ஒரு கைதியின் டைரி
எனக்கு தெரிந்து யாரிடமும் இந்த பழக்கம்
இல்லை, யாரை பார்த்து ஆவல் கொண்டேன் என்றும் தெரியவில்லை, எட்டாம்
வகுப்பில் இருந்தே எனக்கு டைரி எழுதும் ஆவல் இருந்தது. ஒன்பதாவது
படிக்கையில் என் தந்தைக்கு LICல் கொடுத்த டைரியை வைத்து நான்கு நாட்கள்
எழுதி இருப்பேன், படிக்காமல் காதல் கவிதை எழுதுகிறான் என புகார் போனது.
நான் அதற்கென தனியாக ஒரு குயர் நோட்டு வாங்கி வைத்து எழுதி கொண்டிருப்பது
வீட்டிற்கு தெரியாது, ஆனால் பாவம் கவிதை நோட்டை காப்பாற்றுவதற்கு வேறு வழி
தெரியாமல் டைரியை அப்பாவிடம் பழி கொடுத்தேன், அவர் அதை எரித்து விட்டு
படிப்பை கவனிக்க சொன்னார், நான் நல்ல பிள்ளையாக கவிதைகளில் பயிற்சி எடுத்து
கொண்டிருந்தேன்…
பின்னர் 2005ம் வருடம் கல்லூரி விடுதியில்
நிறைய நேரமும் தனிமையும் கிடைக்க முழுமையாய் டைரி எழுத துவங்கினேன்.
அதுவும் ஆங்கிலத்தில். ஏனேனில் நான் +2 வரை தமிழ்வழிக்கல்வியில் பயின்றவன்.
பொறியியல் படிப்பினை ஆங்கிலத்தில் எதிர்கொள்ள சிரம்ப்பட்டேன். டைரியை
ஆங்கிலத்தில் எழுத முயற்சித்தால் நண்பர்கள் உதவியுடன் அம்மொழியினில்
தேறலாம் என முயன்றேன், நல்ல பலனும் கிடைத்து. அடுத்த வருடம் முதல் தமிழில்
எழுதினேன்.
டைரி எழுதுவதா? யாரேனும் படித்து
விட்டால் என்ன ஆவது? என்ற அச்சம் வருவது இயல்புதான், எனக்கும் வந்தது, அந்த
அச்சம் விலகியதற்கு ஒரு சுவாரசியமான சம்பவம்தான் காரணம்…
என் அறைத்தோழன் ஒருவன் தனது பிறந்தநாளன்று
எங்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு சாக்லேட் வாங்கி கொடுத்து விட்டு,
அவனது தோழிக்கு 60₹க்கு பெரிய சாக்லேட் வாங்கி கொடுக்க என்னையும் உடன்
அழைத்து சென்றிருந்தான். இச்சம்பவத்தை நான் எனது டைரியில் எழுதி வைக்க, சில
நாட்கள் கழித்து எங்களது மற்றொரு நண்பன் பொழுது போகாமல் எனது டைரியை
எடுத்து படித்து சாக்லேட் விஷயத்தை அறிந்து கொண்டான். மெதுவாய் அவனிடம்
இதைப்பற்றி பேச்சை எடுத்து பெரிய தகராறில் முடிந்தது. சமாதானப்படுத்திய
நண்பர்கள் கடைசியாக சொன்ன தீர்ப்பு “யாரும் கதிரவன் டைரியை படிக்க கூடாது”
என்பது தான்.
2005 டைரி மட்டும் தான் நானாக வாங்கினேன்.
அதன் பின்னர் வருட கடைசியில் நண்பன் ஒருவனுடன் கடை கடையாய் அலைந்து
தேர்ந்தெடுப்போம், போம் என சொல்லக்கூடாது, அவன்தான் தேர்ந்தெடுப்பான்.
ஒவ்வொரு வருட இறுதியிலும் ஏதேனும் வேலையாக வேறு மாவட்டங்களுக்கு செல்கையில்
அங்கிருந்து டைரி வாங்குவதை வாடிக்கையானது.
கல்லூரி முடிந்த பின்னர் அவன் வேறு
மாநிலங்களுக்கு வேலைக்கு செல்ல துவங்கினான். ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு
மாநிலம். சிவில் படித்தவர்களின் தலைவிதி அப்படி. நான் தமிழ்நாட்டை
பார்ததுக்கொள்ள ஆள் வேண்டுமென்று இங்கேயே இருந்துவிட்டேன். அவனும் விடாமல்
வருடாவருடம் தவறாமல் டைரி வாங்கி அனுப்புவான்.
கோவை வந்த பின்னர் டைரி எழுத சரியான
சூழல் அமையவில்லை. அதிக நேரம் இணையத்தில் செலவிடுவது முக்கிய காரணம். இந்த
வருட துவக்கம் முதல் வாழ்வில் பல புது பிரச்சனைகள்(யாரும் எனக்கு
திருமணமானதை யோசிக்க வேண்டாம்). இன்று காலை வேறு எதையோ தேடப்போக நண்பன்
அனுப்பிய 2015க்கான டைரி கிடைத்தது.
ஒன்னே முக்கால் வருடங்களுக்கு பின்னர்
மீண்டும் அமர்ந்து டைரி எழுதினேன். கொஞ்சம் தளர்வாய் உணர்ந்தேன்.எனது பல
எண்ணங்களுக்கு வடிகாலாய் விளங்கும் எனது 10 வருட டைரி எனும் நண்பனுடன் இனி
தினமும் உரையாடலாம் என்றிருக்கிறேன்.
அட, அதென்ன கைதியின் டைரி என
யோசிக்கிறீர்களா? எனது டைரியில் பல வாக்குமூலங்கள் இருக்கின்றன. மாட்டினால்
என்னுடன் எனது பல நண்பர்கள் அவர்களது பெற்றோர் & மனைவி வாயிலாக
மரணதண்டனை பெறுவார்கள். அதை குறிக்கவே “கைதியின் டைரி” எனும் தலைப்பு.
என் மனைவியிடம் சிக்க வைக்கலாம் என யோசிக்கும் நண்பர்களின் கவனத்திற்கு..
“ஏற்கனவே தண்டனை நிறைவேற்றப்பட்டு கொண்டுதான் இருக்கிறது”
http://www.thoovaanam.com/?p=846
Comments
Post a Comment