சோனா கல்லூரிக்கு வந்த கெட்ட காலம்- காலேஜ் டைரி பாகம் 1
அன்பர்களுக்கு வணக்கம், ஏதேதோ தோன்றுவதை எழுதிக் கொண்டிருந்தேன், பின்பு மற்றவர்களை பார்த்து விமர்சனம் எழுத துவங்கினேன். விமர்சனம் எழுதினால் அந்தந்த காலங்களில் மட்டுமே வாசகர்கள் கிடைப்பார்கள். எல்லா சமயங்களிலும் அனைவராலும் படிக்க விரும்பகூடிய பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன். இதோ முதல் முயற்சி என் கல்லூரி அனுபவங்கள் என் நடையில் உங்களுக்காக.
இந்த பதிவில் என் சுயபுராணம் அதிகம் வராமல் நிகழ்வுகளையே ரசிக்கும் விதத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்கயாவது என் பெருமைய பெருசா பேசுனா உடனே கமெண்ட் போட்டு என்னை ஆஃப் பன்னிருங்க.
கதை எங்க இருந்து ஆரம்பிக்குதுனா எனக்கு SSLC ரிசல்ட் வந்த நாள்ள இருந்து, ஏன்னா தெரியாத்தனமா எனக்கு யாரோ 400 க்கு மேல மார்க் போடவும் என்னை கொண்டு போய் அந்தியுர் ஐடியல் ஸ்கூல்ல சேர்த்துனாங்க, நான் படிக்கறப்ப என் கூட படிச்ச எல்லாருக்கும் ஒரே ஒரு லட்சியம் தான். டாக்டராகனும்னு, அஃப்கோர்ஸ், எனக்கும்தான். ஆனா +2 பரிட்சை நெருங்கறப்ப எனக்கு தெரிஞ்சு போச்சு, நமக்கு எந்த மெடிக்கல் காலேஜ்லயும் சீட் தர மாட்டாங்கனு.
நம்ம ஊர்ல படிப்புனா 2 தான், ஒன்னு டாக்டர், இன்னோன்னு இஞ்சினியர். சரி ஏதோ ஒரு இஞ்சினியரிங் காலேஜ் சேரப் போறமே, நம்ம ஊர் பக்கத்துலயே சேருவோம்னு ஐடியல்ல என் கூட படிச்சுட்டு இருந்த சேலம்லருந்து வர முரளிங்கற பையன்கிட்ட "சேலம்ல என்னென்ன இஞ்சினியரிங் காலேஜ் இருக்குனு சொல்றா"னு கேட்டேன்.
அவன் ஒரு அப்பாவி. "டேய் எனக்கு ஒரு காலேஜ் பேர்தான்டா தெரியும். எங்க வீட்டுக்கு பக்கத்துல இருந்து ஒரு அக்கா சோனா காலேஜ்னு ஒரு காலேஜ்ல படிச்சாங்கடா, நல்லா பேசுவாங்கடா, 3வது வருசம் படிக்கும் போது ஓடிப்போய் கல்யாணம் பன்னிகிட்டாங்கடா"னு சொன்னான். உடனே என் முகத்துல பல்ப் எரிஞ்சது. ஏன்னு கேட்கறிங்களா?
ஐடியல் ஸ்கூல்ல படிச்ச பசங்களை கேட்டு பாருங்க தெரியும். பொன்னுங்களை பார்த்தா பசங்க ஓடிப் போயிடனுங்கறதுதான் முதல் ரூல். நான் படிச்ச க்ளாஸ்ல பொன்னுங்க இருந்தாலும் பேசக் கூடாது. சரி நிறைய பொன்னுங்க இருக்க காலேஜ்ல சேரலாம்னு சோனா காலேஜ் அ நோட் பன்னி வச்சுகிட்டேன்.
அப்புறம் சென்னைக்கு அண்ணா யுனிவர்சிட்டிக்கு கவுன்சிலிங்க்கு எங்க அக்கா, மாமா, 2 அண்ணங்களோட போனேன். ஒருத்தர்தான் கூட உள்ள போகனும்னு சொன்னாங்க. அக்காவ கூட்டிப் போனேன்.
நல்லா அழகா ஒரு மேடம் சுடிதார் போட்டு உட்கார்ந்துருந்தாங்க. என் கண்ணுக்கு சுடிதார் புதுசுல்ல. சுடிதார் கரெக்ட்டா ஃபிட் ஆகுற பொன்னுங்க புதுசு.அவங்க கவுன்சிலிங்க ஆரம்பிச்சாங்க.
"எந்த டிஸ்ட்ரிக்ட் லருந்து வரிங்க?
"சேலம்" அக்காதான் சொன்னாங்க. நல்லவேளை நான் மேட்டூர்னு சொல்ல வந்தேன். அது தாலுக்காவாம்.
"எந்த டிஸ்டிரிக்ட்ல காலேஜ் பார்க்கறிங்க"
உடனே "சேலம்"னு முந்திகிட்டேன்.
அவங்க கம்பியுட்டர்ல என்னென்னமோ பன்னி சேலம்ல இருக்க காலேஜ் லிஸ்ட் அ காட்டுனாங்க, நான் சோனாவ தேடுனேன். என் விரல் தானா சோனாவ நோக்கி நீண்டு "இந்த காலேஜ்தான்"னு சொன்னேன்.
மறுபடியும் ஏதோ கீபோர்ட்ல தட்டுனாங்க. என்னென்ன சீட் இருக்குனு வந்தது.
EEE IT CIVIL
4 2 1
சத்தியமா எனக்கு அப்ப IT,EEEனா என்னன்னே தெரியாது, அக்கா சிவில் படிக்கறதால நானும் சிவில் படிக்க ஆசைப்பட்டு சிவில் எடுத்துக்கறன்னு சொன்னேன். என் சாதிக்கோட்டால எனக்கு முன்னாடி 8 பேர் இருந்தாங்க. காக்க ஆரம்பிச்சேன். கவுன்ட் டவுன் குறைஞ்சுகிட்டே வந்தது.
8,7,6......................5..........4..........3.........2................1
"உங்களுக்கு சீட் கன்ஃபார்ம்"னு அந்த மேடம் கைக் குடுத்தாங்க. நான் சிரிச்சுகிட்டே கை குடுத்தேன். "சீட் கிடைச்சதுமே ஆரம்பிச்சுருச்சே"னு சந்தோச பட்டேன்.
எங்கக்கா என் மைண்ட் வாய்ஸ் அ கேட்ச் பன்னிட்டாங்க போல.
"பல்லை காட்டாத எழுந்து வா"னு கூட்டி போனாங்க.
அன்னைக்கு சோனாக்கு 4 வருசம் பிடிக்க போற 7.5 சனி SETC பஸ்ல சந்தோசமா கன்னை மூடி தூங்காம கற்பனை பன்னிகிட்டு வந்துகிட்டு இருக்குங்கறதை யாரும் தெரிஞ்சுக்காம விட்டுட்டாங்க.
இன்னோரு விசயம். எப்படி பொன்னுங்களோட பேசி கடலை போடலாம்னு ஜாலியா கற்பனை பன்னிகிட்டு இருந்த எனக்கு, அதை கெடுக்கறதுக்குனே இன்னொரு சனி சோனால சீட் வாங்கிட்டு வந்துகிட்டு இருக்குங்கறது தெரியாம போச்சு. அந்த ஜீவன் யாருங்கறத அடுத்த பதிவுல சொல்றன்.
மறக்காம கமென்ட் அ போடுங்க.
அடுத்த பதிவிற்கு கீழே க்ளிக் பன்னுங்க
Comments
Post a Comment