ப வாழ்க்கைய ஆரம்பிச்சா நல்லாயிருக்குமா? காதலிக்கறியா? வீட்ல சொல்லு, அவங்க ஒத்துக்கலையா? ஒத்துக்க வை, முடியவே முடியாதுனுட்டா பத்திரிக்கை அடிச்சு, அவங்களுக்கும் ஒண்ணு குடுத்துட்டு ஊரறிய கல்யாணம் பண்ணு”

“நீ சாதாரணமா சொல்ற, படம்லாம் பார்க்கறது இல்லையா? வெட்டி போட்ற மாட்டாங்களா?”

“அப்படி வெட்டி போட்ற குடும்பத்துல இருக்க பொண்ணுக்கு காதலே வரக்கூடாது, அப்படியே வந்துட்டாலும் அவங்களை ஏமாத்தியாவது சம்மதிக்க வச்சு, முடிஞ்ச வரைக்கும் அவங்க சம்மதிக்கலைனா கூட இந்த மாதிரி வெட்றேன், குத்தறேன்னு இறங்காத மாதிரியாவது செஞ்சுட்டுதான் கல்யாணம் பன்னனும். என்னை பொறுத்த வரைக்கும் திருட்டு கல்யாணம் டௌன் டௌன் தான்”

அதற்கு பின்னர் காதலிலும் திருவின் பார்வை வித்தியாசமாக இருப்பது தெரிந்தது. எனக்கு ஒவ்வோரு விஷயத்திலும் அவன் அணுகு முறையை தெரிந்து கொள்ளவும் அதை பார்த்து இரசிக்கவும் ஆவல் பிறந்தது. எனக்குள் ஏதோ மாறுவதை மெலிதாய் உணர்ந்தேன்.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

No comments:

Post a Comment