தனித்திரு - 9

முந்தைய பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

--------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் கல்லூரி பேருந்தில் இருந்து இறங்கி ஒன்றாக வருகையில் என்னால் திருவை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. அவன் என்னுள் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து ‘என் ஒரு மாதிரி இருக்க?' எனக் கேட்டான். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. எனக்கு ஒரு விஷயம் தெளிவாய் புரிந்தது. இதற்கு மேல் என்னால் முன்பு போல் திருவிடம் இயல்பாய் பேச முடியாது. காதலை சொல்லியே ஆக வேண்டும்.

“திரு”

“சொல்லு”

“சொன்னா கோவிச்சுக்க கூடாது?”

“சொல்லு”

“நான் உன்னை காதலிக்கறேன்”

அவன் நிமிர்ந்து என் முகத்தை பார்த்தான். அந்த பார்வையில் அவன் என்னிடம் இதை எதிர்பார்க்கவில்லை என தெரிந்தது.

“என்ன திடிர்னு?”

“நேத்துதான் எனக்கே தெரிஞ்சது”

“நான் என்ன சொல்லனும்னு எதிர்பார்க்கற வரலட்சுமி?”

“உனக்கு என்ன தோணுது?”

“நான் எதாவது சொன்னா உன் மனசு கஷ்டபடுமோனு பயப்படறேன்”

“பரவாயில்லை சொல்லு”

“எனக்கு உன்னை பிடிக்கும் லட்சுமி, ஆனா அது கண்டிப்பா காதல் இல்லை”

“அது எனக்கு தெரியும் திரு, நான் பதிலுக்கு நீ என்னை காதலிக்கனும்னு எதிர்பார்க்கலை. என்னால மனசுக்குள்ள அதை வச்சுகிட்டு உன்கிட்ட பொய்யா பழக விருப்பமில்லை, அதான் சொல்லிட்டேன், நான் சொன்னது தப்பாயிருந்தா மன்னிச்சுடு திரு”

“சேச்சே தப்புலாம் இல்லை, இதெல்லாம் மறந்துட்டு உன்னால என்கூட வழக்கம் போல பழக முடியுமா?”

“தெரியலை திரு, எனக்கு அந்த முயற்சி எடுக்கவே விருப்பமில்லை. நான் இப்படியே இருக்கனே, நீ வழக்கம் போல இரு, அதுல என்ன பிரச்சனை?”

“நீ மறந்துட்டதா சொன்னா கூட என்னால இயல்பா பேச முடியும். இல்லைனா ஒவ்வொரு தடவையும் நான் சொல்ற வார்த்தைகள் உன்னை வேற ஏதாவது நினைக்க வச்சுடுமோனு நான் பயப்படுவேன்”

“அப்ப என் கூட உன்னால நட்ப தொடர முடியாதுனு சொல்றியா?”

“எனக்கு சொல்ல தெரியலை வரலட்சுமி, நான் யோசிச்சு சொல்லட்டுமா? தப்பா எடுத்துக்காத”

“சேச்சே, ஆனா அடுத்த தடவை என்னை பார்க்கறதுக்குள்ள யோசிச்சுடனும்”

வீட்டிற்கு வந்த எனக்கு படப்படப்பாய் வந்தது. தேர்வு முடிவுக்காக கூட நான் இவ்வளவு ஆர்வமாக காத்திருந்தது இல்லை. அக்கா வந்ததும் அவளும் ஆர்வமாக என்ன நடந்தது என விசாரித்தாள். நடந்ததை கூறினேன்.

அன்று இரவு சாப்பிட்ட பின் கொஞ்ச நேரம் நடக்கலாம் என வீட்டை விட்டு வெளியே வந்த போது எனக்கொரு ரகசியம் தெரிந்தது. என் அக்கா தன் மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்பலாம் என அருகில் சென்ற போது அவள் பேசிக் கொண்டிருப்பது திருவுடன் எனத் தெரிந்தது. மெதுவாக அமைதியாக என்ன பேசுகிறாள் எனக் கேட்டேன். ஒரே ஒரு விஷயம் தெளிவாக கேட்டது.

‘என்ன வேணா முடிவு பண்ணிக்கோ திரு, ஆனா கண்டிப்பா நட்ப உடைக்கற மாதிரி வேண்டாம். அப்படியே பண்ணாலும் உடனே பண்ணிடாதே, அவ தாங்க மாட்டா, எனக்காக சரியா?”

நான் திரும்ப எனது அறைக்கு வந்து விட்டேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஒன்று மட்டும் எனக்கு தெளிவாக புரிந்தது. சுபாக்கா எனக்காக சிபாரிசு செய்கிறாள் என்று அவளை அழைத்து ‘திருவிடம் என்ன சொன்னாய்?' என்று மட்டும் கேட்டேன். ஒன்றும் தெரியாதவள் போல் ‘என்ன?' என்று கேட்டவள் மெதுவாய் உண்மையை கூறினாள். இன்று நடந்த விஷயத்தை தெரிந்து கொண்டபின் அக்கா என் மொபைலில் இருந்து திரு நம்பரை எடுத்து பேசி இருக்கிறாள். என்னை காயப்படுத்தாமல் பேச சொல்லி கோரிக்கை விடுத்திருக்கிறாள்.

எனக்கு அவள் பேசியது நல்லதற்கா? கெட்டதற்கா? என்றே புரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது. என்னை சுற்றி அனைவரும் நல்லவர்களாக, பாசமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று.

அடுத்த முறை திருவை சந்தித்த பொழுது முதலில் நான் கேட்ட கேள்வி ‘எங்கக்கா என்ன சொன்னாங்க திரு?' என்றேன். அவனும் சிறிது நேரம் ஒன்றும் பேசவில்லை என சமாளிக்க பார்த்துவிட்டு பின் சொன்னான்.

“முடிவு எதுவாக இருந்தாலும் வரலட்சுமிய காயப்படுத்தாத மாதிரி வெளிப்படுத்து-னு சொன்னாங்க”

“அவளுக்காக எதையும் மாத்தி சொல்ல வேண்டாம், உண்மையான முடிவை சொல்லு” என்றேன். அவன் புன்னகைத்தான்.

“என்னாலயும் உன்னை பிரிஞ்சு இருக்க முடியாது வரலட்சுமி, நான் உங்கூட நண்பனா இருக்கேன். எப்ப எனக்குள்ள காதல் வந்தாலும் கூச்சப்படாம சொல்லிடறேன். சரியா?”

“ரொம்ப நன்றி” என்றேன்.

எனக்கு அதன்பின் எனக்குள் நடந்த மாற்றங்களை, என்னுள் நடந்த நிகழ்வுகளை எப்போதும் மறக்க முடியாது. அதன்பின் திருவை நான் பெயர் சொல்லி அழைப்பதை நிறுத்திக் கொண்டேன்.

அவனுக்கு பிடித்த உணவுகளை அவன் தங்கையிடம் கேட்டு தெரிந்து கொண்டு சமைக்க கற்றுக் கொண்டேன். அவன் வீட்டில் அதிக நேரம் இருக்க துவங்கினேன். அவன் அதிகம் படிக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.

அவனை போலவே திரைப்படங்களை உன்னிப்பாக கவனிக்க துவங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் முழுவதுமாய் திருவை நிரப்பினேன். அவனுக்கு பிடித்திருக்கும் விதமாக மாறினேன். அது எனக்கு பிடித்திருந்தது. உண்மையில் சொல்கிறேன். நமக்கு பிடித்தவர்களுக்காக அவர்களுக்கு பிடிக்கும் வண்ணம் நம்மை மாற்றிக் கொள்வது தனி சுகம், அதை அனுபவித்தவர்களுக்கு சொல்ல தேவையில்லை. இப்போது காதலில் தனக்கு பிடித்தது போல் மாற சொல்கிறார்களே தவிர மாறுபவர்கள் குறைந்து விட்டனர்.

திருவுடன் ஒருமுறை கான்ஃபிரன்ஸ் காலில் தீபிகாவுடன் பேசுகையில் என் காதலை அவளிடமும் தெரிவித்தேன். அவள் அது விஷயமாக திருவுடன் என்ன பேசினாள் என்று தெரியாது. ஒருநாள் திரு எனக்கு ஊக்கமளிக்கும் விதமாக ஒரு மாதிரியான புன்னகையுடன் கூறினான்.

“எனக்கென்னவோ, உன்னை காதலிக்க போறனோன்னு பயமா இருக்கு”

“நீ காதலிக்கலனாலும் என் காதல் தொடரும். உன்னை விட உன்னை காதலிக்கறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு”

“வரலட்சுமி, எனக்கு கடைசி வரைக்கும் உன் மேல காதல் வரலைனா என்ன பன்னுவ?”

“நான் உன் காதலை எதிர்பார்க்கவே இல்லையே”

“நான் தீபிகாவ காதலிக்க ஆரம்பிச்சுட்டா?”

“உனக்கு பிடிச்சதெல்லாம் நேசிக்கற மாதிரி அவளையும் நேசிப்பேன்”

“உங்கப்பா உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்தா?”

“உன்னை பத்தி சொல்லி புரிய வைப்பேன்”

“ஆனா நீ மட்டும்தான என்னை காதலிக்கற? நான் உன்னை காதலிக்கலையே”

“எனக்கு அது போதும்”

“கண்டிப்பா உங்க வீட்ல இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க”

“எங்க வீட்டுக்கு தெரிஞ்சா, எனக்காக உங்களை ஒத்துக்க சொல்லி அவங்க சிபாரிசு பண்ற அளவுக்கு என்னால என் காதலை புரிய வைக்க முடியும்”

“எப்படி, சினிமால வர்ர மாதிரி தற்கொலை முயற்சியா?”

“சேச்சே, அது முட்டாள்தனம். எங்க வீட்ல என்னை பேச வச்சு கேட்கற அளவுக்கு பொறுமை அப்பா அம்மா 2 பேருக்கும் இருக்கு, என்னால என் காதலை அவங்களுக்கு விளக்கி சொல்லி புரிய வைக்க முடியும். எங்கக்கா எனக்கு ஆதரவா பேசுவாங்க”

“எப்படி இவ்வளவு நம்பிக்கையா பேசற? உன்னால இன்னும் என்னையே ஒத்துக்க வைக்க முடியலையே?”

நான் சிரித்துக் கொண்டே அவனிடம் கேட்டேன்.

“இப்ப நான் கேட்கறதுக்கு யோசிச்சு பதில் சொல்லனும். என்னை விட்டுட்டு இன்னொரு பொண்ணை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா?”

ஒரு நிமிடம் என்னையே பார்த்தான். சிரித்தான். யோசித்தான். என் கைகளை பிடித்துக் கொண்டே கூறினான்.

“நான் எப்பவும் உனக்கு மட்டும்தான்”

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS2DG9DoJnjDErz6jyls4e7dMdQ_Y0Socke16m_e-xIXZEY8aNoBg

தீபிகா சொன்ன காதலை ஏற்றுக் கொள்ளாதவன் என் காதலை எப்படி ஏற்றுக் கொண்டான் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆனால் அதை நான் அவனிடம் கேட்கவில்லை. ஏனென்றால் அதற்கான பதில்தான் எனக்கே தெரியுமே!

தீபிகா காதலிப்பதாய் பலமுறை சொல்லிக் கொண்டிருந்தாள். நான் ஒருமுறை சொல்லி விட்டு, என் காதலை தினமும் அவன் உணரும் வண்ணம் வெளிப் படுத்தினேன். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் அவள் சொன்னாள். நான் செய்தேன்.

----------------------------------------------------------------------முற்றும்-------------

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...