Ee Adutha Kaalathu - திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், தமிழ் படங்களில் எடுக்க நினைக்காத சில எதார்த்த கதைகள் உண்டு, சில பாத்திரங்கள் உண்டு, இப்போது நிறைய வித்தியாசமான இயக்குனர்கள் வரவால் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நல்ல விஷயம் தான். மலையாள திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நாயகர்களின் அர்ப்பணிப்பு, அங்கு சூப்பர் ஸ்டார்களாக இருப்பவர்கள் செருப்பு தைக்கும் பாத்திரத்திலும் நடிப்பார்கள், டாக்டராகவும் நடிப்பார்கள். அதில் வித்தியாசம் பார்ப்பதில்லை.
ரொம்ப புகழ்வது போல் தோன்றுகிறதா? மன்னிக்கவும், நான் பார்த்த படங்களை வைத்து கூறுகிறேன், அந்த வகையில் நான் ரசித்த ஒரு படத்தினை பற்றி பகிர்ந்து கொள்கிறேன். இப்படத்தில் நடித்திருப்பவர்களை இதற்கு முன் சில படங்களில் பார்த்திருக்கிறேன். இந்தரஜித் - Happy Husbants படத்தில் காமெடி ரோல் செய்திருப்பார், அனூப் மேனன் - Traffic தமிழ் 'சென்னையில் ஒரு நாள்' சரத் குமார் ரோலில் பின்னிருப்பார்.
இப்படத்தின் கதை, நான்காக பிரிக்கலாம், வறுமைக் கோட்டில் வாழும் நாயகன், எந்த வேலைக்கும் தொடர்ந்து செல்லாமல், குப்பை மேட்டில் இருந்து பொறுக்கி வரும் சாமான்களை வைத்து பொம்மை செய்து விற்கும் இந்தரஜித், கடன் காரர்களுக்கு பயந்து ஓடிக் கொண்டிருப்பவன் ஒரு புறம்.
நகரத்தில் தொடர்ந்து தனியாக தங்கி இருக்கும் வயதானவர்களை கொன்று நகைகளை கொள்ளையடிக்கும் கொலைகாரனை தேடி அலையும் கமிஷனர் அனூப் மேனன், அவர் இந்த கேஸை முடித்த பின் திருமணம் செய்து கொள்வார் என காத்திருக்கும் பத்திரிக்கையில் வேலை பார்க்கும் காதலி மறுபுறம்.
போட்டோஃகிராஃபியில் ஆர்வமிருக்கும் பெண்ணை ஒரு ஆண்மையில்லாத சைக்கோவிற்கு கல்யாணம் செய்து வைத்து அவன் செய்யும் டார்ச்சர் தாங்காமல் தினம் தினம் அழுது கொண்டிருக்கும் நாயகி, அவளது வயதான தனிமையில் வாழும் தாயார் மறுபுறம்,
ஊர் முழுக்க வட்டிக்கு கடன் கொடுத்து வசூல் செய்யும் ரவுடி கும்பல், அதன் தலைவன், அந்த கும்பலில் இருந்து பிரிந்து போன ஒரு ரவுடி, குடும்ப பெண்களிடம் நல்லவன் போல் பழகி, படுக்கையில் ஏமாற்றி நீலப்படம் எடுக்கும் ஒரு வட நாட்டு ஆசாமி இவர்கள் ஒருபுறம்,
இந்த 4 கதையையும் ஒன்றினைக்கும் ஒரு சம்பவம், ஒரு நாள், ஒரு இரவு, அதன் பின் நடக்கும் பிரச்சனைகள், அதன் தீர்வு, பாதிக்கபட போவது யார், நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் திரைக்கதை, சுபமான முடிவு என ஒரு நல்ல பொழுது போக்கான படமாக இப்படம் உள்ளது.
படத்தில் என்னை ரசிக்க வைத்த கதாபாத்திரம் சைக்கோ கணவன் தான், தனக்கு ஆண்மை இல்லாததை மறைக்க சம்பளத்திற்கு ஆள் வைத்து Romantic Sms அனுப்புவது, வசனம் எழுதி கொடுத்து தன்னை மன்மதன் போல் மனைவியிடம் சீன் போடுதல் என வெளுத்து வாங்கி இருக்கிறார், இப்படத்தின் கதை எழுத்தாளரும் இவரே.
படத்தை பாருங்கள், உங்களுக்கும் பிடித்திருக்கும், படத்தின் ட்ரெய்லர் இதோ....
உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்
வித்தியாசமான நான்கு கதைகள்... சுவாரஸ்யமான படம் போலே...
ReplyDeleteநல்லதொரு ரசனையான விமர்சனம் நன்றி..