பெருந்திணை - படலம் 1

18+ வயதின் இளையோர், ஒழுக்கத்தை உயிரினும் ஓம்புவோர், இலக்கிய வரையரையாளர், முக்கியமாய் காமத்தை சபிப்போர் இத்தொடரினை படிப்பதை தவிர்க்கவும்.

#பெருந்திணை படலம் - 1

அனிதாவிற்கு தூக்கம் கலைந்து பொழுது பக்கத்தில் ஆளில்லை. மெலிதான பதற்றத்தோடு அரைக்கண்ணிலேயே தேடவும் அசோக் படுக்கையில்தான் அமர்ந்திருந்தான். கொஞ்சம் தள்ளி கைகளால் முகத்தைத் தாங்கியபடி கண்களை மூடியிருந்தான்.

“ஓய்”

“ம்”

“என்ன இப்படி உக்காந்துருக்க?”

“தூக்கம் போச்சு, எழுந்து போகவும் மனசில்லை” என்றான் கொட்டாவி விட்டவாறே…

அவன் வெற்று முதுகில் கன்னம் வைத்துக் கொண்டாள். பின் அப்படியே துழாவி சதையிருந்த இடமொன்றினை மென்மையாகக் கடித்தாள். 

“ம்ம்” என்றான்.

“வலிக்கலை?” 

“வலிக்குது”

“வெளிப்படையா கத்தக்கூட மாட்டியா?” என்றவாறு அழுத்தமாக கடித்தாள். இம்முறை நெளிந்தவன், அவளைப் பிடித்து தள்ளி, மேலே ஏறிப் படுத்து, கன்னங்களைக் கடித்தான். அவள் பலமாகக் கத்தினாள்.

“நீ கத்தறதை கேட்டா காலைக்காட்சின்னு நினைச்சுப்பாங்கடி” என்றான். சிரமப்பட்டு அவனை புரட்டித் தள்ளினாள்.


“அதெல்லாம் இன்னைக்கு கிடையாது, எனக்கு இன்னைக்கு நேரமா போகனும்” என்றவாறு வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள். இவன் மீண்டும் படுக்கையில் வசதியாக படுத்தபடி, தன் மொபைலை கையிலெடுத்தான்.

“ஏன் திரும்ப படுக்கற? எழு”

“எனக்கு காஃபி வேணும்”

“ம் பொறு” என்றவாறு அவள் நகர, அவன் மொபைலில் வாட்சப்பை திறந்தான்.

அனிதா சமையல் வேலைகளை ஒவ்வொன்றாக செய்யத் துவங்கவும் அசோக்கும் படுக்கையிலேயே காஃபியை குடித்து விட்டு அவனது வழக்கமான வேலைகளை ஆரம்பித்தான். முதலில் வாஷிங்மெஷினை ஓடவிட்டு விட்டு, பிரஷும் போனுமாக காலைக் கடனை முடித்தான். வந்ததும் அனைத்து அறைகளையும் கூட்டிப் பெருக்கினான். இடையிடையே ஒலிக்கும் பாடல்களை மாற்றுவதும் அவனது பட்டியலில் ஒரு வேலைதான்.

அடுத்து கிச்சனுக்கு வந்து சிங்கில் கிடக்கும் பாத்திரங்களை எடுத்து கழுவத் துவங்கினான். அனிதா சென்று தனியறையில் உறங்கிக் கொண்டிருந்த மகன் ஆதியை எழுப்பினாள். அவன் எழ முரண்டு பிடிக்கவும் அசோக்கை அழைத்தாள். அவன் வரவும் இவன் உர்ரென்றவாறே எழுந்துக் கொண்டான். 

அந்த வீட்டில் இது ஒரு வழக்கம். காலை 8 மணிக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு, குளித்து தயாராகி விட வேண்டும். அடுத்து நிதானமாக அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிடுவார்கள். ஆதிக்கு பள்ளிக்கு செல்ல 8.30 க்கு வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும். அவன் சென்ற பின், இவர்கள் இருவருக்கும் குறும்புத்தனம் பற்றிக் கொள்ளும்.

பெரிதாக ஒட்டி உறவாட வேண்டியதில்லை. ஆளுக்கொரு அறையில் இருந்தாலும் கூட அந்த நெருக்கம் இருக்கும். எல்லாம் வார்த்தைகள் வழியாக. முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைகளின் வழி கொஞ்சலும் நல்ல வார்த்தைகள் வழி கிண்டலுமாக

“நேத்து என் டீம்மெட் பிரகாஷ் இல்ல, 5 வயசு சின்னவன், கண்ணை பார்த்தே பேசமாட்டேங்கறான். “

“வேற எதை பார்த்தான்?” என்றபடி மூவிடங்களையும் தடவிக் கேட்பான். அவள் நெளிந்தவாறே விடைத்துக் காட்டுவாள். 

“இது அவன் தப்பா? சொல்லு, இப்படி இருந்தா எவன் பாக்காம இருப்பான்?”

“நீயும் உன் ஆபிஸ்ல இருக்கவளுகளை அப்படித்தான் பார்ப்பியாடா?”

“எவளுக்கும் இப்படி எடுப்பா இல்லையே?”

“இருந்தா பார்ப்பியா?”

“பாக்கறதா?” என்றவாறு சில்மிஷங்களை துவங்கியிருப்பான். அப்போது செயல் நடக்கிறதோ இல்லையோ, சொற்கள் மழையாக கொட்டும். அது அன்று நாள் முழுக்க அவ்வபோது ஞாபகம் வந்துக் கொண்டே இருக்கும். இடையிடையே இருவரும் போனில்/மெசேஜில் காலை நடந்துக் கொண்டதற்கு திட்டுவது போல், மீண்டும் ஞாபகப் படுத்தி, விட்ட இடத்தில் ஆரம்பித்து தொடர்வார்கள்.

மாதத்தில் முக்கால்வாசி இப்படித்தான் போகும். அக்கொண்டாட்டம் துவங்குவது காலை 08.31 ல் இருந்துதான். 9 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி விடுவார்கள். கதவுக்கு வெளியே கப்சிப்பென்றுதான் இருப்பது. அந்த அப்பார்ட்மெண்டில் இருந்து வெளியேறும் வரை அமைதி தொடரும்.

அவன் தனது பைக்கிலும், அவள் தனது காரிலுமாக வேலைக்கு கிளம்புவார்கள். அவனது வேலைக்கு ஒரு நாளிற்குள்ளேயே பல இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். கார் சரிப்பட்டு வராது. சென்னை டிராஃபிக்குக்கு பைக்தான் என்பான். அவளுக்கு பக்கம்தான், மேலும் அலையும் வேலையில்லை, அலுவலகத்தில் ஒரே இடத்தில்தான் வேலை. மேலும் அவளுக்கு கார்தான் பிடிக்கும்.

இன்றும் கொஞ்சிக் குலாவி விட்டு 9 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினார்கள். இவன் கதவினை பூட்டிவிட்டு பின்னால் வர, முன்னே சென்றவள் அவள் தோழியைப் பார்த்ததும் உற்சாகமாக கைக் காட்டினாள்.

“ஹாய் குட்மார்னிங்”

பதிலுக்கு “குட்மார்னிங்” என்ற அவள் தோழி சைந்தவி டிராக் சூட்டில் இருந்தாள். கையில் யோகா மேட். குதிரைவாலாக கூந்தல்.

“இப்பதான் வர்ரியா? எப்ப குளிச்சு எப்ப சாப்பிடறது? பசிக்கலை?”

“காலைல நான் லெமன் டீ மட்டும்தான், அது குடிச்சாச்சு ஏற்கனவே”

சைந்தவி யோகா பயிற்சியாளர். காலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி சென்று விடுவாள். 8 மணி வரை பயிற்சி இருக்கும். 

அசோக் அருகில் வரவும் இருவரும் நட்பாக “ஹலோ” சொல்லிக் கொண்டார்கள். அவன் வந்த பின் என்ன பேசுவதென்று தெரியாமல் “அப்புறம் போன் பன்றேன்” என்றவாறு அனிதா நகர, சைந்தவியும் நடக்கத் தொடங்கினாள்.

மூன்றடி வைத்து விட்டு, ஏதோ உறுத்த சைந்தவி திரும்பி பார்க்கவும், அசோக்கும் அப்படி திரும்பிப் பார்த்ததை எதிர் கொண்டாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களது பார்வையில் சற்று நேரத்திற்கு முன்பு ஹலோ சொல்கையில் வெளிப்பட்ட நட்பு  சுத்தமாக இல்லை. 

- தொடரும்
 

Comments

Popular posts from this blog

மைத்திருவிழா

எதற்காக வாசிப்பு?

இந்த கொடுமைக்கு பேசாம கல்யாணமே பண்ணிக்கலாம்- கடுப்பு பாகம் 2