ஸ்பெக்ட்ரம் ராஜா மீது புதிதாய் ஹவாலா வழக்கு - சிபிஐ விசாரணை
ஹவாலா முறையில் துபாய்க்கு போன ஆ.ராசாவின் ரூ.110 கோடி பணம்..:
'ரா' உளவுப் பிரிவு தகவல்:
டெல்லி: துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஆ.ராசாவின் பணம் என்று கருதப்படும் ரூ.110 கோடி ராஜேஷ் ஜெயின் என்பவரின் கணக்கில் பினாமியாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக 'ரா' உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் பணம் முறைகேடான ஹவாலா முறையில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் 'ரா' கூறியுள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, அந்தத் துறையின் சில அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார் என பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர்.
இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பொருளாதாரக் குற்றங்கள், அன்னிய செலாவணி முறைகேடுகள், வெளிநாட்டு தொடர்புகள் போன்ற அம்சங்கள் அடங்கி இருப்பதால் இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு ஆகியவற்றுடன் இந்தியாவின் வெளிநாட்டு உளவுப் பிரிவான 'ரா' உளவு அமைப்பும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விசாரணை நடத்தி வருகின்றது.
முறைகேடாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கித் தந்த ராசாவுக்கு பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் பல கோடிகளை லஞ்சமாகத் தந்திருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்தப் பணம் ராசாவுக்குத் தரப்பட்டதை இதுவரை சிபிஐயால் நிரூபிக்கப்படவில்லை.
இந்தப் பணம் வெளிநாடுகளில் ராசாவின் பினாமிகள் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதும் அமலாக்கப் பிரிவு லண்டன், மொரீசியஸ், மலேசியா, ஐசில் ஆப் மேன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணைகள் ஒரு பக்கம் நடந்தாலும் வெளிநாட்டு உளவு அமைப்பான 'ரா'வும் தனியே விசாரணை நடத்தி வருகிறது. ராசாவுக்குத் தரப்பட்ட பணம் ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போய், அங்கிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக திரும்பி வந்து பல்வேறு இடங்களில் முதலீடு ஆகியிருக்கலாம் என்ற கோணத்தில் 'ரா' அமைப்பின் விசாரணை நடக்கிறது.
இந்த விசாரணைகளில் சில திடுக்கிடும் விவரங்களை 'ரா' கண்டுபிடித்துள்ளது. ஆ.ராசா ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதை அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது.
இது குறித்து கடந்த மாத இறுதியில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் மற்றும் சி.பி.ஐ ஆகியவற்றுக்கு 'ரா' ஒரு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், துபாயில் வசித்து வரும் ராஜேஷ் ஜெயின் என்பவர் மூலம் ராசா மற்றும் அவரது கூட்டாளிகள் ஹவாலா முறையில் பல வெளிநாடுகளுக்கு பணத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.
இந்த ஜெயின் சென்னையில் ஜே.ஜி. குரூப் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் ஐக்கிய அரபு நாடுகள், ஹாங்காங், சீனா மற்றும் பல்வேறு நாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களின் வேலையே ஒரு நாட்டில் இருந்து பணத்தை ஹவாலா முறையில் இன்னொரு நாடுகளுக்குக் கொண்டு செல்வது தான்.
இவர் மூலமாக ராசா மற்றும் அவரது ஆட்களின் பணம் முறைகேடான ஹவாலா முறையில் வெளிநாடுகளுக்குப் போயுள்ளது என்று 'ரா' தனது கடிதத்தில் கூறியுள்ளது.
குறிப்பாக துபாயில் Euro eagle General Trading FZC, Global Trade Commodities DMCC and King Power Industrial Limited ஆகிய மூன்று நிறுவனங்களை ஜெயின் நடத்தி வருகிறார். இவை மூலம் ஏராளமான அன்னிய செலாவணி பணம் முறைகேடாக வேறு நாடுகளுக்குப் போயுள்ளது.
துபாயில் உள்ள Emirates NBD வங்கியில் ஜெயினின் கணக்கில் சுமார் 20 மில்லியன் டாலர் (ரூ. 110 கோடி) அளவுக்கு பிக்ஸட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் ராசாவுடையதாக இருக்கலாம் என்றும் 'ரா' குறிப்பிட்டுள்ளது.
ராஜேஷ் ஜெயினின் சகோதரர்களான தெளலத் ஜெயின், மகேஷ் ஜெயின் ஆகியோர் தான் ஜே.ஜி. குழுமத்தின் சென்னை, டெல்லி அலுவலகங்களை நிர்வகித்து வருகின்றனர். 'ரா'வின் கடிதத்தைத் தொடர்ந்து இந்த இரு அலுவலகங்களிலும் சில நாட்களுக்கு முன் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது.
மேலும் ஜெயினின் பணப் பரிவர்த்தனை குறித்து விவரங்கள் தருமாறு ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியத் தூதரகம் மூலம் சிபிஐ கடிதமும் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஜெயின் சகோதரர்களை விசாரிக்கவும் அமலாக்கப் பிரிவும் சிபிஐயும் திட்டமிட்டுள்ளன.
ஆனால் ராசாவின் வழக்கறிஞரான மனு ஷர்மா கூறுகையில், 'ரா' கடிதம் தொடர்பாக அமலாக்க பிரிவோ, சி.பி.ஐ. அதிகாரிகளோ ஆ.ராசாவிடம் விசாரணை நடத்தவில்லை என்றார்.
Emirates NBD வங்கி அவ்வளவு எளிதில் தனது வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களை வேறு நாடுகளுக்குத் தெரிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சிபிஐயின் முயற்சி எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பது தெரியவில்லை.
நன்றி: தமிழ் நாடு அரசியல்
Comments
Post a Comment