தென்னை - இயற்கையின் வரம்

நம் வாழ்வில் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துவிட்ட மரம், தென்னை. 
தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். 
 

 மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும், மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 லட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள். 
 
பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 லட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது. 
 
 
தென்னை, உயரமான தாவரம். நெட்டைத் தென்னை 70 முதல் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடியது. இது நடப்பட்டு 7-வது ஆண்டில் இருந்து 10-வது ஆண்டுக்குள் காய்க்கத் தொடங்கும். 
 
குட்டை வகைகள், நட்டு 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் காய்க்கத் தொடங்கும். இவற்றின் ஆயுள் 30- 35 ஆண்டுகள். 
 
செழிப்பான வண்டலோடு ஓரளவுக்குப் பெருமணல் கலந்த நல்ல மண்ணில் தென்னை மிகவும் செழிப்பாக வளரும். 
 
 
சரளை மண்ணிலும், குறுமண்ணிலும், கருங்களியிலும், மணற்பாங்கான இடத்திலும் நல்ல பயன் தரும் வகையில் பயிர் செய்யலாம். அந்த இடங்கள் கட்டாந்தரையாக இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் வடிந்து போகக் கூடியவையாகவும் இருப்பது அவசியம். 
 
குட்டைத் தென்னை வகைகள் குறுகிய காலத்துக்குள் பலன் தரத் தொடங்கினாலும், அவற்றில் தரமான தேங்காய் உண்டாவதில்லை. கொப்பரையும் கிடைப்பதில்லை. இவற்றை நோய்களும், பூச்சிகளும் தொற்றும் அபாயமும் உண்டு. 
 
இந்தக் குறைபாடுகளால், குட்டைத் தென்னை தோப்பாக வளர்க்க ஏற்றதல்ல என்று கருதப்படுகிறது. இருந்தபோதும் கவர்ச்சியான பச்சைக் கிச்சிலி, சிவப்புநிறக் காய்களின் அழகுக்காகவும், இளநீருக் காகவும் பயிர் செய்யப்படுகிறது. 
 
 
கொச்சி, சீனா, அந்தமான், லட்சத் தீவுகள், பிலிப்பைன்ஸ் தீவுகள், சிங்கப்பூர், ஜாவா, மலேசியா போன்ற இடங்களில் காணப்படும் தென்னைகள் இயல்பாகவே நல்ல பொருளாதாரப் பலன் அளிக்கக்கூடியவை. 
 
அந்தமான் பெருங்காய், கப்படம் என்னும் வகைகளில் உருவாகும் தேங்காய்கள் மிகப் பெரியவை. லட்சத்தீவில் பயிராகும் தேங்காய் மிகச் சிறியதாக இருக்கும். 
 
காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் நெட்டை இனம், குட்டை இனம் இரண்டையும் இணைத்து புதிய வகை உருவாக்கப்பட்டது. இது அதிக எண்ணிக்கையில் நல்ல கொப்பரைகளோடு விரைவில் காய்க்கும் தன்மை கொண்டது. 
 
 
இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதியில் 150 அங்குலத்துக்கு மேல் மழை பெய்யும் பகுதியிலும் தென்னை வளர்கிறது, கர்நாடகத்திலும், பிலிப்பைன்சில் 40 அங்குலத்துக்குக் குறைவாக மழை பெய்யும் சில பகுதிகளிலும் தென்னை வளர்கிறது. 
 
தென்னை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஏதோ ஒரு வகையில் மக்களுக்குப் பயன்படுகிறது. காயில் உள்ள பருப்பு பச்சையாக இருக்கும்போது சமையலுக்குப் பயன்படுகிறது. காய்ந்தபின் கொப்பரையாக மாறி, எண்ணை கொடுக்கிறது. தேங்காய் எண்ணையின் பயன்கள் பல. குளிர்ச்சியும், சத்தும் தரும் பானமாக, குளுக்கோஸ் நிறைந்ததாக இளநீர் உள்ளது. 
 
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். ஆக, மனிதனுக்கு இயற்கையின் வரம், தென்னை.
 
நன்றி: Tamilnadu at present @ facebook

Comments

  1. தென்னை பற்றிய சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் ஆன்றோர்மொழிகள்
    http://thalirssb.blogspot.in

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2