தனித்திரு- 4

 முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5

--------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் கழித்து, வீட்டில் அக்காவின் வருகைக்காக காத்திருந்தேன். அவளிடம் இன்று நடந்த சம்பவங்களை விவாதிக்க வேண்டும். காத்திருக்கும் பொழுது நேரம் மெதுவாகத்தான் நகரும் என்பதை என்னால் உணர முடிந்தது.
அக்கா என்னை பார்த்ததும் என் முகக்குறிப்பிலிருந்தே நான் ஏதோ சொல்ல காத்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டாள்.

“என்னம்மா, இன்னைக்கு எதோ விசேசமா நடந்துருக்கும் போல, சொல்லு என்னன்னு”

நான் விவாதிக்க துவங்கினேன். இன்று சனிக்கிழமை. மதியம் திடிரென்று அரை நாள் விடுமுறை அறிவித்ததும் வகுப்பிலுள்ள அனைவரும் சேர்ந்து ஒன்றாக திரைப்படம் செல்ல முடிவு செய்தோம். 4 பேர் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு அனைவரிடமும் பணம் சரியாக வாங்கி முன்பே சென்று அனைவருக்கும் முன்பதிவு செய்தனர்.

வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை வகுப்பறையிலேயே அமர்ந்து காலி செய்து விட்டு, அருகில் தான் என்பதால் அனைவரும் நடந்து கொண்டே, பேசி கொண்டே திரையரங்கை சென்றடைந்தோம்.

பெண்கள் வரிசையில் நான்தான் கடைசியாக அமர்ந்தேன். என்னருகே நான் எதிர்பாராமல் திருமுருகன் வந்து அமர்ந்தான். மொத்தம் 45 பேர். அதில் 12 பெண்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே என் வகுப்பு மாணவர்கள் விசிலடிக்கவும், கத்தவும் துவங்கி விட்டனர்.

திரு தனது பாக்கெட்டில் இருந்து ஏதோ ஒரு சிறிய கவர்-ஐ எடுத்தான். அதிலிருந்து ஏதோ இரப்பரால் செய்த ஆணி போல் இருந்தது. முனையை அழுத்தியதும் சுருங்கி விட்டது. அதை காதில் பொருத்திக் கொண்டான். நான் ஆர்வம் தாங்காமல் அது என்ன என்று கத்திக் கேட்டேன். அதற்கு அவன்

“கத்தனும்னு அவசியமில்லை, எனக்கு தெளிவா கேட்கும்”

“சரி என்ன அது? எதுக்கு வச்சுருக்கிங்க?”

“இது நீச்சல் குளத்துல காதுக்குள்ள தண்ணிர் போகாம இருக்கறதுக்கு பயன்படும். படம் ஆரம்பிச்சதும் விசில் சத்தம் அதிகமாய்டும். அந்த சத்தத்துல படம் தெளிவா புரியாது”

“அப்புறம் எப்படி படத்துல வர்ற வசனம்லாம் கேட்கும்?”

“உங்க காதை 2 கையாலயும் அடைச்சுகிட்டு கேட்டு பாருங்க” என்றான்.

நானும் காதுகளை விரல்களால் அடைத்ததும் விசில் சத்தமும், கரகோஷமும் குறைந்து படத்தில் வரும் வசனம் மட்டும் தெளிவாக புரிந்தது. திரும்பி அவனை பார்க்கும் போது காதில் வைத்திருந்த இயர்பிளக்-ஐ எடுத்துக் காட்டினான். அழுத்தினால் சுருங்கி மெதுவாக விரிவடைவதால் காதை நன்றாக அடைத்துக் கொள்ளும் என்பதை விளக்கினான்.

அவ்வளவுதான் அதன்பின் என்னிடம் பேசவேயில்லை. வகுப்பில் எப்படி பாடத்தை கவனிப்பானோ அதுபோல் படத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டு இருந்தான். அசைய கூட செய்யவில்லை.

இடைவேளைக்கு முன் 2 தடவை கை தட்டினான். அந்த நேரத்தில் மற்றவர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். இடைவேளையில் அனைவருக்கும் பப்ஸும் குளிர்பானமும் ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ரொம்ப அமைதியாக படத்தை கவனித்து கொண்டு இருந்தான். பார்ப்பதற்கு அந்த திரைக்குள் சென்று விட்டவனை போல் தொ¢ந்தான்.

படம் முடிந்ததும், முன் பதிவுக்கு ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் ஒவ்வொரு பெண்ணும் பத்திரமாக பேருந்தில் ஏறிய பின் அதே வழியாக செல்லும் மற்ற மாணவர்களிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்து அனுப்பினர். எனக்கு துணையாக திருவிடம் தான் சொல்லி அனுப்பினர்.

நான் ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன். எப்படி பத்திரமாக பார்த்துக் கொள்வான். 4 பேர் வழிமறித்து வம்பிழுத்தால்? திருவை பார்வையால் அளவெடுத்தேன். நல்ல உயரம். முகம் மட்டும்தான் அவன் வயதைக் கூறியது. உடல் முரடாகத்தான் இருந்தது. எங்கள் நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்க ஆரம்பிக்கும் பொழுது நானே பேச்சை துவக்கினேன்.

“என் திரு, நீங்க மட்டும் தனியா இருக்கிங்க?”

“உங்க கேள்வி புரியலைங்க”

“இல்லை, கொஞ்சம் வித்தியாசமா இருக்கிங்களே அதை கேட்டேன்”

“எந்த விசயத்தை கேட்கறிங்க?”

“உதாரணத்துக்கு இன்னைக்கு படத்துக்கு போனோம். நம்ம கூட வந்தவங்க எல்லோரும் விசில் அடிச்சு, ரொம்ப அனுபவிச்சு படம் பார்த்தாங்க, ஏன் பொன்னுங்க கூட சத்தம் போட்டாங்க, நீங்க மட்டும் அமைதியா இருந்திங்க. அதை கேட்கறேன்”

“நீங்களும்தான் அமைதியா பார்த்திங்க?”

“நான் உங்களுக்காகத்தான் சத்தம் போடாம பார்த்தேன், அப்புறம் இந்த படத்துல சத்தம் போடற அளவுக்கு எதுவும் விசேசமா இல்லை. நீங்க ஏன் அமைதியா இருக்கிங்க, தனியா தெரியறிங்க?”

“சரி வரலட்சுமி, இன்னைக்கு படம் பார்க்கும் போது நம்ம பசங்களையும் சேர்த்து மொத்தம் எத்தனை பேர் சத்தம் போட்டு படத்தை பார்த்தாங்க, ஒரு 150 பேர்?”

“இருக்கலாம், ஏன் கேட்கறிங்க?”

“இல்லை, இன்னைக்கு படத்துக்கு ஐரு 600 பேர் வந்துருந்தாங்கனு வச்சுப்போம். அதுல இந்த 150 பேர்தானே தனியா தெரிவாங்க, நானும் நீங்களும் அமைதியா படம் பார்த்த அந்த 450 பேருக்குள்ள தானே வர்றோம். எப்படி தனியா தெரியறதா சொல்ல முடியும்? உட்காராம நின்னுகிட்டு பார்த்தா வேணா அப்படி சொல்லலாம்”

“இருந்தாலும் ஸ்டுடண்ட்ஸ்-ல நீங்க தனியா தெரியறிங்களே?”

“நீங்க ஏன் மொத்த சமுதாயத்துல இருந்து ஸ்டுடண்ட்ஸ்-அ தனியா பிரிக்கிறிங்க?”

“இல்லை, தனியா பிரிக்கலை”

“யோசிச்சு பாருங்க, எல்லா இடத்துலயும் மக்களோட மக்களா பார்த்தா எங்கிட்ட புதுசா எதுவுமே தெரியாது. என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்க. ஸ்டுடண்ட்ஸ்-னு பிரிச்சு வடிகட்டுனா அப்படித்தான் தெரியும். அப்படி எதையும் பிரிச்சு பார்க்கறதுல எனக்கு உடன்பாடு இல்லை. மாணவர்கள் சமுதாயத்துல தனியா தெரியனுங்கறத கூட ஒத்துக்கலாம். அதுக்காக கத்திகிட்டும் அடுத்தவங்களுக்கு தொந்தரவு குடுக்கற மாதிரி நடந்துக்கறது தான் ஸ்டுடண்ட்ஸ்-க்கு அடையாளம்ங்கறத நான் ஒத்துக்க மாட்டேன். உங்க கருத்து என்ன?”

http://timesofindia.indiatimes.com/photo/3396055.cms

“என் கருத்தா? இது வரைக்கும் இந்த கோணத்துல நான் யோசிச்சு பார்த்தது இல்லை. யோசிச்சு அப்புறம் சொல்றேன்”

“யோசிச்சா நீங்க என் பக்கம் தான் ஒட்டு போடுவிங்க”

“அது இருக்கட்டும், படத்தை ஏன் அவ்வளவு தீவரமா, எதோ பாடத்தை கவனிக்கற மாதிரி பார்த்துட்டு இருந்திங்க?”

“என்னை கேட்டா, எந்த விஷயத்தை செய்தாலும் முழுசா செய்யனும்னு சொல்லுவேன். நான் 100% அப்படி நடந்துக்கறேனானு தெரியாது, ஆனா அதுக்கு முயற்சி பன்னிகிட்டு இருக்கேன்னு சொல்லலாம்.உங்களுக்குனு நான் சொல்றது புரியலைனு நினைக்கறேன். சொல்லுங்க. உங்களுக்கு படத்துல என்னலாம் பிடிச்சது?”

“படத்துல கதை சுமார்தான். ஆனா எல்லோரும் நல்லா நடிச்சுருந்தாங்க. பாட்டுக்காக இன்னோரு தடவை பார்க்கலாம். உங்களுக்கு?”

“எனக்கு படத்துல திரைக்கதை ரொம்ப பிடிச்சுருந்தது, கேமராமேன் உயிரை குடுத்து உழைச்சுருக்கார். ஒவ்வொரு கோணமும் வித்தியாசமா இருந்தது. எடிட்டிங் நல்லா பன்னியிருக்காங்க. வசனம் இன்னும் கொஞ்சம் நல்லா பன்னியிருக்கலாம். என்னை கேட்டா டைரக்டருக்கு தயாரிப்பாளர் நல்லா சுதந்திரம் குடுத்துருந்தா இந்த படத்தையே இன்னமும் வித்தியாசமா தந்திருப்பார். பின்னனி இசைய கவனிச்சிங்களா? அதிகமா வயலின் உபயோகிச்சுருக்காங்க?”

“என்னங்க, இவ்வளவு விசயம் கவனிச்சிங்களா?”

"நான் அரைகுறைங்க. நல்லா விசயம் தெரிஞ்சவன் பார்த்தானா ஒவ்வொரு ஃப்ரேமையும் விமர்சனம் பன்னுவான்”

“உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சுருக்கே, சினிமாக்கு முயற்சி பண்ற எண்ணம் எதாவது இருக்கா?”

“இங்கேதாங்க எல்லோரும் தப்பு பன்றிங்க. நான் சொல்றது சாப்பாடு எப்படி இருக்குனு சொல்ற மாதிரிதான். காரத்தை குறைச்சுருக்கலாம், இரசம் புளிக்குதுனு அது மாதிரி, அதுக்கு சமையல் தெரிஞ்சு வச்சுருக்கனும்னு அவசியம் இல்லை. பல இடத்துல சாப்பிட்டு பழகியிருந்தாலே போதும். அது போலத்தான். நாம எல்லாரும் சின்ன வயசுலருந்து சினிமா பார்க்கறோம். எப்படியும் 10 வருசத்துக்கு மேல இருக்கும் நாம பார்க்க ஆரம்பிச்சு, இந்த அளவுக்கு கூட சினிமாவ தெரிஞ்சுக்காம இருந்தா எப்படிங்க?”

“எனக்கு என் உங்களை மாதிரி தெரிஞ்சுக்கனும்னு தோணலை?”

“கூட்டம் தாங்க காரணம். நம்மள்ள பல பேர் தியேட்டர்க்கு வந்தா படத்தை விட சுத்தி இருக்கறவங்களைதான் அதிகமா கவனிக்கறோம். சின்ன வயசுல நாம வாய்ப்பாடு கஷ்டபட்டு படிச்சோம். இப்ப அது நமக்கு சாதாரணம். நமக்கு இப்போ அல்ஜிப்ரா கஷ்டமா தெரியுது. ஆனா எல்லாமே கணக்குங்கறதுல அடக்கம். சினிமாலயும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு, நமக்கு ஆர்வம் இருந்தாதான் கத்துக்க முடியும்”

“நல்லா பேசறிங்க”

“நீங்களும் நல்லா கவனிக்கறிங்க, சரி என் தெரு வந்துருச்சு, நீங்க பத்திரமா இதுக்கப்புறம் போய்டுவிங்கல்லை? இல்லை நான் கூட வரட்டுமா?”

“சேச்சே, இதுக்கப்புறம் எல்லாமே தெரிஞ்சவங்க வீடுதான், நான் போய்க்கறேன். வரேங்க”

“சரிங்க”

அனைத்தையும் கேட்டுவிட்டு அக்கா

“இப்படியும் பசங்க இருக்காங்களா? எதோ புதுசா இருக்கு. எனக்கென்னமோ அவன் இயல்பா இருக்கறதா படலை”

“இப்ப நீதான் உளறிகிட்டு இருக்க சுபா, எனக்கு அவன் சொன்னதுலாம் யோசிச்சு பார்க்கறப்ப, அவன் இயல்பாதான் இருக்கான், நாமதான் தனியா தெரியறோம்னு படுது”

“எது எப்படியோ, உங்கிட்ட கடைசி வரைக்கும் வாங்க, போங்கனு மரியாதையா உரிமை எடுத்துக்காம இருக்கறத நான் பாராட்டறேம்பா”
என்று கைகளை தட்டினாள்.

அடுத்த நாள் மாலை பேருந்தில் இருந்து இறங்கி வரும் பொழுது நானாகவே பேச்சை துவங்கினேன். இப்போது எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

“ஏன் திரு, இப்படி தனியா இருக்கிறத எப்படி கத்துகிட்டிங்க?”

“இதுக்கு எங்கே போய் கத்துக்க முடியும்? கிணத்துல தூக்கிப் போட்டு நீச்சல் கத்துக்க சொல்லி குடுப்பாங்களே, அது மாதிரி வாழ்க்கை எனக்கு கத்து குடுத்த பாடம்தான் இதுன்னு சொல்லலாம். இதுல ஒரு விஷயம் இருக்கு”

“என்ன?”

“நீச்சல் கத்துக்கும் போதும் மத்தவங்க நீ முழுசா பழகிட்டன்னு சொன்னாதான் நமக்கு முழு நம்பிக்கை வரும். என்னையும் மத்தவங்க நீ தனியா தெரியறனு சொல்லும் போதுதான் எனக்கு அப்படி இருக்கேன்னு தெரியுது”

“மத்த விஷயத்தை விடுங்க, கிளாஷ்-ல கூட உங்க நண்பர்கள்-னு தனியா யாரும் இல்லையே?”

“அதைத்தான் நானும் சொல்றேன். எதுக்கு நண்பர்கள்-னு தனியா இருக்கனும். இப்ப எல்லோரும் நண்பர்கள்தான். நான் ஏதாவது கேட்டா செய்ய மாட்டேன்னு யாரும் சொல்றதில்லையே”

“அப்படி இல்லை, நீங்க சொல்றது வேற, கூட படிக்கறவனுக்கும் நண்பனுக்கும் வித்தியாசம் இல்லையா?”

“உங்களுக்கு நான் சொல்றது புரியுதானு பாருங்க, நான் என் கூட யாராவது வந்து பேசுனா பேசாம இருக்க போறது இல்லை. எங்கிட்ட எதை பத்தி வேணா பேசலாம். ஆனா எனக்கு மத்தவங்ககிட்ட போய் பேசனும்னு தோணுனாதானே என்னாலே பேச்சை துவக்க முடியும்? எனக்கு என் பக்கத்துல உட்கார்ந்து இருக்கவனோட இரகசியங்களை தெரிஞ்சுக்கனும்னு தோணுனாதானே நான் அதை கேட்க முடியும்? எனக்கு அது தேவையில்லை. எனக்கு அப்பப்போ படிப்பு சம்பந்தமான தேவைகள் வரும்போது அது சம்பந்தமா மட்டும் பேசிக்கறேன்”

“நட்பு நல்ல விசயமில்லையா? அது உங்களுக்கு தேவைப்படலியா?”

“நான் அப்படி சொல்லலை. நண்பன்னா இப்படித்தான் இருக்கனும்னு நீங்க சொல்ற அடையாளங்கள் எனக்கு ஒத்துவரலைனு சொல்றேன். இப்போ என்னதான் நெருங்கன நண்பனா இருந்தாலும் உங்க குடும்ப விஷயத்துக்குள்ள அவனை நுழைய விடுவிங்களா?”

“அது எப்படி முடியும்?”

“உங்களோட நட்புக்கு எல்லை குடும்பம்-னா என்னோட நட்புக்கு எல்லை நான் தான். காரணம் இல்லாம என் விஷயங்கள்-ல தலையிடாத நண்பர்கள் எத்தனை பேர் இருந்தாலும் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை”

“கொஞ்சம் குழப்புது”

“இப்ப நீங்க எங்கிட்ட பேசறிங்க, நானும் உங்ககிட்ட பேசறேன். ஒருத்தரோட விஷயங்கள்ள மத்தவங்க தலையிடாம, இப்படி இருக்கனும் னு சொல்றேன்”

“2 பேருக்கும் நடுவுல கொஞ்சம் இடைவெளி இருக்கனும்னு சொல்றிங்களா?”

“இல்லைங்க, உங்களுக்கு ஒரு பிரச்சனைனா எப்படி முடிவு ஊடுக்கறதுனோ இல்லை நீங்க எடுத்த முடிவு தப்பா சரியானு மட்டும்தான் நான் சொல்லனும். உங்களுக்காக நான் முடிவு எடுக்க கூடாதுனு சொல்றேன்”

“இது தெளிவா புரியுது, நல்லாயிருக்கு”

“என் தெரு வந்துடுச்சுங்க, நான் வர்ரேன்”

எனக்கு திருவுடன் பேசிய பின் இத்தனை நாள் நாம் சரியாக சிந்தித்து செயல்படவில்லையோ என்ற சந்தேகமே வந்து விட்டது. அக்காவிடம் இதை பற்றி பேசுகையில் அவள்

“போதும், இப்படிலாம் யோசிக்க ஆரம்பிச்சா அரை லூசா திரிய வேண்டியதுதான்” னு சொல்லி விட்டாள்.

எனக்கு வேறு யாரிடம் இதை பற்றி விவாதிப்பது என்றே தெரியவில்லை. என் தோழிகளிடம் இதை பற்றி பேசலாம் என்று முடிவு செய்தேன்.

மறுநாள் உணவு இடைவேளையின் போது தோழிகளுடன் சாப்பிடுகையில் பேச்சுவாக்கில், திருவுடன் பேசியது பற்றியும், அவன் கூறிய விஷயங்களை பற்றியும் மெதுவாக விவாதித்தேன்.

http://media.newindianexpress.com/article1503863.ece/alternates/w460/16shop.jpg

அனைத்தையும் கேட்டுக் கொண்டே குறும்பாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நான் பேசி முடித்ததும் கிண்டல் செய்யும் விதமாக சிரிக்க துவங்கினர்.

“எய், ஏண்டி சிரிக்கிறிங்க?”

“இல்லை, அன்னைக்கு எதோ கிண்டலுக்கு உங்க 2 பேரையும் சேர்த்து வச்சு கத்துனப்ப இப்படி வந்து முடியும்னு நாங்க எதிர்பார்க்கலை”

“எப்படி முடியும்னு எதிர்பார்க்கலை?”

“எப்படின்னு எங்களையே கேட்கறியா, போய் கண்ணாடிய பார்த்து கேட்டுக்கோ”

“இப்ப என்னன்னு சொல்ல போறிங்களா இல்லையா?”

“கோபப்படாத லட்சுமி, இதுல என்ன தப்பு இருக்கு?”

எனக்கு அவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் சிறிது சிறிதாக என்னையும் திருவையும் சேர்த்து வைத்து பேசுகிறார்கள் என்று உணர ஆரம்பிக்கும் பொழுது எனக்குள் கோபம் பொங்கியது.

“என்ன சொல்ல வர்றிங்கனு தெளிவா சொல்லுங்க?”

“இனிமேல் நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு? நீ எப்ப உன் மனசுல இருக்கறத அவன்கிட்ட சொல்ல போற?”

“எய் என்ன சொல்ற? எதோ நான் திருவை காதலிக்கற மாதிரி பேசற?”

“இல்லையா?”

“என்ன கிண்டலா? நான் எப்ப அப்படி சொன்னேன்?”

“இல்லை, நீ இவ்வளவு நேரம் அவன் பேச்சு-அ வர்ணிச்சத பார்த்து நாங்க அப்படி நினைச்சோம்”

என்று சொன்னவளை எரித்து விடுவது போல் பார்த்தேன். இன்னோருத்தி என் தோளில் கை வைத்து என்னை சமாதான படுத்த முயற்சித்தாள்.

“ஏய் விடுங்கடி, நம்ம வரலட்சுமிய பத்தி நமக்கு தெரியாதா? அவ ஒன்னும் அந்த மாதிரி கிடையாது. நீ வா லட்சுமி”

என்று என்னை தனியாக அழைத்து சென்று எனக்கு உபதேசம் செய்தாள்.

“இங்கே பாரு லட்சுமி, நீ அவனை காதலிக்கறியோ, இல்லையோ? இது மாதிரி இனிமேல் மத்த பொண்ணுங்க முன்னாடி ஒரு பையனை பத்தி பேசாத, ஒவ்வொருத்தியும் இதை ஒவ்வொரு மாதிரி தன்னோட கற்பனைய சேர்த்து பரப்புவா, வீணா உங்க 2 பேர் பேரும் கெடும். இன்னொன்னு எனக்கு அந்த திரு மேல நம்பிக்கை இல்லை. உன்னை மடக்க ஏதேதோ பேசி மயக்க முயற்சிக்கறான்னு சந்தேகம் வருது. நான் சொல்றத சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்”

அடுத்த பாட வேளைகளில் என்னால் வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. குழப்பமாக இருந்தது. திரு மேல் சிறிதளவு சந்தேகம் வந்து போனது. என்னால் யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள் என்ற முடிவுக்கே வர முடியவில்லை. யார் சொல்வது நல்லது என்றும் பு¡ரிவில்லை.

திரு கூறியது நினைவுக்கு வந்தது. என் முடிவுகளை நான்தான் எடுக்க வேண்டும். ஆனால் அது சரியா தவறா என்று யாரை கேட்பது? அதற்கு சரியான ஆள் அக்கா சுபலட்சுமி தான். எனக்கு கெடுதல் நினைக்காத, என்னை வேறோருத்தியாக பார்க்காத தோழி அவள்தான்.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2