பெருந்திணை - படலம் - 2
சைந்தவி வீட்டிற்குள் நுழைந்தாள். மகனை மாமியார் கிளப்பி அனுப்பியிருப்பார். காலை கிளம்பும் போது ஒருமுறை குளித்திருந்தாலும் மீண்டுமொரு முறை குளிக்க சென்றாள். மனம் தானாக அசோக்கை நினைத்தது.
என்னவாயிற்று இவனுக்கு? ஏதோ புதிதாய் பார்க்கிறான், புதிய நபராய் தெரிகிறான், நடந்துக் கொள்கிறான். 5 வருடங்களுக்கு மேல் அவனுடன் பழக்கமுண்டு. நெருங்கி பழகவில்லை என்றாலும் நாகரீகமான நபர்தான். அனிதாவும் இதுவரை அதிகம் தவறாக ஏதும் சொன்னதில்லை. சொன்ன குறைகளும் பொதுவாக ஆண்களிடம் குறிப்பாக கணவர்களிடம் பெண்கள் காண்பவைதான்.
இல்லை, நானாக தவறாக நினைக்கிறேனா? ம்ஹூம், இல்லை, அவன் சரியில்லை. ஆனால் எதற்காக என்னை? நான் அவன் மனைவியின் தோழி அல்லவா? எப்படி பயமில்லாமல்? தயக்கமில்லாமல்? அனிதாவிற்கு தெரிந்தால் என்னவாகும்? என்னை தவறாக நினைப்பாளோ? நான்தான் இதை ஆரம்பித்தேன் என்றோ, என்னால்தான் இப்படி என்றோ நினைப்பாளோ?
தான் ஏதாவது தவறு செய்தோமா? ஏதாவது உரிமையாக அத்து மீறி பேசினோமா? யோசிக்க யோசிக்க சைந்தவிக்கு அசோக் மேல ஆத்திரமாக வந்தது.
“நாய்….” என்று மனதிற்குள் திட்டத் துவங்கியவள் அவன் தவறு செய்கிறான் என்று உறுதியாகத் தெரியாமல் முடிவுக்கு வர வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டாள்.
ஒரு பெண்ணிடம் எடுத்ததும் கெட்ட பெயர் எடுத்துவிட்டால் பிரச்சனையில்லை. நல்லவன் என்ற நம்பிக்கையை பெற்று விட்டால் நாளை நீங்களே சென்று நான் அப்படி இல்லை என்று சொன்னாலும் “உனக்கு ஒன்னும் தெரியாது, சும்மாரு” என்று விடுவார்கள்.
சைந்தவி குளித்து விட்டு வந்து சாப்பிட அமர்ந்தாள். மாமியார் அவர் அறையிலிருந்து வெளிவந்தார்.
“நீங்க சாப்பிட்டிங்களாம்மா?”
“ஆச்சு, நீ சாப்பிடு”
“அவர்?”
“கேட்டேன், சாப்பிட்டுக்கறன்னுட்டான், சரிடாப்பான்னுட்டு வந்துட்டேன்”
“ஏன் நின்னு கூட ரெண்டு வார்த்தை பேசறதுதானே?” கேட்கையில் சைந்தவிக்கு சிரிப்பு வந்தது.
“அடப்போடி, காலைலயே வள்ளுன்னு விழுவான்”
கார்த்திக், சைந்தவியின் கணவன், ஐடி ஊழியன். வாரத்தில் மூன்று நாட்கள் வீட்டிலிருந்தபடி வேலை பார்ப்பான். இரண்டு நாட்கள் மட்டும் அலுவலகம் செல்வான். அவனுக்கான டைம் ஷிப்ட் இதுதான் என்று உறுதியாக சொல்ல முடியாது. வீட்டிலிருக்கும் அவனுக்கான அலுவலக அறைக்குள் யாரும் வருவதையே அவன் பெரிதாக விரும்ப மாட்டான். தன்னை யாரும் எதிலும் குறை சொல்லி விடக்கூடாது என நினைப்பவர்களுக்கே இருக்கும் பிரச்சனைதான். அதீத வேலை விரும்பித்தனம்.
வேலையில்லாத சமயங்களில் சுத்திப் போடலாம். எந்த குறையும் கிடையாது. அதிர்ந்து கூட பேச மாட்டான். சமயங்களில் இருவரும் ஒருவர்தானா என்ற சந்தேகம் வரக்கூட வாய்ப்புண்டு.
சாப்பிட்ட பிறகு மாமியார் டீவியை போட்டபடி காய்கறி செட்டப்புடன் அமர, சைந்தவியும் ஒரு சோஃபாவில் காலை நீட்டி படுத்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் பார்க்கத் துவங்கினாள். சற்றைக்கெல்லாம் போரடித்து விட்டது. இது போன்ற சமயங்களில் இன்னொரு பொழுது போக்கும் இருக்கிறது. இன்பாக்சில் வந்திருக்கும் வழியல்களை படிப்பது.
மீசை கூட முழுதாக முளைத்திருக்காது, ஆனால் இவளுடலை அங்குலம் அங்குலமாக வர்ணித்திருப்பான். நீ மட்டும் என் கூட இருந்தா அப்படியே உன்னை…… என்று துவங்கி அவனுக்கு ஆர்கசமாகியிருக்கும் வரை வார்த்தைகளிலேயே மொத்த சோலியையும் முடித்திருப்பான்.
இன்னொரு வகை உண்டு. ரொம்ப நாகரீகமாக வர்ணிப்பது, எப்படியென்றால் 2 வார்த்தைகள்தான். ஆனால் கவனிக்க வைக்கும்படியானதாக இருக்கும். மகிழ்ந்து அதற்கு இதயத்தை இறைத்தால் போதும், அடுத்து இவன்களும் அங்குதான் வந்து நிப்பார்கள்.
சைந்தவிக்கு இந்த இன்பாக்ஸ் இம்சைகளால் எப்போதும் மனம் பாதிப்படைந்ததில்லை. பொழுதுபோக்க வேடிக்கையாக இருக்கும் அவ்வளவுதான். அதற்காகவே வாரத்திற்கு ஒன்றிரண்டு படங்களை பொதுவெளியில் போட்டுவிட்டு மற்றவற்றை நட்பு வட்டத்தோடு மட்டும் பகிர்வது வழக்கம்.
ஏதோ நினைவு வந்தவளாக, நோட்டிபிகேசனில் அசோக் தன் படங்களை ஏதும் கவனித்ததாக இருக்கிறதா என தேடிப் பார்த்தாள். ம்ஹூம், அவன் இந்த பக்கம் வந்த தடமே இல்லை. எதற்கும் பார்க்கலாம் என்று அவன் ஐடியை சென்று பார்த்தாள். நேற்று கூட கடற்கரைக்கு சென்ற காணொளியைப் பகிர்ந்திருந்தான். காகிதத்தில் ஏதோ எழுதி, கண்ணாடிக் குடுவையில் போட்டு, கடலுக்குள் வீசி எறிகிறான். அவ்வளவுதான். 30 வினாடிதான் இருக்கும்.
என்ன எழுதியிருப்பான்? கமெண்டில் யாரும் கேட்டு சொல்லியிருப்பானோ என்று தேடிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்ததை போல கேட்டிருந்தார்கள். ஆனால் எல்லோருக்கும் புன்னகைக்கும் பொம்மைப்படமே பதிலாக அவனிடமிருந்து கிடைத்திருந்தது.
ஒருவேளை என்னைப் பற்றி எழுதியிருப்பானோ? வாலி படத்துல வர மாதிரி. உடனே யூடியுப் சென்று அக்காட்சியை ஓடவிட்டு பார்த்தாள்.
“Pen ஐ மட்டுமில்லை, உன்னையும்தான்”
அந்த காகிதத்தை அண்ணன் அஜித் மென்று முழுங்கிய கணத்தில் சிம்ரன் கொடுக்கும் ரியாக்சனை கூர்ந்து கவனித்தாள்.
சேச்சே, ரொம்ப ஓவரா கற்பனை பண்ணிக்கறோம். ஏதோ ரெண்டுவாட்டி பார்த்தான். அவ்வளவுதானே? யார்தான் பார்க்கலை? நாமளும் நல்லாதானே இருக்கோம் என்றபடி முன்பக்க கேமராவை ஆன் செய்து கையை தூக்கிப் பிடித்துப் பார்த்தாள். நன்றாக இருக்கவே நாக்கை ஒருபக்கமாக நீட்டி படமெடுத்தாள். அதை பதிவிடலாமா என்று யோசித்து விட்டு, photo edit app ல் கொஞ்சம் பட்டை தீட்டி பதிவேற்றினாள்.
முதல் இதயம் அசோக்கிடமிருந்து வந்ததும் படுத்திருந்தவள் வெடுக்கென எழுந்து அமர்ந்து விட்டாள்.
கமெண்ட் ஏதாவது வருமா என்றே போனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
- தொடரும்
Comments
Post a Comment