தனித்திரு- 3
முந்தைய பாகங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------
திரும்பி
வீட்டுக்கு நடந்து போகும் பொழுது போன வாரத்து குழப்பம் என்னை தொற்றிக்
கொண்டது. அவன் சட்டையை பிடித்து திட்ட வேண்டும் போல இருந்தது. ஆனால் அந்த
அளவுக்கு உரிமை இல்லை. அப்படி அவன் என்ன செய்து கொண்டு இருந்தான் என்று
கேள்வி வரும், நானே சொல்கிறேன்.
ஒரு பையன் அருகில் நின்று பேசிக்கொண்டு
இருந்தான். அது தவறு இல்லை. ஆனால் அவன் கையில் இருந்தது எனக்கு பிடிக்காத,
நான் மிகவும் வெறுக்கிற விசயம், சிகரெட். எனக்கு அந்த வார்த்தையே
பிடிக்காது. என் சித்தப்பா ஒருவர் இருக்கிறார், ரொம்ப நல்லவர், ஆனால் இந்த
பாழாய் போன புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பதால் நான் அவரிடம் சுத்தமாக
பேசுவதில்லை. ஏன் ஏன்றால் ஏன் அவ்வளவுதான் பேசுவேன். அக்கா கூட சொல்லி
பார்த்துவிட்டாள், என்னால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. சில நேரங்களில்
நான் குடிப் பழக்கத்தை கூட மன்னித்து விடுகிறேன். ஆனால் இந்த புகை, இந்த
வாசனை எனக்கு வாந்தியே வந்து விடும்.
என்னுடன் பழகும் யாருக்கும் இந்த
பழக்கம் இல்லை. இருப்பதாய் தெரிந்தால் சுத்தமாக அவனை என்னிடம் இருந்து
விலக்கிவிடுவேன். இது மிகவும் மோசமான பழக்கம். ஒருமுறை தொலைக்காட்சியில்
கேன்சரால் பாதிக்கப்பட்டவன் நுரையீரலை பார்த்தேன். என்னால் அன்று சாப்பிட
கூட முடியவில்லை. அப்படி அதில் என்னதான் இருக்கோ தெரியவில்லை.
நல்லவேளை,
நான் வீட்டிற்கு வந்தபொழுது அக்கா வீட்டில்தான் இருந்தாள், அவள் கையை
பிடித்துக் கொண்டு அறைக்குள்ளே அழைத்துப் போனேன். அவளுக்கு ஒன்றுமே
புரியவில்லை.
“என்னடி, என்ன ஆச்சு?”
“சுபா, அந்த திருவ பார்த்தேன்டி”
“எங்கே பார்த்த? இப்ப எங்கே போய்ட்டு வர்ர?”
“என் ஃபிரென்ட் நந்தினிய பார்க்க போனேன்”
“அவனை எங்கே பார்த்த?”
“அவ வீட்லர்ந்து வர்ற வழியில பார்த்தேன்”
“சரி, என்ன சொன்னான்?”
“அவன் என்னை பார்க்கவே இல்லை, நான்தான் அவனை பார்த்தேன்”
“அப்புறம் எதுக்கு இவ்வளவு பதட்டமா பேசுற?”
“அவன் என்ன பண்ணிகிட்டு இருந்தான் தெரியுமா?”
“என் எதாவது பொண்ணு கூட பேசிகிட்டு இருந்தானா?”
“ஏன் இப்படி யோசிக்கற சுபா? அவன் சிகரெட் பிடிச்சுட்டுருந்தான்”
“சரி, அவன் சிகரெட் பிடிச்சா உனக்கென்ன?”
“என்ன சுபா இப்படி கேட்கற? அவன் பண்றது தப்பில்லையா?”
“தப்புன்னே வச்சுப்போம், என்ன பண்ணலாம்னு சொல்ல வர்றே?”
“எப்படி இப்படி பட்டும் படாம பேசற? உனக்கு தொ¢ஞ்சவங்க கெட்டு போறத பார்த்துட்டு உன்னால சும்மாயிருக்க முடியுமா?”
“இல்லை வரலட்சுமி, எனக்கு புரியலை. அவனை நீ எங்கே வச்சுருக்கனு சொல்லு”
“சுபா, இப்ப நீ கேட்கறதுதான் எனக்கு பு¡¢யலை, புரியற மாதிரி கேளு”
“திரு உன் ஃபிரெண்டா? கிளாஸ்மெட்-ஆ?”
“இரண்டுக்கும் நடுவுலனு சொல்லலாம். இப்ப இந்த கேள்வி எதுக்காக?”
“இல்லைம்மா, அவனுக்காக நீ கோபப் படறேயேனு கேட்கறேன்”
‘என்ன
சுபா என்ன பத்தி உனக்கு தெரியாதா? எனக்கு பிடிக்காதவங்களா இருந்தா கூட
சிகரெட் பிடிச்சா போய் இந்த பழக்கத்தை விட்டுடுங்கனு சொல்லுவேன்”
“அது தெரியும், ஆனா இந்த திரு உன் நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை”
“அதனால என்ன? அறிவுரை சொல்ல கூடாதா?”
“சொல்லலாம். அதுலயும் ஒரு பிரச்சனை இருக்கு”
“என்ன பிரச்சனை?”
“நீ
அறிவுரை சொன்னா ஒன்னு அவன் உன்னை பார்த்து நீ யார் அதை சொல்றதுக்குனு
கேட்டு எதிரியாவான். இல்லை அதை சாக்கா எடுத்துகிட்டு உங்கிட்ட நண்பனாக
முயற்சி பன்னுவான். எப்படி வசதி?”
“இல்லை சுபா, அவன் என்னை எதிரியா
பார்க்கட்டும், நண்பனா பார்க்கட்டும். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. இது
தப்புனு தெரிஞ்சும், பின் விளைவுகளை பத்தி யோசிச்சு பயத்தின் காரணமா அறிவுரை
சொல்லாம இருக்கறது என்னை ரொம்ப காயப்படுத்தும்”
“சரி அவனை என்னன்னு திருந்த சொல்ல போற?
“அதான் எனக்கு புரியலை. அதைத்தான் நான் உங்கிட்ட கேட்கறேன். சொல்லு சுபா என்ன பன்னட்டும்?”
“என்னை
கேட்கறீயா? இங்க பாரும்மா, என் ஃப்ரென்ட்ஸ்-லயே 2 பேருக்கு இந்த மாதிரி
பழக்கம்லாம் இருக்கு. ஆனா அதிகமா அதை பத்தி பேசுனா நட்பு கெட்டுடும்னு
பேசாம இருக்கேன்”
“எப்படி சுபா? அந்த 2 பேர் தற்கொலைக்கு முயற்சி பண்ணா,
காப்பாத்த முயற்சி பண்ணாம சும்மா பார்த்துட்டு இருக்க முடியுமா உன்னால?
இந்த பழக்கமும் அது மாதிரிதானே, எப்படி சும்மா இருக்க முடியுது உன்னால?”
“குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லைனு கேள்விப்பட்டது இல்லையா?”
“சுபா, உனக்கு குறைகளுக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் வித்தியாசம் தெரியலை.
நாளைக்கு இந்த பழக்கத்துனால அவங்க உடல்நலம் கெட்டு போச்சுனா கண்டிப்பா உன்
மனசாட்சி உன்னை உறுத்தாதா?”
“சரி, நீ
சொல்றத நான் ஒத்துக்கறேன். அந்த 2 பேருக்கும் நான் அறிவுரை சொல்றேன்.
எனக்கு அந்த உரிமை இருக்கிறதால என்னால சொல்ல முடியும். உனக்கு திருகிட்ட
அது மாதிரி எதுவுமே இல்லையே?”
“அதைத்தான் யோசிச்சுட்டுருக்கேன். ஆனா
நல்ல பையன்க்கா, அமைதியா வந்துட்டு போவான். ஒருவேளை மத்த பசங்களோட சகஜமா
பழகியிருந்தா இது மாதிரி நடந்துருக்காதுன்னு நினைக்கறேன். தனியாவே
இருக்கறதாலதான் இப்படி தப்பான பழக்கம்லாம் பழகியிருக்கான். எடுத்து சொன்னா
புரிஞ்சுப்பான்னு நினைக்கறேன்”
“எப்படிம்மா நீயா போய் அதை பத்தி பேசுனா நல்லாயிருக்குமா? அந்த அளவுக்கு உரிமையா சொல்லனும்னா கொஞ்சமாவது பழகனுமில்லை?”
“அதைத்தான் யோசிச்சுட்டு இருக்கேன்”
“ஒருவேளை உங்க குருப்-ல ஒருத்தனா இருக்கறவன் இது மாதிரி இருந்தா, நீங்க எல்லாருமா
சேர்ந்து அவனை ஒதுக்கி வச்சு அவன் தப்பை அவனுக்கு உணர்த்தலாம். இவன்
ஏற்கனவே தனியா இருக்கறவன். போய் பேசுனா உன்னை அலட்சிய படுத்திட மாட்டானா?”
“அவன் என்னை அலட்சிய படுத்துனா மட்டுமில்லை, அவமானபடுத்துனா கூட பரவாயில்லை. அந்த பழக்கத்த என்னால மாத்த முடிஞ்சா சந்தோசம்தான்”
“உன்னை
நினைச்சா எனக்கு ஒரு பக்கம் பெருமையா இருக்கு, ஆனா கேட்கறேன்னு தப்பா
நினைச்சுக்காத, உன் கூட படிக்கறவங்கள்ள இவன் மட்டும்தான் இப்படி இருக்கானா?ஏன் தனிப்பட்ட அக்கறை?”
“என்னை சந்தேகபடறியா சுபா?”
“இல்லைம்மா, இந்த கேள்விய உனக்கு நீயே கேட்டு பார்த்துக்கோ”
“எளிமையா
சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு ஒரு நல்ல பையன், அமைதியான பையன் கெட்ட
பழக்கத்துக்கு அடிமையாக போறத தடுக்க நினைக்கறேன். அவ்வளவுதான்”
“காரணத்த ஒத்துக்கறேன். உன் திட்டத்த எப்படி செயல்படுத்த போற?”
“என்ன பெரிய திட்டம்? நேரடியா பேசி பார்க்க வேண்டியதுதான்”
“அவன் புரிஞ்சுக்கலைனா?”
“அதை முதல் தடவை பேசிப் பார்த்ததுக்கு அப்புறம் முடிவு பன்னிக்கலாம்”
“எப்ப பேசப் போற?”
“அதை இன்னும் முடிவு பன்னலை. ஆனா அடுத்த தடவை அவனை சிகரெட்டும் கையுமா பார்த்தா உடனே பேசிடுவேன்”
“உன் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்”
“மிக்க நன்றி”
அக்காவிடம்
நன்றாக பேசினேனே ஒழிய என்னால் அவ்வளவு சுலபமாக திருவை நெருங்க
முடியவில்லை. காரணம் கல்லூரியில் எப்போதும் சுற்றிலும் யாரேனும் இருந்து
கொண்டே இருந்தனர்.எனக்கு இது கொஞ்சம் புதிதாக இருந்தது. சந்தர்ப்பத்திற்காக
காத்துக் கொண்டு இருந்தேன்.
மூன்று நாட்கள் ஒடியது. எங்கோ படித்த
ஞாபகம் ‘சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பவனை விட, அதை அமைத்து கொள்பவனே
அறிவாளி' என்று. என் அறிவை உபயோகப்படுத்த முயற்சித்தேன்.
யோசித்து
பார்த்ததில் இது மிகவும் சுலபமான விஷயம். கல்லூரி பேருந்தில் இருந்து
எங்கள் நிறுத்ததில் இருவரும் ஒன்றாகத்தான் இறங்குகிறோம். உடன்
இறங்குபவர்கள் ஒவ்வொருவராக ஒவ்வொரு திருப்பத்தில் பிரிந்து விடுவார்கள்.
ஆனால் என்ன? நானாக பேச்சை துவக்க வேண்டும்.
எனக்கு தயக்கம் இல்லை. பயம்.
ஏதாவது சத்தம் போட்டு பேசிவிடுவானோ என்று. எப்படி பேசலாம் என்று என்
மனதுக்குள் திட்டமிட துவங்கினேன். எடுத்தவுடன் அறிவுரைக் கூறினால் எனக்கே
பிடிக்காது. அதனால் முதலில் ஏதாவது பேச வேண்டும். என்ன பேசுவது?
கடைசியாக
எப்படி பேசிக்கொண்டோம். அது போல் மறுபடி யாராவது கேலி செய்தால்
மட்டும்தான் வந்து பேசுவானோ? எது எப்படி இருந்தாலும் இன்று நாமாக பேச்சை
துவக்க வேண்டும். என்ன செய்து விடுவான்? அவனும் என்னுடன் படிக்கும் சக
மாணவர்களில் ஒருவன் தானே? நான் என்ன ஏதாவது தவறாகவா பேச போகிறேன்,
எனக்கென்ன பயம்? ஒருமுறை சொல்லி பார்ப்போம். அதன்பின் அவன் விருப்பம்.
பேருந்து
நின்றதும் வழக்கம்போல் முதலில் பெண்கள்தான் இறங்கினோம். நடக்க ஆரம்பித்து
கொஞ்ச நேரம் கழித்து திரும்பி பார்த்தேன். இன்றுதான் முதன் முதலாக நான்
அவனைக் கவனிப்பது.
இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு
மெதுவாக தலை குனிந்தவாறு வந்து கொண்டிருந்தான். என் மனது என்னை தயாராக
இருக்க சொல்லி ஆனையிட்டது. நான் மெதுவாக என் வேகத்தை குறைத்து நடக்க
துவங்கினேன். கால்கள் மெதுவாக தடுமாறுவதை உணர்ந்தேன்
அப்படியே நின்று
விட்டேன். திரு என்னை தாண்டும் பொழுது மெதுவாக என்னிடம் புன்னகைத்து விட்டு
நிற்காமல் முன்னேறி சென்று கொண்டிருந்தான். எனக்கு ஏதும் பேச தோணவில்லை.
அப்படியே நின்று கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் சென்றவன் எதெச்சையாக
திரும்பி பார்த்தான். நான் அவனையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன்
முகம் கொஞ்சம் மாறியது. அதற்கு என்ன அர்த்தம் என்று என்னால் உணர
முடியவில்லை. என்னை நோக்கி நடந்து வந்தான்.
“வரலட்சுமி, என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?”
“இல்லை, அப்படிலாம் ஏதுமில்லை”
“ஏன் நின்னுட்டிங்க? ஒரு மாதிரி இருக்கிங்க? யாருக்காகவது காத்திருக்கிங்களா? நான் கிளம்பட்டுமா?”
“இல்லை உங்கிட்டதான் பேசனும்”
அதை சொல்லுவதற்குள் எனக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது. அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.
“சரி வாங்க, நடந்துகிட்டே பேசலாம், நின்னு பேச வேண்டாம்”
ஏதும் பேசாமல் கூட நடந்தேன்.
“சொல்லுங்க, ஏதோ பேசனும்னு சொன்னிங்களே”
“இல்லை எப்படி சொல்றதுனு தெரியலை, நமக்குள்ள அவ்வளவு பழக்கம் இல்லை”
“பழக்கம் இல்லைனா என்ன? 2 பேர்க்கும் அறிமுகம் இருக்கே, சொல்லுங்க நான் எதையும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்”
“அன்னைக்கு பார்த்தேன், கையில சிகரெட்ட வச்சுகிட்டு நின்னுகிட்டு இருந்திங்க”
“எப்போ? போன ஞாயிறா?”
“ஆமா, அந்த பக்கம் என் ஃபிரென்ட் வீட்டுக்கு வந்திருந்தப்ப பார்த்தேன்”
“சரி, சொல்லுங்க”
“அது கெட்ட பழக்கம் திரு, உங்களுக்கு தெரியாம இருக்காது, கொஞ்சம் கொஞ்சமா குறைச்சு அதை விட்றலாமே?”
“கொஞ்சம்
கொஞ்சமா இல்லைங்க, மொத்தமாவே விட்டு ரொம்ப நாளாச்சு, அன்னைக்கு என்
ஃபிரென்ட்டும் விடப்போறதாவும் கடைசியா என் கூட பிடிக்கனும்னு ரொம்ப
வற்புறுத்தனதால ஒன்னே ஒன்னு பிடிச்சேன். இனிமேல் எப்பவும் தொடமாட்டேன்”
“நல்லது, நான் சொல்றத எப்படி எடுத்துப்பிங்களோனு நினைச்சு பயந்துகிட்டே இருந்தேன்”
“சேச்சே,
நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லனும், நான் கெட்டு போகக் கூடாதுனு
சொல்லியிருக்கிங்க. உங்க மன நிம்மதிக்காக சொல்றேன். நான் இந்த
பழக்கத்தைலாம் விட்டு ரொம்ப நாள் ஆச்சு”
“ரொம்ப நல்லது, இப்படியே இருங்க”
“நீங்களும் என்கிட்ட ஏதாவது குறை தெரிஞ்சா தாராளமா வந்து சொல்லுங்க. பயப்படவோ, தயங்கவோ
வேண்டாம். என் தெரு வந்துடுச்சு, வரட்டுமா? வரேன்”
அவன் சென்ற பின்
நடக்கும் போது என் நடையில் ஒரு உற்சாகம் இருந்தது. எவ்வளவு மிருதுவாக
பேசுகிறான். வாங்க போங்க என்றுதான் அழைக்கிறான். உரிமையோடு குறைகளை எடுத்து
சொல்ல சொல்கிறான்.
வேறு எதை பற்றியுமே பேசவில்லை. என்னை பற்றி ஏதுமே
கேட்கவில்லை. எந்த ஃபிரென்ட்-ஐ பார்க்க அங்கு வந்தேன் என்று
விசாரிக்கவில்லை. உனக்கு ஏன் அவ்வளவு கரிசனம் என்று எரிஞ்சு விழவில்லை.
எல்லாவற்றுக்கும்
மேலாக தான் அந்த மாதிரி பழக்கத்தையெல்லாம் எப்போதோ விட்டு விட்டதாக நான்
கேட்காமலே சொன்னான். இடம் வந்ததும் சொல்லிவிட்டு உடனே சென்று விட்டான். உண்மையிலேயே இவன் மற்றவர்களிடம் இருந்து தனித்துதான் இருக்கிறான்.
வீட்டில் தேநீர் குடிக்கும் பொழுது கால்களை ஆட்டிக்கொண்டே குடித்தேன். அம்மா அதைக் கவனித்து விட்டு
“ஏன்டி எத்தனை தடவை சொல்றது கால் ஆட்றது கெட்ட பழக்கம். அதுவும் பொண்ணு இப்படி ஆட்ட கூடாதுனு”
“சரிம்மா, இனிமேல் ஆட்டலை, மன்னிச்சுக்கோ”
எப்போதும்
பதிலுக்கு பதில் பேசி விளையாடுபவள் உடனே மாற்றிக் கொளவதாய் சொன்னதும்
அம்மா திரும்பி என்னைப் பார்த்தாள். மெதுவாக புன்னகைத்தேன். அவளும் சிரித்த
முகமாக என்னருகே வந்தாள்
“என்னடா குட்டி, எதோ ரொம்ப சந்தோசமா இருக்கிற மாதிரி தெரியுது”
“அப்படியா தெரியுது, எனக்கு எதுவும் தெரியலையே”
அம்மா கன்னத்தை கிள்ளியவாறே
“போய் கண்ணாடிய பாரு, உதடு மட்டும் இல்லை, கண்ணும் சிவ்க்குது”
அம்மா
சமையலறையில் மறைந்ததும் மெதுவாக கண்ணாடியை பார்த்தேன். ஏதோ சந்தோஷக் களை தெரிந்தது. அறைக்குள் வந்து நடந்து கொண்டதை நினைத்து சிரித்துக் கொண்டேன்.
அக்காவும்
வரும்பொழுது சிரித்துக் கொண்டுதான் வந்தாள். என்னிடம் என்ன என்று
விசாரித்ததும் நான் நடந்ததை விவரித்தேன். அவள் உடனே பாராட்டினாள்.
“எய் சாதிச்சுட்ட?”
“இதுல என்னோட பங்கு எதுவுமே இல்லைக்கா, அவன் ஏற்கனவே அந்த பழக்கத்தை விட்டுட்டான்”
“நான்
அந்த விஷயத்தை சொல்லலை. நினைச்ச மாதிரியே அவங்கிட்ட அதை பத்தி பேசிட்டியே?
முடிவு என்னவா வேணா இருக்கட்டும். உன் முயற்சிக்கு பாராட்ட வேண்டாமா?”
“கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே னு சொல்றியா?”
“ஆமா, இதனால எந்த இலாபமோ, நஷ்டமோ கிடையாதே, மனதிருப்திக்காக தானே செய்யறோம்”
“அது சரி, உங்கிட்டயும் எதோ சாதிச்ச மகிழ்ச்சி தெரியுதே, என்னாச்சு?”
“நானும்
இன்னைக்கு என் ஃப்ரென்ட்ஷ்-கிட்ட அந்த பழக்கத்தை விடலைன்னா நான் பேசவே
மாட்டேனு சொல்லிட்டு தனியா போய் உட்கார்ந்துகிட்டேன். மத்தவங்கலாம்
சமாதானபடுத்த வந்தப்ப அவங்ககிட்ட உங்களை மாதிரி என்னால கண்டுக்காம இருக்க
முடியாது-னு சொன்னதும் அவங்களும் எங்கூடசேர்ந்து அவங்களுக்கு அறிவுரை
சொல்லி, ஒருவழியா அந்த 2 பசங்களும் கொஞ்சம் கொஞ்சம விட்டுடறதா
சொல்லிட்டாங்க”
“எய் இன்னைக்கு 2 பேரும் நல்ல காரியம் பன்னியிருக்கோம்”
“அப்படி என்ன பன்னிங்க” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்த அம்மா இருவருக்கும் சேர்ந்தாற் போல் மிளகாயால் திருஷ்டி சுத்தினார்கள்.
“எதுக்கும்மா திருஷ்டி சுத்துற?”
“என்னமோ, என் கண்ணுக்கு 2 பேரும் இன்னைக்கு ரொம்ப இலட்சண்மா தெரியறிங்க, அதான்”
அன்று இரவு வழக்கம் போல் அக்கா கையை பிடித்தவண்ணம் சிரித்தவாறே தூங்கிப் போனேன்.
----------------------------------------------------------------------------தொடரும்-------------
அடுத்த பாகங்கள்
Comments
Post a Comment