தனித்திரு- 1

நான் இதுப்போல் கோபப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. இன்று போல் அவமானப்பட்டதாகவும் ஞாபகம் இல்லை. வழக்கமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வருவதைப் போல் வரவும் விருப்பமில்லை. மிக வேகமாக அடியேடுத்து வைத்து வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தேன்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivCd6tYpCncs1AaCB1wX5U5kdf4a9M2oWGwbSGvZ57qpXS84To5c8nuVi99auGuIQAjQAj0oROoQvAuzEPKHi7Y1WdL8XE9-hp-Wf5KvUiz3UTmtfYtitXPVjmcprlcE3z20mS4v3wW4z8/s1600/Swathi%2520(137).jpg

கொஞ்சம் பாரமாக தெரியும் என் புத்தகப்பையும் இன்று இருப்பதை காட்டிக் கொள்ளாமல் என் தோளில் தொங்கிக் கொண்டு இருந்தது. சரியாக கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் போன மாதத்துடன் முடிந்து விட்டது. இந்த ஒரு வருடத்தில் எத்தனையோ நண்பர்களை, நண்பர்கள் வட்டத்துக்குள் வாராவிட்டாலும் தெரிந்தவர்களாக இருப்பவர்கள் என பலரைப் பார்த்து இருக்கிறேன், பழகியிருக்கிறேன். ஆனால் யாரும் இவனைப் போல் என்னிடம் பேசியது இல்லை.

இத்தனைக்கும் வகுப்பிற்கு வரும் அனைத்து ஆசிரியயைகளுக்கும் நான் என்றால் தனி இஷ்டம். அவனை சும்மா விடக் கூடாது. எதாவது செய்ய வேண்டும். நான் யார் என்று காட்ட வேண்டும். அட, அதற்குள் வீடு வந்து விட்டது. நான் என் காலணிகளை கழட்டி வீசியெறிந்ததிலும் என் கோபம் வெளிப்பட்டது.

வீட்டினுள் நுழைந்ததும் சோபாவில் என் புத்தகப் பையினை தூக்கி எறிந்தேன். அதற்கு பக்கத்தில் நானும் அமர்ந்தேன். என் கோபத்தை யாராவது கவனிக்க வேண்டும் என விரும்பினேன். அம்மா வந்தாள், கையில் டம்ளருடன். இது வழக்கம்தான். மாலை நான் வந்தாலும், அக்கா, அப்பா யார் வந்தாலும் அம்மா அதிகபட்சம் ஒரு நிமிடத்தில் தேநீர் கொண்டு வந்துவிடுவாள். அவள் சிறப்புகளில் இதுவும் ஒன்று.

டம்ளரை வாங்கி மேஜையில் வைத்து விட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரியே அம்மா கேட்டாள்.

“ஏண்டி ஒரு மாதிரி இருக்க?”

“ஒன்னுமில்லம்மா”

“சொல்லு, எதாவது பரிட்சையில ஃபெயில் ஆயிட்டியா?”

“அதெல்லாம் இல்லைம்மா”

“அப்புறம் ஏன் மூஞ்ச உர்ருன்னு வச்சுருக்க?”

“அதான் ஒன்னுமில்லைனு சொல்றேனே, விடு”

“அதானே, எங்கிட்ட என்னைக்கு சொல்லிருக்க?”

அம்மா மறுபடியும் சமையலறைக்கு சென்று அவளுக்கு பிடித்த சமையல் வேலையில் மூழ்கினாள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அம்மாவிடம் சொல்லலாம். ஆனால் இதற்கு போயா இவ்வளவு கோபம் என்று சாதாரணமாக கேட்டுவிட்டு போய்விடுவாள். அவளுக்கு இப்போதைய இளைஞர் சமுதாயத்தை தெரிந்து கொள்ள விருப்பமில்லை. நான் அம்மா செல்லம்தான். ஆனாலும் எங்களுக்குள் இருக்கும் தலைமுறை இடைவெளி குறையாமல் தான் இருக்கிறது. எனக்கு சரியான ஆள் அக்காதான். எப்போதும் எனக்கு முதல் தோழி அவள்தான். என் ரகசியங்கள் அவளுக்கு மட்டும்தான்.

அவள் வரட்டும். அவ்ள்தான் என்னை சரியாக தேற்றுவாள். அது வரை இப்படியே ‟ஹாலில் உட்கார்ந்திருந்தால் அம்மா மறுபடியும் விசாரனையை ஆரம்பிப்பாள். நேராக எங்கள் அறைக்கு சென்றேன். உடை மாற்றினேன். எனக்கு மறுபடியும் அவன் பேசியது நினைவுக்கு வந்தது. அதிகமில்லை. சில வார்த்தைகள் தான்.

உட்கார்ந்து அக்கா வாங்கி வைத்திருந்த வாரமலர்-ஐ புரட்ட துவங்கினேன். சிறிது சிறிதாக நேரம் கரைய துவங்கியது. அரை மணி நேரம் கழித்து அக்கா சுபலட்சுமி வந்து சேர்ந்தாள். அவளுக்கு தேநீர் கொடுக்கும் பொழுதே, அம்மா நிலவரத்தை விளக்கி விட்டாள். விவாதத்திற்கு தயாராகிக் கொண்டே அக்கா சுபலட்சுமி என்னைக் காண அறைக்குள் நுழைந்தாள்.

புத்தகம் சிறந்த நண்பன். நண்பனின் முக்கிய பணி கவலைகளை மறக்க செய்வது, சிறிது நேரம் படித்திருந்ததால் எனக்கு கொஞ்சம் ஞாபகம் குறைந்திருந்தது. அக்கா வந்ததும் கோபம் இருந்த இடத்தை உற்சாகம் ஆக்ரமிக்க துவங்கியது.

“என் சுபா இன்னைக்கு நேரங்கழிச்சு வர்ரே?”

“நான் எப்பவும் போலத்தான் வர்ரேன். நீதான் ரொம்ப நேரமா என்னை எதிர் பார்த்துட்டுருந்தப்ப போல, அதான் உனக்கு அப்படி தோணுது, சொல்லு என் அருமை தங்கையே, என்ன நடந்தது?”

“கிண்டல் பண்றியா?”

“இல்லைடி, சொல்லு என் ஒரு மாதிரி இருக்க?”

“சுபா, நான் எப்பவாவது எங்கிளாசில நடக்கற விசயத்த பத்தி வந்து உங்கிட்ட புலம்பியிருக்கனா?”

“ஒ, பல தடவை, போன வாரம் கூட கணக்கு பீரியட்-ல கழுத்துல இரத்தம் வருதுனு சொன்னியே?”

“அது வேற, நான் என் கிளாஷ்மெட்ஷ் பத்தி புலம்பியிருக்கேனா?”

“இது வரைக்கும் இல்லை, ஏன் யார் கூடவாவது சண்டையா?”

“இல்லை, எங்கூட திருமுருகன்-னு ஒரு பையன் படிக்கிறான். அவனை பத்தி சொல்லியிருக்கனா?”

“உங்கூடவா? ஆச்சரியமா இருக்கு, இது வரைக்கும் நீ அந்த பேர்-அ சொல்லி நான் கேட்டதா ஞாபகமில்லையே”

“என் கூடத்தான் பஸ் ஸ்டாப்-ல நின்னு ஏறுவான், இது வரைக்கும் அவனும் நானும் பேசிக்கிட்டதே இல்லை”

“இன்னைக்கு அவன் உன்னை எதாவது கிண்டல் பன்னானா?”

“இல்லை சுபா, கிளாஸ்-ல நாங்க எப்பவும் ஒரு குருப்-ஆ இருப்போம்னு தெரியுமில்லை உனக்கு, இன்னைக்கும் அப்படித்தான் கிளாஸ்லர்ந்து பஸ்கிட்ட விளையாண்டுகிட்டே போய்ட்டுருந்தோம். எங்க பசங்களாம் எங்களை கிண்டல் பன்னிகிட்டே வந்தாங்க. ஒவ்வொரு பொண்ணையும் ஒவ்வொருத்தன் கூட சேர்த்து வச்சு கிண்டல் பன்னிகிட்டு வந்தாங்க”

“இடியட்ஸ், வரலட்சுமி இது ரொம்ப கெட்ட பழக்கம், உன் ஃபிரென்ட்ஸ்-அ எச்சரிச்சுடு”

“நானும் அப்படித்தான் இப்படிலாம் கிண்டல் பண்ண கூடாதுனு அறிவுரை சொல்லிகிட்டே வரும் போது, எல்லோரும் சேர்ந்து என்னை கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க, அப்ப இந்த திரு எங்களை தாண்டி போனான். அவனும் நானும் ஒரு பஸ் ஸ்டாப்-னதும் என்னை அவன் கூட சேர்த்து வச்சு கிண்டல் பன்ன ஆரம்பிச்சுட்டாங்க. ஒருத்தன் என் பேரையும் அவன் பேரையும் சத்தமா கத்த ஆரம்பிச்சு எல்லோரும் சிரிக்க ஆரம்பிச்சுட்டங்க”

“எய், என்ன இதெல்லாம்? எனக்கு உன் ஃபிரென்ட்ஸ் நடந்துக்கற விதம் சுத்தமா பிடிக்கலை”

“முழுசா கேளு சுபா, முன்னாடி போய்ட்டுருந்த திரு திடிர்னு திரும்பி, எல்லோரையும் விட்டுட்டு ஊன்னை பார்த்து ‘வரலட்சுமி, இந்த விளையாட்டுலாம் வேண்டாம், நான் அந்த மாதிரி இல்லை'-னு சொல்லிட்டு விடுவிடுன்னு நடந்து போய்ட்டான். எல்லோரும் அமைதியாகிட்டாங்க. என்னையே எல்லோரும் பார்க்க ஆரம்பிச்சதும் எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு, என் கூட இருந்தவங்கள விட்டுட்டு வேகவேகமா வந்து பஸ்-ல எறிட்டேன்”

“சரிடாம்மா, உன் ஃபிரென்ட்ஸ் பன்னதும் தப்புதான், இனிமேல் அவங்களை அவாய்ட் பன்னிடு”

“அதை ஒத்துக்கறேன் சுபா, அவங்க பன்னது தப்புதான். ஆனால் அந்த திருமுருகன் எதுக்காக என்னை அசிங்க படுத்தனும்? கோபம் வந்தா கத்தினவனை அடிக்க வேண்டியதுதானே? எல்லோரும் நான்தான் அப்படி கத்த சொன்னதா நினைக்க மாட்டாங்களா?”

“சரி விடும்மா, அவன் எதோ முட்டாள்தனமா பன்னிட்டான். திடிர்னு அவன் பேர்-அ கத்தினதும் என்ன பன்னனும்னு தெரியாம பன்னியிருப்பான்?”

“இல்லை சுபா, அவன் முகத்துல கொஞ்சம் கூட கோபம் தெரியலை.எனக்கு என்னமோ அவன்தான் அப்படி கத்த சொல்லி இருப்பான்னு தோனுது?”

“நீ என் அப்படி நினைக்கறே? அவன் உன்னை ப்ரபோஸ் பன்ன பார்க்கிறானு சந்தேகபட்றியா?”

“ஆமா, இந்த பசங்க புத்தி இப்படித்தான் போகும். முதல்லயே அந்த பொண்ணுக்கும் இவனுக்கும் கனேக்சன்னு பரப்பி விட்டுட்டா, வேற எந்த பையனும் போட்டிக்கு வரமாட்டான் பாரு”

“பரவாயில்லையே, பசங்க எப்படி யோசிப்பாங்கனு நல்லாவே தெரிஞ்சு வச்சுருக்க”

“இப்ப நான் என்ன பன்னனும்னு சொல்லு சுபா”

“என்ன பன்னனும்னா? அந்த கத்தின பையன் கூட இனிமேல் பேசாத”

“அவனை பத்தி கேட்கலை. திருவ பத்தி கேட்கறேன்”

“அவன் உங்கிட்ட பேச முயற்சி பன்னா, மூஞ்சிலடிச்ச மாதிரி பேசி அனுப்பிடு”

“நல்ல யோசனை, நானும் அதைத்தான் முடிவு பன்னியிருந்தேன்”

“இதுக்கு முன்னாடி உங்கிட்ட பேச முயற்சி பன்னியிருக்கானா?”

“இல்லை சுபா, உண்மைய சொல்லனும்னா நான் இதுவரைக்கும் கவனிச்சதே இல்லை”

“எப்படி, பாஸ் பண்ற அளவுக்காவது படிப்பானா?”

“அதெல்லாம் நல்லாவே படிப்பான். எப்பவும் முதல் 5 ரேங்க்குள்ள வந்துடுவான்”

“வரலட்சுமி, எனக்கென்னமோ அவன் திட்டம் போட்டு செஞ்சுருப்பானு தோணலை”

“படிப்ப வச்சுலாம் ஐருத்தனை எடை போட முடியாது சுபா, அவனுக்குனு கிளாஸில ஒரு ஃபிரென்ட் கூட கிடையாது தெரியுமா?”

“யார்கூடவும் பேசமாட்டானா?”

“பேசுவான், தேவைனா பேசிப்பான். அதிகமா சிரிச்சு பேசி நான் பார்த்தது இல்லை”

“ஃபிரென்ட்ஸ்னா சிரிச்சு பேசறது மட்டும்தானா?”

“உனக்கு புரியலை சுபா, அவன் எக்ஸாம் பேப்பரை பார்த்தினா தெரியும். எல்லா கேள்விக்கும் கீ பாய்ன்ட்ஸ் வச்சு பதில் மாதிரிஎழுதமாட்டான், எதோ பி.எச்டி க்கு தீசிஸ் எழுதற மாதிரி பாடத்துல வராததுலாம் எழுதி வைப்பான்”

“நீ சொல்றததுலாம் பார்த்தா அவன் எப்பப்பார்த்தாலும் காலேஜ் லைப்ரரிலயே இருப்பானோ?”

“அப்படியும் சொல்ல முடியாது, அங்கே அதிகமா பார்த்தது இல்லை. எனக்கு தெரியாதுனு சொல்லலாம்”

“எது, எப்படியோ, நீ இப்ப நார்மல் ஆய்ட்டல்ல?”

“ஒரளவுக்கு”

“அது போதும், இனிமேல் தேவையில்லாம கிண்டல் பண்ற பசங்களோட பழகாத, அந்த பையன் உங்கிட்ட ப்ரபொஸ் பன்ன முயற்சி பன்னானா நல்லா திட்டி விட்ரு”

“சரிக்கா, அப்பா எப்ப வருவாரு? பசிக்குது”

என் கன்னத்தை கிள்ளிக் கொண்டே

“கோபம் போனதும் பசி வந்துருச்சா? வர்ர நேரம்தான், ரொம்ப பசிச்சதுனா வா இப்பவே சாப்பிடலாம்”

“இல்லைக்கா, அப்பா வந்திடட்டும்”

அக்காவுடன் பேசிய பின்பு எல்லாம் இயல்பானதாக என்னால் உணர முடிந்தது. இனி அந்த திரு பேச வந்தால் முகத்தில் அடித்தாற் போல் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். பின் அக்கா அவளுக்கு என்ன நடந்தது என்பதை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். அவளும் என்னைப் போல் ஒரு மாணவி தான்.

----------------------------------------------------------------------------தொடரும்-------------


அடுத்த பாகங்கள்

#1 / #2 / #3 / #4 / #5 / #6 / #7 / #8 / #9

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2