தனித்திரு- 2

 முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5

--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் நான் கல்லூரிக்குள் நுழைந்ததுமே, நேற்று என்னை கேலி செய்தவர்கள் என்னை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்டுவிட்டு பேச துவங்கினர். அவர்களிடம் நானும் மன்னித்தது போலவே பேசினேன். மனதுக்குள் அக்கா கூறியது போல் இவர்களிடம் இருந்து சிறிது விலகி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வகுப்பறையில் அமர்ந்தேன். நான் முதல் வரிசையில் தான் எப்போதும் அமர்வேன். அதே வரிசையின் கடைசியாக, கதவிற்கு பக்கமாகத்தான் திரு அமர்ந்திருப்பான். ஒருமுறை அவனை திரும்பி பார்த்துவிட்டு தலையை திருப்பி கொண்டேன். எனக்கு நேற்று இருந்த சந்தேகம் இன்று இல்லை. காரணம் என்னை கேலி செய்த என் நண்பன் திருவிடம் பேசி நான் பார்த்தது இல்லை.

அந்த சந்தேகம் கோபத்தில் எனக்கு உதித்த கற்பனை என புரிந்துக் கொண்டேன். மனதுக்குள் திருவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு பாடத்தை கவனிக்க ஆரம்பித்தேன். மதிய உணவு இடைவேளையில் வழக்கம் போல் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட பின் நான் மட்டும் தனியாக உட்கார்ந்து மீதம் வைத்திருந்த எழுத்து வேலையை செய்து கொண்டிருந்தேன்.

யாரோ என் அருகில் வந்து நிற்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தேன். ‘திரு முருகன்' என் மனம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது. இவன் எதற்கு வந்திருக்கிறான்? வழிவதற்கா? இல்லை திட்டுவதற்கா? இரண்டுக்கும் இல்லை என்று அவன் பேசும் போது புரிந்தது.

“வரலட்சுமி என்னை மன்னிக்கனும், நேத்து நான் அப்படி பேசியிருக்க கூடாதுனு எனக்கு தெரியும். ஆனா அந்த சூழ்நிலைய அமைதியாக்க எனக்கு வேற வழி தெரியலை. உன்னை காயப்படுத்தி இருக்கும்னு தெரியும். காலைலயே மன்னிப்பு கேட்கனும்னு நினைச்சேன். முடியலை. மன்னிச்சுருங்க”

“சேச்சே, பரவாயில்லை, உங்க மேல எனக்கு கோபமே இல்லை. யாரா இருந்தாலும் கோபப்பட்டு அப்படித்தான் நடந்துருப்பாங்க”

“உங்களுக்கு கோபம் வரலைன்னு பொய் சொல்லாதிங்க, நேத்து பயங்கரமா முறைச்சுகிட்டே போனிங்க, எனக்கு இராத்திரி 8.30 வரைக்கும் பொறை ஏறிகிட்டே இருந்தது. எனக்கு தெரியும் நீங்கதான் திட்டியிருப்பிங்கனு, அதிகமா பேசனதுக்கு மன்னிச்சுருங்க”

“சரி, மன்னிச்சுட்டேன். போதுமா?”

“போதும் நன்றி, நீங்க உங்க வேலைய தொடருங்க, நான் வரேன்”

போய் அமர்ந்து கொண்டான். நல்லவேளை யாரும் இல்லாத போது வந்து பேசினான். யாராவது பார்த்திருந்தால் இன்றைக்கும் கோஷம் போட்டிருப்பார்கள். வகுப்பு ஆரம்பித்தது. முதல் பாட வேளையில் படிப்பில் கவனம் செலுத்திய என்னால் அதன் பின் வகுப்பு சுவாரசியமாய் போகாததாலோ என்னவோ அவனை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. என் மனம் கொஞ்சம் கொஞ்சமாக பின்னோக்கி சென்று அவனைப் பற்றி எனக்கு தெரிந்ததை அசை போட துவங்கியது.

முதல் நாள் வகுப்பில், ஆசிரியர் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள சொன்ன போது எந்தவித தயக்கமின்றி முதல் ஆளாக மேடைக்கு போய் நின்றவன் திரு தான்.

எல்லோரும் எதிர்பார்த்தது போல் அவன் ஆங்கிலத்தில் பேசவில்லை. தமிழில் தான் பேசினான். தன் பெயர், ஊர், படித்த பள்ளி அனைத்தையும் விவரித்தான். ஆசிரியர் எதற்காக இயற்பியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்தாய் என்று கேட்ட பொழுது, அதை பற்றி எனக்கு தெரிந்து கொள்ள ஆசை என்று கூறினான். அப்போது நான் அவனை அதிகம் பந்தா செய்து கொள்பவனாகத்தான் நினைத்தேன்.

பிறகு நாளடைவில் அவனை யாரும் கண்டுக் கொள்வதில்லை. அவனும் யாரையும் கண்டுக் கொள்வதில்லை. அதிகம் அரட்டை அடிப்பதில்லை. புன்னகைத்து மட்டும் பார்த்திருக்கிறேன். சத்தம் போட்டு சிரித்து பார்த்ததில்லை.

தேர்வு அறையில் எனக்கு பக்கத்து வரிசையில் அவன் எழுதுவதை கவனித்து இருக்கிறேன். எப்போழுதும் அதிக விடைத்தாள்களை உபயோகிப்பது அவன்தான். தேர்வுக்கான முழு நேரத்தையும் பயன்படுத்திக் கொள்வான். மணியடித்ததும் சரியாக விடைத்தாளை குடுத்து விடுவான். அவனை மற்றவர்கள் குறிப்பிடும் பொழுது அலாரம் என்பார்கள். ஒரு நாள் கூட வகுப்பிற்கு தாமதமாக வந்ததில்லை,விடுப்பும் எடுத்ததில்லை.

சென்ற கல்லூரி விழாவின் போது 100% வருகை பதிவேட்டிற்காக, முதல் மதிப்பெண் பெற்றவனுடன் சேர்ந்து மேடையில் ஏறி சான்றிதழ் பெற்றுக் கொண்டான். மற்ற படிக்கிற மாணவர்கள் படிப்பதை போல் இவன் படிக்க மாட்டான். ஏதோ நாவல் படிப்பதை போல் புத்தகத்தை புரட்டிக் கொண்டே போவான். பக்கம் பக்கமாக கதை எழுதி வைக்கிறான் என்பது என் கருத்து.

என்னுடன் சேர்ந்து, கல்லூரி பேருந்தில் ஒரு வருடம் ஏறி இறங்கியிருந்தாலும் இதுவரை என்னை நேராக பார்த்து புன்னகைத்தது கூட கிடையாது. நான் பார்த்து பழகிய மாணவர்களில் இவன் சற்று அந்நியமானவன்.

கல்லூரி ஆரம்பித்தவுடன் அட்டைப் போல் ஒட்டிக் கொண்ட நண்பர்களை பார்த்திருக்கிறேன். தயங்கி தயங்கி கையில் ரோஜாவுடன் வந்து எச்சில் விழுங்கிக் கொண்டே, காதலை சொன்னவர்களையும் பார்த்திருக்கிறேன். பேசவே முயற்சி செய்யாமல் பேச சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது, அந்த நிமிடமே என்னை மயக்க மெனக்கெட்டவர்களையும் பார்த்திருக்கிறேன். இந்த திரு புதியவனாக இருக்கிறான். நம்ப முடியாது.

ஆண்கள் சரியான் உழைப்பாளிகள். ஒரு பொருளை அடைவதற்காக திட்டமிட்டு உழைப்பார்கள். திருவும் அவர்களை சேர்ந்தவனாக இருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் பேச்சை வளர்த்து என்னை இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்கலாம். அப்படி இல்லை, அவன் நல்லவன்தான் என்றாலும் இதற்கு மேல் அவன் மனம் சஞ்சலப்படாது என்பதற்கு யார் பொறுப்பேற்க முடியும்?

அக்கா ஏற்கனவே சொல்லியிருக்கிறாள். இது மிகவும் அபாயகரமான வயது. உன்னை சஞ்சலப் படுத்த பல சஞ்சலப்பட்டவர்கள் முயற்சிப்பார்கள் என்று. இந்த வயதை கடக்கும் பாதையில் நிறைய புதைகுழிகள் இருக்கின்றது. அதில் விழுந்தவர்களில் அதிகம் அடுத்தவர்களையும் சேர்த்து உள்ளே இழுக்கத்தான் பார்ப்பார்கள்.

இன்று வகுப்பு முடிந்து செல்லும் பொழுது நேற்றைய கிண்டல், கேலி இல்லை. அதிகம் பேச்சுகளும் இல்லை. அடுத்து செய்ய வேண்டிய படிப்பு சம்பந்தமான வேலைகளை பற்றி மட்டும்தான் உரையாடல்கள் இருந்தன. நான் பேருந்தில் ஏறுவதற்கு முன்பே திரு ஏறியிருந்தான். அதனால் என்னால் அவனை பார்க்க முடியவில்லை.

பேருந்து கிளம்பியதும் என் மனம் அவனை சுற்றித்தான் யோசித்துக் கொண்டு இருந்தது. நேற்று சிந்திததற்கும் இன்று சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது.

நேற்று முழுவதும் நான் அவனை திட்டியது உண்மைதான். தியானம் செய்வது போல் ஒரு மனதாக அவனைத்தான் திட்டிக் கொண்டிருந்தேன். ஆனால் அவனுக்கு அதனால்தான் பொறை ஏறியிருக்கும் என்பதை எப்படி நம்ப முடியும்?

முதலில் அவன் கூறியது போல் பொறை ஏறியதா, இல்லையா என்பதையே என்னால் உறுதி செய்து கொள்ள முடியாது. இனி அதை பற்றி யோசித்தால் குழப்பம்தான் என்பதை புரிந்ததும், மனதை திசை திருப்புவதற்காக அருகில் அமர்ந்து இருந்த தோழியிடம் பேச்சு குடுக்க துவங்கினேன்.

வீட்டை சென்றடைந்த பின் நேற்று போல் அக்காவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். அக்கா வந்ததும் அவளை பார்த்து சிரித்தேன். பதிலுக்கு அவளும் சிரித்தாள்.

“என்னடி, இன்னைக்கு எப்படி போச்சு”

நான் நடந்ததை முழுவதுமாய் விவரித்தேன். அவள் என் தலையை வருடி கொண்டே

“நடந்தது பத்தியும் நடக்க போறது பத்தியும் யோசிக்க கூடாதுனு சொல்வாங்க. நீ இதை பத்திலாம் யோசிச்சு உன்னைக் குழப்பிக்க வேண்டாம். எப்பவும் போல உற்சாகமா இரு, ரொம்ப யோசிச்சா முடி கொட்டிடுமாம்”

என்று கூறி என் சடையை இழுத்து விட்டு விட்டு அம்மாவிடம் ஓடி விட்டாள். வழக்கமாக துரத்துவதை போல் இன்று எனக்கு துரத்த மனமில்லை.

http://photogallery.indiatimes.com/movies/regional-movies/bhale-thammudu/photo/12416862/Amala-Paul-and-Sameera-Reddy-in-a-still-from-the-Telugu-movie-Bhale-Thammudu.jpg

சுபலட்சுமி போல் அக்கா கிடைக்க நான் குடுத்து வைத்திருக்க வேண்டும். இரண்டு வயது மூத்தவள். சிறு வயதிலிருந்தே என்னை வளர்க்கும் கடமை அவளிடம் மட்டும் இருப்பதாக நினைத்து ரொம்ப பொறுப்பாக நடந்து கொள்வாள். என் மனம் அமைதியானது, உதடு புன்னகைத்தது.

திரு என்னிடம் பேசி ஒரு வாரமிருக்கும். நானும் அக்கா சொன்னது போல் தேவையில்லாமல் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருந்தேன். உண்மையில் அவனை சுத்தமாக மறந்திருந்தேன். வழக்கம் போல் வாழ்க்கை படிப்பும் அரட்டையுமாக போய் கொண்டிருந்தது.

இப்பொழுதெல்லாம் கல்லூரிக்கு விடுமுறை விட்டால் எனக்கு பொழுதே போக மாட்டேங்கிறது. என் கூட படித்த பெண்ணை பார்க்கலாம் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன். பக்கத்து தெரு என்பதால் நடந்துதான் போனேன். அவள் படிப்பது பொறியியல். நன்கு படிப்பாள். அவள் வீட்டில் ஒரு மணி நேரம் அரட்டை அடித்து விட்டு கிளம்பினேன்.

அவள் வீடு இருக்கும் வீதியை விட்டு வெளியே வரும் போது திருவை பார்த்தேன். ஆனால் அவனை பார்த்த சூழ்நிலையை நான் சுத்தமாக வெறுத்தேன். மொத்தமாக பத்து வினாடிதான் பார்த்திருப்பேன்.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

Comments

  1. நல்ல நரேஷன். சுவாரசியாமல் குறையாமல் செல்கிறது
    .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

கலாய்ச்சுட்டாராமாம்...

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்