எதற்காக வாசிப்பு?
உலக புத்தகத் தினத்தன்று வாசிப்பு குறித்து KSR கலைக் கல்லூரியில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். உரையாட துவங்கியதும் எழுந்து முதலில் அரங்கினை கவனித்தேன். எப்போதும் போல் முதல் இரு வரிசை நிரப்பப்பட்டிருக்கவில்லை. இங்கு மட்டுமல்ல, வகுப்பறையில் துவங்கி எந்த இடமாக இருந்தாலும் முதல் வரிசையில் அமர அனைவரும் தயங்குகிறோம். உங்களை வந்து அமருங்கள் என்று நான் அழைக்கப் போவதில்லை. ஆனால் ஏன் இங்கு அமர தயங்குகிறிர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறேன். யாரேனும் பதில் சொல்லுங்கள். ஒரு பெண் எழுந்து "முன்வரிசைல இருக்கவங்களைப் பாத்து ஏதாவது கேள்வி கேட்டுருவாங்கன்னுதான் சார்" கைத்தட்டினேன். என்னுடன் மற்றவர்களும் தட்டினார்கள். பதில் தெரியாத கேள்விகளை எதிர்கொண்டு விடப்போகிறோம் என்று கல்லூரியிலும் பயம். இது உங்களுக்குச் சரியாகப் படுகிறதா? உங்களை அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். அது அவரவர் ஆர்வம் சம்பந்தப்பட்டது. ஆனால் கேள்விகளைத் தவிர்க்க ஓடத் துவங்கினால் எது வரை ஓடுவீர்கள்? இறப்பு வரை உங்களது கருத்துக்களைக் கேட்கவாவது வினாக்கள் துரத்திக்கொண்டுதான் இருக்கும். அவனுக்கு, அவளுக்கு எதுவும் தெரி...