எதற்காக வாசிப்பு?
உரையாட துவங்கியதும் எழுந்து முதலில் அரங்கினை கவனித்தேன். எப்போதும் போல் முதல் இரு வரிசை நிரப்பப்பட்டிருக்கவில்லை.
இங்கு மட்டுமல்ல, வகுப்பறையில் துவங்கி எந்த இடமாக இருந்தாலும் முதல் வரிசையில் அமர அனைவரும் தயங்குகிறோம். உங்களை வந்து அமருங்கள் என்று நான் அழைக்கப் போவதில்லை. ஆனால் ஏன் இங்கு அமர தயங்குகிறிர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறேன். யாரேனும் பதில் சொல்லுங்கள்.
ஒரு பெண் எழுந்து "முன்வரிசைல இருக்கவங்களைப் பாத்து ஏதாவது கேள்வி கேட்டுருவாங்கன்னுதான் சார்"
கைத்தட்டினேன். என்னுடன் மற்றவர்களும் தட்டினார்கள்.
பதில் தெரியாத கேள்விகளை எதிர்கொண்டு விடப்போகிறோம் என்று கல்லூரியிலும் பயம். இது உங்களுக்குச் சரியாகப் படுகிறதா? உங்களை அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள் என்று சொல்லமாட்டேன். அது அவரவர் ஆர்வம் சம்பந்தப்பட்டது. ஆனால் கேள்விகளைத் தவிர்க்க ஓடத் துவங்கினால் எது வரை ஓடுவீர்கள்? இறப்பு வரை உங்களது கருத்துக்களைக் கேட்கவாவது வினாக்கள் துரத்திக்கொண்டுதான் இருக்கும்.
அவனுக்கு, அவளுக்கு எதுவும் தெரியாது என்று முத்திரை குத்தி உங்களை ஒதுக்கி விட்டால் எப்படி இருக்கும்? இப்போது எப்படியோ, மாணவ பருவத்தைக் கடந்ததும் நீங்கள் எதிர்கொள்ளப்போவது உதாசீனத்தையும் அவமானத்தையும்தான்.
இன்று இணை பிரியாமல் உங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் நண்பர்கள் "பிசியா இருக்கேன், அப்புறம் பேசறன்" என்று சொல்வதை முதுகில் குத்துவதாக உணர்வீர்கள்.
எப்போதும் மந்தையாக இருப்பது உங்களுக்கென்ற ஆளுமை உருவாவதை தடுக்கும் விசயமாகும். உங்களுக்கெனப் பிடித்த ஏதாவது ஒன்றினை தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். அதற்கு வாசிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாசிப்பு என்பது வெறும் இலக்கிய வாசிப்பல்ல. தினசரி செய்தித்தாள் வாசிப்பதும் வாசிப்பே, இணையதளங்களில் வெளியாகும் ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை வாசிப்பதும் வாசிப்பே.
அதை எதற்கு வாசிக்க வேண்டும், ரீல்ஸில் பார்த்துக் கொள்கிறேன் என்று கேட்கிறிர்களா?
சரி என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்.
உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் மொபைலில் பேட்டரி சதவீதம் குறையக் குறைய மனம் பதட்டமடைகிறது?
பாதிக்கு மேல் கை உயர்த்தினர்.
உங்களில் எத்தனை பேருக்கு மொபைலை நோண்டாத சமயத்திலும், உறங்கும்போதும் கூடப் போன் அடிக்காமலேயே அடிக்கும் சத்தம் கேட்கிறது?
முக்கால்வாசிக்கும் மேல் கை உயர்த்தினர்.
இதன் பொருள் என்ன தெரியுமா?
ஒரு பெண் எழுந்து அடிக்ஷன் என்றார்.
இதற்கெல்லாம் இப்போது De-addiction centres வந்து கொண்டிருக்கின்றன என்பது பற்றிக் கேள்விப்படுகிறிர்களா?
ஆம் என்று தலையாட்டினார்கள்.
ஒரு ரீல்ஸ் எவ்வளவு நேரம்?
30 செகண்ட்
சரி, நான் கேட்கிறேன். உங்களில் யார் அதிக நேரம் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்திருப்பது? நேரத்தை சொல்லுங்கள்.
முக்கால் மணி நேரம்
ஒரு மணி நேரம்
ஒவ்வொன்றாக ஏலம் விட அதிகப் பட்சமாக 4 மணி நேரம் தொடர்ந்து ரீல்ஸ் மட்டுமே பார்த்ததாக ஒரு மாணவன் வெற்றிப் பெற்றான்.
சரி ரீல்ஸ் பார்ப்பதில் உங்களுக்கு என்ன கிடைக்கிறது? ஆக்கப்பூர்வமான பதில் இருந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்.
ஒரு பெண்ணின் பதில், "மனம் சோர்வாகும் பொழுது மோட்டிவேசனலுக்காக ரீல்ஸ் பார்ப்போம். சரியாகிவிடும்"
அப்படியா? என்று குறும்பாக மாணவர் பக்கம் திரும்பினேன். சிரித்தார்கள்.
டோபமைன் என்ற வார்த்தையை யாராவது கேள்விப்பட்டதுண்டா?
எக்சைட்மெண்ட் ஆகும்போது சுரக்கும் வேதிப்பொருள் - ஒரு மாணவி.
இந்த டோபமைன்தான் அனைத்து வித பழக்கங்களுக்கும் நம்மை அடிமையாக்கும் வஸ்து. ஒவ்வொரு முறையும் இதன் சுரப்பை வேண்டியே புகைக்கிறோம், குடிக்கிறோம், ரீல்ஸ் பார்க்கிறோம்.
இந்தத் தலைமுறை மேல் எனக்கு வருத்தமுண்டு. கோபமில்லை. ஏனென்றால் உங்கள் பக்கம் காரணமுண்டு. விவரம் தெரிந்த வயதிற்குப் பின் டீவியை வாழ்க்கையில் பார்த்தவர்கள் நாங்கள். நீங்கள் பிறக்கையிலேயே செல்போன் வந்து விட்டது.
முழுக்க முழுக்கக் கவனச்சிதறல்களுக்கான காரணங்களுக்கு நடுவே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறை. உங்களுக்கு வாசிப்பு என்றால் என்ன, எதற்கது தேவை என்று மட்டும் சொல்கிறேன். கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள். அதன் பின் உங்கள் விருப்பப்படி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்களெல்லாம் மொழிப்பிரிவு மாணவர்கள் அல்லவா?
என்றாவது உங்கள் விடுதிகளில் அல்லது வேறெங்காவது, மற்றப்பிரிவு நண்பர்களிடையே பேசுகையில், "உங்களுக்கென்ன எளிமையான மொழிப்பாடம்தானே படிக்கிறிர்கள் என்று கேலி செய்யப்பட்டதுண்டா?"
ஆம் ஆம் என்று கோரசாகப் பதில்கள்
மனிதன் கண்டுபிடித்த மிகப்பெரிய ஆயுதம் எது தெரியுமா? மொழி.
மற்ற உயிரினங்கள் மரபணுக்களில் அறிவை அனுபவத்தைக் கடத்திக் கொண்டிருக்க, மனிதன் மட்டும்தான் மொழிவழி அடுத்தத் தலைமுறைக்குத் தன் அனுபவத்தைப் பகிரத் துவங்கினான்.
ஒரு பழக்கம் அடுத்தத் தலைமுறைக்குச் செல்ல மற்ற உயிரினங்களுக்கு நூறாண்டுகள் ஆகுமெனில் மனிதனால் ஒரு நாளில் அடுத்தத் தலைமுறைக்குக் கடத்த முடிந்தது. காரணம் மொழி.
கற்பனா சக்தியும் மொழியும்தான் மனிதனை உலகம் முழுக்க அவனுடையாக்க உதவியது.
இரு மலைகளுக்கிடையே வரிக்குதிரை கூட்டத்தை விரட்டினால் எதிரே இருந்து நிதானமாக அம்படித்து நூற்றுக்கணக்கில் வேட்டையாடலாம் என்று ஒருவனுக்குக் கற்பனையில் உதித்திருக்கலாம். அதை அவன் கூட்டாளிகளுக்குக் கடத்தியது மொழி.
சத்தமாக, வார்த்தைகளாக, எழுத்துக்களாக மொழியின் வளர்ச்சிதான் மனிதனை ஆளாக்கியது. அவன் வளர வளர மொழியையும் வளர்த்தான். அறிவை கடத்த இப்போது வரை வேறு ஆயுதமே இல்லை.
மெசபடோமியாவில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு களிமண்ணில்தான் எழுதியிருக்கிறார்கள். ஈரமாக இருக்கையில் எழுதி காய வைத்துவிடுவார்கள். அப்படி ஒரு நூலகமே இருக்கிறது. இப்போதும் பாதுகாக்கப்படுகிறது.
அதன் பின் ஓலைச்சுவடி, பின்னர்க் காகிதம். இப்போது டிஜிட்டல். ஒரு நொடியில் தகவலை உலகம் முழுக்கக் கொண்டு செல்வது தொழில்நுட்பம் என்றாலும் இப்போதும் அதற்கான ஊடகமாக இருப்பது மொழியல்லவா?
இனி மொழியைக் குறைத்து பேச அனுமதிக்காதீர்கள். /கைத்தட்டினார்கள்/
நான் சொன்னதிலேயே மொழி வழி அறிவுக்கடத்தல் புரிந்துருக்கும். சரி அறிவு அறிவு என்று எதைச் சொல்கிறேன்?
உங்களுக்கு எளிமையாகப் புரிய வேண்டுமென்றால் common sense. அது எதற்கு? இளிச்சவாயனாக இல்லாமல் இருக்க.
ஏமாறாமல் வாழ அறிவு வேண்டும். யார் ஏமாற்றுவார்கள். எல்லோரும்தான். அறிவற்றவனைச் சுரண்ட தயங்காத சமூகம் நம்முடையது.
நீங்கள் நாளை நல்ல வேலைக்குச் செல்லலாம். கை நிறையச் சம்பாதிக்கலாம். ஆனால் அதை வைத்து என்ன செய்வது என்பதற்கு இந்த common sense அவசியம். இல்லையென்றால் மொத்தமாக உங்களிடமிருந்து உருவி விடுவார்கள்.
ஏகாதிபத்தியம் என்ற வார்த்தையை எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கும். இந்தியாவிலிருந்து மூலப்பொருட்களை அடி மட்ட விலைக்கு வாங்கி எடுத்து சென்று உற்பத்தி செய்து மீண்டும். இங்கேயே கொள்ளை விலைக்கு விற்பார்கள். அப்படியாக இந்தியாவின் செல்வமும் உழைப்பும் சுரண்டப்பட்டன. அதுதான் ஏகாதிப்பத்தியம்.
இப்போதும் அதுதான் நடக்கும். எதற்கென்றே தெரியாமல் நீ சம்பாதிப்பாய், தேவையோ இல்லையோ அடுத்தடுத்து புதிது புதிதாக எதையாவது வாங்கிக் கொண்டே இருப்பாய், உனக்கென ஒரு ஆளுமைத்திறன் இல்லாமல் உன்னிடமிருந்து உழைப்பும் பணமும் சுரண்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட வேண்டியதுதான் பொது அறிவு எனப்படும் common sense.
தஞ்சாவூர் கோவில் கோபுரம் நிழல் விழாது, உண்மை தமிழன்னா 10 பேருக்காவது ஷேர் பண்ணுன்னா யோசிக்காம பன்றவனுக்கு இந்தப் பொது அறிவு சுத்தமா இருக்காது. அது மந்தை மன நிலை.
உனக்கெனத் தனிப்பட்ட ஆர்வம், தனிப்பட்ட விருப்பம் இருக்கும். அது எதில் என்று கண்டுபிடி. சிலருக்கு கல்வெட்டுப் பிடிக்கலாம். சிலருக்கு கணிணி பிடிக்கலாம். அந்தந்த துறைகளில் வெளிவந்த புத்தகங்களை வாசித்து உன்னை மெருகேற்றுவதற்குப் பெயர்தான் கல்வி. அதைக் கண்டுபிடிக்கத்தான் பள்ளிக்கூடங்கள், மெருகேற்ற கல்லூரிகள்.
இதைத் தாண்டி என்ன வாசிப்பு? எதற்கு வாசிப்பு?
முன்பே சொன்னது போல் ஏமாளியாக இல்லாமலிருக்க, தனிப்பட்ட ஆளுமையை வளர்த்துக் கொள்ள.
தொடர்ச்சியாகச் செய்தித்தாள் வாசிக்கும் மனிதனை அவ்வளவு சீக்கிரம் யாராலும் ஏமாற்ற முடியாது.
செய்திகளை வாட்சப்பில் தயவு செய்து வாசிக்காதீர்கள். இதழ்களில் வாசியுங்கள். மொழி வசமாகப் பாலபாடம் அது.
அடுத்து புத்தக வாசிப்பு. இதைப் பலரும் இலக்கிய வாசிப்புடன் குழப்பிக் கொள்கிறார்கள். அது வேறு. பாடங்களில் கொடுக்காத பலவற்றை நாம் தேடி தேடி படித்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். இப்போது கிடுகிடுவென்று தங்கம் விலை உயர்ந்து வருகிறதே, என்ன காரணம்? ஒவ்வொரு பொருளின் விலையும் எதைப் பொருத்து மாறுகின்றன? இதெல்லாம் பொது அறிவு.
படிக்காதவர்களுக்கும் உங்களுக்குமான வித்தியாசம் கையெழுத்து போடுவதும் ஒரு பட்டப்படிப்புக்கான சான்றிதழும் மட்டுமல்ல. பொது அறிவு. அது இல்லையென்றால் நாட்டு நடப்புகளை விடாமல் கவனிக்கும் படிக்காதவர்களால் நீங்கள் இடக்கையால் தள்ளப்பட்டு விடுவீர்கள்.
உலகின் மிகப்பெரிய அவமானப்படுத்தும் வார்த்தை படித்த முட்டாள். உங்களைப் பார்த்து அவ்வசவு வீசப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வாசிப்பு அவசியம்.
பொது அறிவு எனக்குப் போதுமான அளவு இருக்கிறது. நான் தொடர்ந்து வாசிக்க வேண்டுமா?
ஆம். கட்டாயம் வாசிக்க வேண்டும். ஆளுமை உருவாக்கத்துக்கு அது மிக மிக அவசியம்.
அக்பர் என்ற பெயரை கேள்விப்பட்டதுண்டா? எழுத படிக்கத் தெரியாத முகலாயப் பேரரசர். ஆனாலும் பெரிய நூலகமும் அதில் உள்ளவற்றை வாசித்துக் காட்டுவதற்கென்று பணியாளர்களையும் வைத்திருந்தார்.
கலைஞர் கருணாநிதி, தெரியுமா? யார் அவர்?
அவர் ஏன் கருப்புக் கண்ணாடி போட்டிருப்பார் தெரியுமா? அவருக்கு ஒரு கண்ணில் பார்வை கிடையாது. ஒரு கார் விபத்தில் பார்வை பாதியான பின்னும் தொடர்ந்து வாசிப்பார். அவரைப் போலத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்களில் அவரளவு வாசிக்க நேரம் ஒதுக்க வேறு யாராலும் முடியாது.
அம்மையார் ஜெயலலிதா? சமீபத்தில் அவர் வீடு குறித்து வழக்கு விவரம் வெளியானதே, எத்தனை புத்தகங்கள் வைத்திருந்தார் என்று கவனித்தீர்களா? தெரியாதவர்கள் இணையத்தில் இது குறித்துத் தேடி பாருங்கள்.
மார்க் ஸீக்கர்பர்க், பில்கேட்ஸ், வாரன் பஃபெட் இவர்கள் எல்லாம் டாப் 10 பணக்காரர்களாக இருந்தும் எதற்காக வாசிக்கிறார்கள்?
வாசிப்பு என்பது மனதை/மூளையைக் கூர் தீட்டுவது. அதன் பலனை ஆருடமாகச் சொல்ல வேண்டுமா?
உங்களுக்கென ஓர் ஆளுமை வேண்டுமா? வாசியுங்கள்.
Comments
Post a Comment