தனித்திரு - 8
முந்தைய பாகங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------
அதன் பின்னர் திருவுடன்
எப்போது பேசினாலும் எதாவது ஒரு விஷயத்தை பற்றி புதிதாய் பேசி, அவன் அதை
எப்படி பார்க்கிறான் என்பதை பார்க்க துவங்கினேன். நாட்கள் நகர்ந்தது. ஒரு
மாதம் கழித்து என் அத்தை மகளின் திருமணத்திற்கு செல்ல பேருந்து நிலையத்தில்
என் குடும்பத்துடன் காத்திருந்தேன். ஏதெச்சையாக திருவுடன் ஒரு பெண்
பேசிக்கொண்டு வருவதைப் பார்த்தேன். ஒரு நிமிடம் உள்ளே ஏதோ எழுந்து
அணைந்தது.
நான் பார்த்ததை கவனித்து சுபாவும் அவர்களை பார்த்தாள்.
இருவரும் எங்களை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தனர். திரு எங்களை
பார்த்ததும் புன்னகைத்தான். அதில் எந்த களங்கமும் இல்லை. என் அப்பாவிற்கு
அவனை பார்த்ததும் மிகவும் சந்தோஷம், உற்சாகமாக அவனுடன் கைகுலுக்கி நலம்
விசாரித்து கொண்டிருந்தார்.
திரு எங்களுக்கு அவனுடன் வந்திருந்த பெண்ணை
அறிமுகபடுத்தினான். பெயர் தீபிகாவாம். அவனுடன் பள்ளியில் படித்தவளாம்.
எனக்கு அவளை பார்க்க எரிச்சலாய் இருந்தது. காரணம் அவள் என்னை விட அழகாய்
இருந்தாள். நல்ல நிறம் வேறு. அந்த நேரத்தில் ஒரே ஆறுதல் திரு என்னை
அறிமுகபடுத்திய விதம்தான்.
“நான் அடிக்கடி சொல்லுவனே வரலட்சுமி இவங்கதான்”
திரு
என்னை பற்றி அடிக்கடி பேசுவதை நினைத்து சந்தோஷ படுவதா, இல்லை இவளிடம்
அடிக்கடி பேசுகிறானே என்று பொறாமைபடுவதா என்று தெரியாமல் தவித்தேன்.
“தீபிகாவிற்கு ஊருக்கு செல்வதற்கு நாங்கள் துணையாய் இருப்பது நல்லதாய்
போயிற்று” என்று திரு சொன்னதும் அவளும் சேலம் வரப்போகிறாள் என தெரிந்ததும்
என் மனம் ஏதேதோ சிந்திக்க துவங்கியது.
“இந்த சந்தர்ப்பத்தை
நமக்கேற்றார்போல் உபயோகபடுத்தி கொள்ள வேண்டும். நமக்கு தெரியாத திருவை
பற்றிய பல விஷயங்கள் இவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
வாய்ப்பென்ன
வாய்ப்பு? அதுதான் அடிக்கடி பேசுவார்கள் என தெரிந்து விட்டதே, கட்டாயம்
தெரிந்துருக்கும். நாம் எதாவது பேச்சு குடுத்து விஷயத்தை கறக்க முடியுமா என
பார்க்கலாம்”
திரு
கிளம்பிய பின்னர் நானாக தீபிகாவிடம் போய் வலிய பேசினேன். முதலில் ஏதோ
தயங்கியவள் பின்பு அவளும் என்னைப் போல் என்னை பற்றிய கேள்விகளை கேட்டு
தெரிந்து கொண்டாள். பேருந்தில் அவளும் நானும் மட்டும் தனியாய் அமர வாய்ப்பு
கிடைத்தது. அருகில் அமர்ந்து முதலில் மெதுவாக அவர்கள் படித்த பள்ளியை பற்றி
பேச்சை துவக்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக சரியான கேள்விகளை உபயோகித்ததில்
நான் சந்தேகப்பட்ட மாதிரியே, நான் எதிர்பாராத விதமாக பல உண்மைகள்
வெளிவந்தன.
திருவும் தீபிகாவும் படித்தது ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில்.
ஆனால் நண்பர்கள் என்று சொல்ல முடியாது. அவ்வபோது பேசிக் கொள்வார்கள்
அவ்வளவுதான். அந்த பள்ளியில் இருவருமே பிரபலமானவர்கள். எப்படி எனில்
அவர்கள் படித்த பள்ளியில் கூடைப்பந்து அணியில் super senier பிரிவின்
நம்பிக்கை நட்சத்திரம் திருமுருகன்தான். அதிகம் வகுப்பிற்கு போகமாட்டான்.
எப்படியும் வாரத்திற்கு 4 நாட்கள் மைதானத்தில்தான் இருப்பான். நண்பர்கள்
அதிகம். சுமாரான படிப்பு, அனைத்து ஆசிரியர்களிடமும் நல்ல பெயர், மற்ற
மாணவர்களிடையே பயம் என பள்ளியின் நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்தான்.
திருவின்
அடையாளம் விளையாட்டு என்றால் தீபிகாவின் அடையாளம் படிப்பு அதுவுமில்லாமல்
அழகு. எப்போதும் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண், யாருக்கு எந்த
பாடத்தில் சந்தேகம் என்றாலும் தீபிகாவை கேள் என்பார்கள். ஆனால் குணமும்
தங்கம். ஒவ்வொருவரும் அவரவர்கள் பாதையில் தெளிவாக போய் கொண்டிருந்தார்கள்.
காதல்
என்றால் என்ன? எப்போது வர வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி தராமல் வெறுமனே
காதலிக்க வேண்டும் என்பதை மட்டும் சொல்லித்தரும் திரைப்படங்கள் திருவின்
மனதை குழப்ப துவங்கியது. அதுவுமில்லாமல் தன்னை விட வயதில் பெரியவர்களுடனான
சகவாசம் அவனுக்கு வேறு சில பழக்கங்களை கற்றுக் குடுத்தன. கொஞ்சம் கொஞ்சமாக
திரு அவனே அவனை வியந்து பார்க்க துவங்கினான்.
மற்ற எல்லோரையும் விட நானே
சிறந்தவன் என்ற குணம் அவனுள் தோன்றியது. நான் என்ற அகந்தை வேர் விட
துவங்கியது. சுற்றிலும் பார்க்கிற விஷயங்களில் இருந்து தவறானதை மற்றும்
கற்றுக் கொண்டான். ஒரு கட்டத்தில் யாரையாவது காதலித்தால் தான் தன் பெருமை
இன்னும் உயரும் என அவனே முடிவு செய்து, யாரை தேர்ந்தெடுக்கலாம் என யோசித்த
போது தீபிகா சரியானவளாக இருப்பாள் என முடிவு செய்து கொண்டான்.
காதலிப்பதாக
நினைக்கும் அனைவரும் செய்யும் தவறைதான் திருவும் செய்தான். அதுதான் காதலை
உணர்த்தாமல், காதலை வெளிப்படுத்தாமல் காதலை தெரிவிப்பது, காதலிக்க சொல்லி
கட்டாயபடுத்துவது. திருவும் ஒருநாள் தீபிகாவிடம் தனியாக பேச வேண்டும் என
அழைத்தான். ஏதோ சந்தேகம் கேட்பான் என நினைத்து போன தீபிகாவிற்கு கையில்
ரோஜாவை நீட்டி காதலிக்கிறேன் என்று சொன்னவனிடம் என்ன பதில் சொல்லுவதென்றே தெரியவில்லை.
எப்படி தெளிவாக மறுக்க வேண்டும் என்பது கூட அவளுக்கு
சொல்லித்தர பட்டிருக்கவில்லை. ‘ஒரு நாள் முழுக்க யோசித்து நாளைக்கு முடிவை
சொன்னால் போதும்' என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
தீபிகாவிற்கு
அழுகையாய் வந்தது. அவன் தோழிகள் எதற்கு அழுகிறாய் என்று கேட்டதும் அழுகை
அதிகமானது. அவளை சமாதானபடுத்தி காரணத்தை கேட்டறிந்த பின்னர்
ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு யோசனை தெரிவித்தனர்.
‘இல்லை, எனக்கு உன்னை பிடிக்கலைனு சொல்லிடு'
‘காலேஜ் போனப்புறம்தான் யோசிக்கனும்னு சொல்லு'
‘இன்னோரு தடவை இதை பத்தி பேசுனா செருப்பு பிஞ்சுடும்னு சொல்லு'
‘எங்கப்பாகிட்ட சொல்லிடுவேன்னு சொல்லு'
'ஹெட் மாஸ்டர் கிட்ட சொல்லிடுவேன்னு சொல்லு'
யாருமே
அவனுக்கு இப்போது காதலிப்பது தவறு என சொல்லு என சொல்லித் தரவில்லை.
குழப்பத்தில் தீபிகாவிற்கு முடிவெடுக்க தெரியவில்லை. அவளுக்கு கொஞ்சம்
கொஞ்சமாக திருவை பார்க்க பயமாய் இருந்தது. உடல் நடுங்க துவங்கியது. கண்கள்
சிவந்தே இருந்தன. வகுப்பிற்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தீபிகாவை
பார்த்துதான் பாடம் நடத்துவார்கள். அப்படி வந்தவர்கள் ஒவ்வொருவரும்
தீபிகாவை கவனித்து அவள் உடல் நலத்தை விசாரிக்க துவங்கினர். ஒருவேளை அன்று
திரு வகுப்பிற்குள் வந்திருந்தால் கூட, தீபிகாவிற்கு இதில் விருப்பமில்லை
என புரிந்து கொண்டு இருந்திருப்பான்.
பள்ளி மைதானத்தில் விளையாண்டு
கொண்டிருந்தவனுக்கு, தீபிகாவின் நிலைமை புரிந்திருக்க வாய்ப்பில்லை. மாலை
நெருங்க நெருங்க தீபிகாவிற்கு பயம் அதிகரித்தது. மதியம்
சாப்பிட்டிருந்தாலும் தலை சுற்ற ஆரம்பித்து வகுப்பிலேயே மயங்கி விட்டாள்.
உடனே
ஆசிரியைகளுக்கான அறைக்கு தூக்கி சென்று முகத்தில் தண்ணிர் தெளித்து
எழுப்பினர். தீபிகாவின் தூரத்து உறவுக்கார பெண்மணி அங்குதான் ஆசிரியையாக
இருந்தார்கள். என்ன நடந்தது என விசாரிக்கும் பொழுது தீபிகா ஏதும்
சொல்லாததால் அவள் தோழிகளை தனியாக விசாரிக்கும் பொழுது உண்மை வெளிப்பட்டு
விட்டது.
நடந்த தவறுக்கு திருவின் அறியாமையும் தீபிகாவின் பயந்த
சுபாவமும் காரணம். ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. தீபிகாவை ஈவ் டீசிங்க்
செய்தது போல் திரு மேல் குற்றம் சுமத்தபட்டது. பிரச்சனை தலைமை ஆசிரியர்
அலுவலகத்திற்கு சென்றது. திரு வரவழைக்கப் பட்டான். தோழிகள் உளறியது ஏதும் தெரியாமல் தீபிகாவும் வரவழைக்கப் பட்டாள்.
ஏற்கனவே
திருவை பிடிக்காத
தீபிகாவின் உறவுக்கார ஆசிரியை அவன் மேல் சரமாரியாக குற்றம் சுமத்த
துவங்கினாள். திருவை பிடிக்காமல் போனதுக்கு காரணம் அந்த ஆசிரியையிடம் திரு
மரியாதை இல்லாமல் சரிக்கு சரியாக ஒருமுறை பேசியது தான் காரணம். தக்க
சமயத்துக்காக காத்திருந்தவர்களிடம் திரு வசமாக சிக்கினான். மற்ற
மாணவர்களைஅடிப்பது, பெண்களிடம் வம்பிழுப்பது, ஆசிரியைகளை எதிர்த்து பேசுவது
என எப்போதோ நடந்த விஷயங்களும் பட்டியலில் சேர்க்கப் பட்டன.
யாருடைய
கைகளினால் பல முறை கோப்பைகளும் விருதுகளும் வாங்கியிருந்தானோ அந்த தலைமை
ஆசிரியர் முன்பு திரு தலை குனிந்து நின்றான். அவனுடைய வகுப்பாசிரியர்
நடந்ததை நம்ப முடியாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். என்ன
நடந்திருக்கும் என ஒருவாறு யூகித்த தீபிகாவிற்கு என்ன பேசுவது என்று
தெரியவில்லை.
மற்றவர்கள்
பேசாமல் இருப்பதை பற்றி கவலைப்படாமல் அந்த ஆசிரியை நேரடியாக திருவை
திட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியர் தலையிட்டு,
தீபிகாவிடம் என்ன நடந்தது என்ன விசாரித்தார். அவள் ஒன்றும் நடக்கவில்லை என
திட்டவட்டமாக மறுத்தாள். ஆனால் அந்த ஆசிரியை அவள் தோழிகளை வரவழைத்து
மிரட்டி உண்மையை சொல்ல வைத்தார்.
மற்ற அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு
தலைமை ஆசிரியர் திருவுக்கும் தீபிகாவிற்கும் தனித்தனியாகவும் ஒன்றாகவும்
பிரச்சனையை பற்றி பேசி, படிப்பதன் முக்கியத்துவம் பற்றி கூறி, சில
உதாரணங்களை சொல்லி திருவை எச்சரித்து இந்த பிரச்சனையை இதோடு விட்டுவிட
வேண்டும் என கைப்பட எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பினார்.
திருவின்
வாழ்வில் இதுதான் முதல் அவமானம். உயரத்தில் இருப்பவர்கள் விழுந்தாள் அடி
பலமாய் விழும். மிகவும் கர்வமாய் இருப்பவர்கள் அவமானத்தை தாங்க
மாட்டார்கள். திருவிடம் இருந்த அகந்தை அந்த நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டது.
யாரும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அவனால் யாரையும் நிமிர்ந்து பார்க்க
முடியவில்லை. அழுகையும் வரவில்லை.
அன்று பள்ளியை விட்டு போன
திரு நேராக
வீட்டுக்கு போகவில்லை என அவன் பெற்றோர்கள் அவனை தேடி வந்த போதுதான்
தெரிந்தது. அடுத்து வழக்கம் போல நடக்கும் எல்லா சம்பிரதாயங்களும் நடந்தது.
காவல் துறைக்கு புகார் தரப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ‘திரு
அங்கே வந்தானா?' ஊன்று விசாரிக்கப் பட்டது.
திருவின் தாய் கண்கள்
கண்ணிரால் நிரம்பின, திருவின் தங்கை பக்கத்து வீட்டில் ஒப்படைக்க பட்டாள்.
பெற்றோர் இருவரும் ஒவ்வொரு இடமாக அலைய துவங்கினர். அந்த வீட்டில் அமைதி
தொலைந்து போனது. அடுத்த நாள் பள்ளியில் விஷயம் தெரிய வந்தபோது ஐவ்வொருவரும்
ஐவ்வொரு விதமாக பேச துவங்கினர். எல்லோருமே திருவை திட்டிய ஆசிரியை மீதுதான்
பழி போட்டார்கள். அன்று மாலை திரு இருக்குமிடம் தெரிய வந்தது.
பக்கத்து
மாவட்டத்தில் பேருந்து நிலையத்தில் படுத்து இருந்தவனை அங்கு டீக்கடை
போட்டிருந்தவர்கள் விசாரித்து காவல் துறையினர் உதவியுடன் அவன் பெற்றோருக்கு
தகவல் தெரிவித்தனர். திரும்ப அவனை அழைத்து வந்த பின் யாரும் அவனை ஏன் அங்கு
போனான் என்று விசாரிக்கவில்லை. வீட்டில் அவன் தாயார் மட்டும் அழுகையை
அடக்க முடியாமல் கதறினார். திரு பல தடவை சத்தியம் செய்தான், இனி அவர்களை
விட்டு பிரியமாட்டான் என்று.
அவன் தங்கை தனியாக சத்தியம் வாங்கினாள்
‘அடுத்த முறை செல்வதாக இருந்தால் தன்னையும் அழைத்து செல்ல வேண்டும்' என்று.
அவன் தந்தை ஏற்கனவே பள்ளியில் நடந்த அனைத்து விஷயங்களையும் விசாரித்து
தெரிந்து வைத்திருந்தார். அவனை தனியாக அழைத்து ‘இதெல்லாம் வழக்கமாக
எல்லோருடைய வாழ்விலும் நடக்கக் கூடிய விஷயம் தான், இதற்காக எதற்கு எங்களை
விட்டு ஒட வேண்டும்?' என கேட்டார்.
மற்றவர்கள் முகத்தில் விழிப்பதற்கு
அவமானமாய் இருப்பதாய் சொன்னான். அவன் தந்தை ‘மிகவும் அவமானமாய் இருந்தால்
வேறு பள்ளியில் சேர்க்கவா?' ஊன கேட்டார். அவனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
அவர்
சொன்னார். “நான் சொல்றதை கேளு, இந்த பள்ளிக் கூடத்துல இன்னும் ஒரு
வருசத்துக்குதான் இருக்க போற, யார் கூடவும் பேசாம விளையாட்டிலயோ இல்லைனா
படிப்பிலயோ, உனக்கு பிடிச்ச விஷயத்துல கவனம் செலுத்திட்டு இரு. இத்தனை நாள்
கூட்டமாவே இருந்துட்ட, தனியா இருக்க பழகிக்கோ, உன்னை யார் கூடவும் சுத்தமா
பேசக் கூடாதுனு சொல்லலை. உங்கிட்ட இருக்க குறையே உன்னோட எல்லா
எண்ணங்களையும் எல்லார்கிட்டயும் சொல்லியே ஆகனும்னு நினைக்கறதுதான். அதை
குறைச்சுக்க, குறைவா பேச ஆரம்பிச்சாலே போதும், பல நல்ல பழக்கங்கள் தானா
வந்து சேரும்.”
அவனுக்கு இப்போது அப்பாதான் நண்பனாக தொ¢ந்தார். அவர்
சொன்னதை மனதார ஒத்துக்கொண்டான். அடுத்த நாள் பள்ளிக்கு சென்றவனிடம் அவன்
வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கேள்வி கேட்டனர். எல்லோரிடமும்
‘அப்புறம் சொல்றேன்' என்று சொல்லி சமாளித்தான்.
அந்த ஆசிரியை அவனை
அழைத்து மன்னிப்பு கேட்டார். அவன் பணிவாக பேசி விட்டு வந்தான். வகுப்பு
வேளையில் வகுப்பிலேயே இருந்தான். கூடைப்பந்து பயிற்சிக்கு யாருமில்லாத
விடியற்காலையை பயன்படுத்திக் கொண்டான்.
மாலை வேளையில் நண்பர்களுடன் ஊர்
சுற்றுபவன் அதை தவிர்ப்பதற்காக அவர்கள் வராத இடமான நூலகத்தை
தேர்ந்தெடுத்தான். தினம் தினம் செல்ல ஆரம்பித்தான். ஏதேனும் படித்துக்
கொண்டே இருக்க துவங்கினான். அவனுக்குள் சுய சிந்தனை அதிகமானது. ஒவ்வொரு
விஷயத்தையும் ஏன் எதற்கு என யோசிக்க துவங்கினான்.
தீபிகாவிற்கு
அவனுடன்
பேச வேண்டும் போல இருந்தது. அவனுடைய இந்த மாற்றம், பணிவு பலருக்கு
இரக்கத்தை தந்தது. அதிலும் தீபிகாவிற்கு ‘தன்னால்தான் இப்படி ஆகிவிட்டான்'
என்ற குற்ற உணர்ச்சி வேறு. திரு பெற்று கொண்டிருந்த புது விதமான சிந்தனைகள்
ஒரு இடத்தில் உபயோகப்பட்டது. அவன் வகுப்பு தோழனின் தங்கை ஒரு பெண்
பத்தாவது படிப்பவள் கல்லூரி மாணவன் ஒருவனுடன் ஊர் சுற்றுவதாக தெரிய
வந்தபோது
வீட்டில் பிரச்ச்னை வெடித்தது.
அந்த பெண்ணின் பெற்றோர்கள் அவளை
அடியடியென அடிக்க, அந்த பெண் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கில் தொங்க
முயற்சித்து விட்டாள். திரு ‘நான் பேசி பார்க்கிறேன்' என்று சொல்லிவிட்டு
அந்த பெண்ணிடம் தனி அறையில் அவளின் அண்ணனை பக்கத்தில் வைத்துக்கொண்டு
பேசினான். முதலில் அவளை அடித்ததற்காக அவள் பெற்றோர் சார்பில் அவள் அண்ணனை
மன்னிப்பு கேட்க வைத்தான். முதலில் காதலை பற்றியும், அந்த பையனின்
குடும்பம் பற்றியும், அவன் கல்லூரியில் சரியாக படிக்காமல் ஊர் சுற்றுவதை
பற்றியும், அந்த தெருவில் எல்லோர் முன்பும் இனி அவளின் பெற்றோர்கள் தலை
குனிந்துதான் நடக்க வேண்டும் என்பதையும், திருமண வாழ்க்கை குறித்த தனது
கற்பனைகளையும் தெரிவித்தான்.ஓரளவுக்கு சமாதானமான அந்த பெண் இனி எக்காரணம்
கொண்டும் தற்கொலை முயற்சி எடுக்க மாட்டேன் என்றும் சத்தியம் வாங்கிக்
கொண்டான்.
நான்கு நாட்கள் சுற்றியிருப்பவர்கள் அந்த பெண்ணின் வீட்டிற்கு
வந்து துக்கம் விசாரித்து போனதை பார்த்து தன் முட்டாள்தனத்தை உணர்ந்து தன்
பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டாள். நடப்பது எல்லாமே ஒன்று நன்மையை தரும்
இல்லை ஏதாவது ஒன்றை கற்று தரும். கற்றுக் கொள்வதும் நன்மைதானே. அந்த பெண்
தன் குடும்பத்தை புரிந்து கொண்டாள். அந்த குடும்பமும் அந்த பெண்ணுடன்
நட்பாக பழக ஆரம்பித்தது.
எப்போதாவது அந்த பெண்ணை பார்த்தால் திரு படிப்பை பற்றியும் நலத்தை பற்றியும் மட்டும் விசாரிப்பதோடு நிறுத்திக் கொள்வான். நாட்கள்
செல்ல செல்ல மீண்டும் திருவை எல்லோருக்கும் பிடிக்க துவங்கியது.
ஒவ்வொருவரும் அவனுடன் பேச விழைந்தனர். ஆனால் திரு எல்லோரிடமும் அளந்துதான்
பேசினான். ஆனால் மிகவும் பணிவாக பேசினான்.
ஒருநாள் தீபிகா திருவிடம்
தனியாக பேச வேண்டும் என்றாள், அவனும் நின்றான். முதலில் மன்னிப்பு
கேட்டாள். அவன் நன்றி கூறினான். எதற்கு என்று கேட்டதற்கு சந்தோசத்தை
மட்டுமே பார்த்திருந்த எனக்கு நிம்மதியை தந்ததற்காக என்றான். என்ன தனியாக
பேச வேண்டும் என கேட்டதற்கு அவனுடன் நட்பாக இருக்க வேண்டும் போல் இருப்பதாக
கூறினான். குற்ற உணர்ச்சியின் காரணமாகவா எனக் கேட்டான். இல்லை நிஜமாகவே
திருவின் தற்போதைய குணங்கள் பிடித்திருப்பதாக கூறினாள்.
அதன் பின்
அவ்வப்போது பேசிக் கொள்வார்கள். திருவின் படிப்பில் ஏற்பட்ட புதிய ஆர்வம்
அனைவரையும் தொற்றிக் கொண்டது. திருவின் ஊக்கத்துடன் படித்த தீபிகாவிற்கு
அவள் ஆசைப்பட்ட மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. விடுதியில் தங்கி
படிக்கிறாள். விடுதியிலிருந்து எப்போது வீட்டிற்கு சென்றாலும் வந்து
முதலில் திருவை பார்த்து பின்தான் வீட்டிற்கு செல்வாள். அப்படி வந்து
பார்த்து விட்டுதான் இப்போது திருவுடன் வீட்டிற்கு வரலட்சுமியுடன் சென்று
கொண்டிருக்காள்.
என்னுடைய நெடுநாள் சந்தேகத்திற்கு தீபிகாவின் மூலம்
விடை கிடைத்து விட்டது. ஏன் திரு இப்படி இருக்கிறான் என்ற கேள்விக்கு
காரணம் தொ¢ந்து விட்டது. எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. திருவிடம்
நான் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்று.
அன்று
இரவு என் அக்காவிடம் இதை பற்றி பேசினேன். அவள் தான் இப்படித்தான்
இருந்திருக்கும் என முன்பே யூகித்திருந்ததாக கூறினாள். அந்த வாரக்
கடைசியில் திருவின் தங்கையுடன் நூலகத்திற்கு சென்று வரும் பொழுது அவளிடம்
தீபிகாவை பற்றி பேசினேன். அப்போது பேச்சுவாக்கில் தெய்வானையிடம் இருந்து
ஒரு உண்மை வெளிவந்தது.
சுமாராக ஒரு வருடத்திற்கு முன்பு
தீபிகா,
திருமுருகனிடம் காதலை தெரிவித்ததாகவும், திரு அதுபோல் எண்ணமில்லை,
மன்னித்து
விடுமாறு கூறியதையும் இருந்தாலும் தொடர்ந்து இருவரும் பழகி வருவதையும்
தெரிந்து கொண்டேன். இந்த விஷயம் என்னுள் இருந்து பல உணர்ச்சிகளை
வெளிக்கொண்டு வந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பயம் வந்து விட்டது.
வீட்டிற்கு
வந்ததும் என்னால் சும்மா இருக்க முடியவில்லை. முதலில் கோபமாக வந்தது.
நகத்தை கடித்து துப்பினேன். யார் மேல் கோபம் என யோசித்தால் பதில் இல்லை.
யதார்த்தமாக யோசித்தபோது என்மேல்தான் கோபம் என புரிந்தது.
எனக்கு
வந்திருக்கும் கோபத்திற்கான காரணம் பயம், பொறாமை. எங்கு திரு தீபிகாவை
காதலிக்கிறானோ அல்லது காதலிக்க துவங்கி விடுவானோ என்ற பயம் வரத்
துவங்கியது. அதனால் எனக்கென்ன என்று என்னை நான் கேட்கும் பொழுது திருவை
நான் எனக்கு சொந்தமானவனாக நினைப்பதுதான் காரணம் எனப் புரிந்தது.
அக்கா
வந்ததும் என்னுள் இருக்கும் அனைத்தையும் கொட்டித் தீர்த்தேன். அவள் சிறிது
நேரம் யோசித்தாள். பின் என்னிடம் வந்து அடுத்த முறை அவனை பார்க்கும்
பொழுது காதலை சொல்லி விடு என்றாள். எப்படி சொல்வது எனக் கேட்டதற்கு
எப்படியாவது சொல் என்றாள். எனக்கும் அதுதான் சரி எனப்பட்டது. என்னால் இனி
ஒரு கணமும் அவனுடன் பொய்யாக பழக முடியாது. மனதுக்குள் காதலை வைத்துக்
கொண்டு சாதாரணமாக பழகும் திறமை எனக்கில்லை. சொல்லத்தான் போகிறேன்.
சொல்ல
வேண்டும் என முடிவெடுத்த பின்னர் எனக்கு உடனே திருவை பார்க்க வேண்டும் போல்
இருந்தது. ஒரு நிமிடம் மெதுவாக அவனைப் போல் யோசித்து பார்த்தேன். எதற்காக
நான் திருவை காதலிக்கிறேன்? எனக்கு திருவை பிடித்திருக்கிறது.
பிடித்திருந்தால் தோழியாக வாழ்க்கை முழுவதும் இருக்கலாமே, எனக்கு அது
போதாது, எந்நேரமும் எப்போதும் நான் திருவுடனே இருக்க வேண்டும்.
அதற்கு
காரணம் கேட்பான் அதுவும் சிரித்துக் கொண்டே, அவனிடம் திறமையாக
பதிலளித்தாலும் நாம் கூறும் வார்த்தைகளை வைத்தே நம்மை மடக்குவான். எப்படி
வேண்டுமென்றாலும் மடக்கட்டும். அவ்வளவு ஏன்? என்னை பிடிக்கவில்லை என்று கூட
சொல்லட்டும். நான் அவனை காதலிப்பதிலிருந்து மாறப் போவதேயில்லை. உறுதியாக
முடிவு எடுத்த பின்னரே மனம் அமைதியானது. இரவு அக்காவின் கைகளை பிடித்துக்
கொண்டே தூங்கினேன். அக்காவிற்கு தெரியாது நான் திருவின் கைகளை நினைத்துதான்
பிடித்துக் கொண்டிருந்தேன் என.
----------------------------------------------------------------------------தொடரும்-------------
அடுத்த பாகங்கள்
#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9
----------------------------------------------------------------------------தொடரும்-------------
அடுத்த பாகங்கள்
Comments
Post a Comment