சாரல் காலம் 5

சாரல் காலம் - முந்தின பாகங்கள்

#0 / #1 / #2 / #3 / #4

=========================================================
ஹரிக்கு முன்பாகவே அவன் மனம் கோவிலுக்கு சென்றது, அங்கு என்னவெல்லாம் நடக்கும் என்று கனவு காண ஆரம்பித்தான், வெறும் குழப்பங்களே ரிங்காராமிட்டது.

கோவிலுக்கு போனதும் ஹரியின் கண்கள் காயத்ரியை மட்டும் தேடவில்லை, அவளுடன் வேனில் வந்திருந்த அனைத்து அழகான பெண்களையும் நோட்டமிட்டுவிட்டு கடைசியாக காயத்ரி தன்னை பார்க்கிறாளா என்று பார்த்தான். அவள் வழக்கம்போல் பார்த்தும் கண்டு கொள்ளாமல் தான் போனாள்.

ஹரி சூர்யாவை பார்த்ததும் ஏதோ பேச வேண்டும் என்பதற்காக

"ஏதாவது தேங்காய், பழம் வாங்கனுமா?"

"டேய் என்னாச்சுடா உனக்கு? செருப்புக்கு டோக்கன் 1 ருப்பய் கேட்பாங்கனே கொவிலுக்கு வரமாட்டேன்னு சொல்லுவ? இன்னைக்கு தேங்காய் வாங்கனும் மாங்காய் வாங்கனுங்கற? ஏதாவது வேண்டுதலா?"


"இல்லைடா, நீங்க ஏதாவது வாங்கறிங்களானு கேட்டேன்"

"அதானே பார்த்தேன், அதெல்லாம் வாங்கறவங்க வாங்கிக்குவாங்க, நீ வா போலாம்"

உள்ளே சென்றதும் ஹரியின் முகத்தில் அப்படி ஒரு அமைதி, யாரைப் பார்த்தாலும் ரம்மியமாய் ஒரு சிரிப்பு, இவன் பெண்களை கிண்டல் செய்வான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். சூர்யா அவன் காதோரமாக

"டேய், நான் சாமி கும்பிட போறேன், நீ வந்த வேலையை கவனி"

என்று சொல்லிவிட்டு தனியாக சென்று விட்டான்.

ஹரிக்கு காயத்ரி பின்னால் செல்ல தோன்றவில்லை, கடவுளிடம் கைக்கூப்பாமலேயே மனதுக்குள் பேச துவங்கினான.

"சூர்யா சொன்னது போலவே நான் காயத்ரிக்காகத்தான் கோவிலுக்கு வந்தனா? அவளை எனக்கு அவ்வளவு பிடிச்சுருக்கா? இந்த காதல் எனக்கு சரிப்பட்டு வருமா?ஏங்க ரெண்டு பேருக்கும் பொருந்துமா?"

ஹரி இப்படி கடவுளிடம் கேள்விகளை கேட்க துவங்கிய பொழுது சூர்யாவும்

"ஹரி இப்ப காதலிக்கிறானா? இல்லை வழக்கம் போல சும்மா கனவு தானா? 2 பேருக்கும் பொருந்துமா? காதலிச்சா நிம்மதி போயிரும்பாங்களே? அப்ப ஹரியோட நிலைமை? "

எல்லாரும் சென்ற பின் கடைசியாகத்தான் ஹரியும் சூர்யாவும் கோவிலை விட்டு கிளம்பினார்கள், கல்யாண வீட்டில் வேடிக்கைக்கா பஞ்சம், மதிய உணவு வேளை வரை நண்பர்களுடன் அரட்ட அடித்துக் கொண்டிருந்த ஹரி காயத்ரி சாப்பிட செல்கையில் போகலாம் என ரொம்ப நேரம் காத்திருந்தான்.

நேரம் மட்டுமே கடந்தது, சூர்யாவிற்கு தெரிந்தது அவன் எதற்கு காலம் கடத்துகிறான் என்று, நண்பனுக்காக அவனும் காத்திருந்தான், பொறுத்து பார்த்த சூர்யா எதற்கும் இருக்கட்டும் என்று வனிதாவை பற்றி விசாரிப்பது போல் மற்ற பெண்களிடம் காயத்ரியுடன் சில பெண்கள் மாடியில் மண்ப்பெண்ணுடன் சாப்பிட்டு விட்டதை தெரிந்து கொண்டான்.

"ஹரி, சாப்பிடலாமா?"

"ம், எங்கடா வனிதாவ காணோம்?"

"ம்? வனிதாவதான் இவ்ளோ நேரம் எதிர்பார்த்துட்டு இருந்தியா? அவளும் காயத்ரியும் அவங்கக்கா கூடவே சாப்பிட்டாங்களாம்"

"ஓ, சரி மச்சான், எனக்கு வயிறு வலி, நீ சாப்பிட்டு வந்துரு, நான் வெயிட் பன்றேன்"

"செருப்பு பிஞ்சிரும், என்ன ஃபீலிங்கா? ஒழுங்கா வர்ரியா? இல்லை மாதேஸ்க்கு போன் பன்னவா?"

"டேய், ஏன்டா? வரலைன்னா பரவாயில்லை வாடானு கூப்பிட்டு பாரு, எடுத்ததும் மாதேஸ் பேரை சொல்லி பயமுறுத்தற? போலாம், வாடா"

சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.

"சூர்யா, மாதேஸ் எப்ப வர்ரான்?"

"கிளம்பிட்டான்னு மெசெஜ் பன்னிருக்கான், சாயந்திரம் வந்துருவான்"

"டேய் எதுவாயிருந்தாலும் மாதேஸ்கிட்ட நானா சொல்லிக்கறேன்டா, நீ அவசப்பட்டு எதுவும் சொல்லிடாத"

"அப்ப பாலா, அன்பு, கன்னன் கிட்ட நான் சொல்லவா?"

"சாமி நானே பார்த்துக்கறேன், ஆமா எல்லாரும் ஒன்னாவா வர்ராங்க?"

"ஆமா"

"பேசாம நம்ம கூடவே வந்துருக்கலாம்"

"நீ எங்கடா எங்க கூட வந்த? நீயே காயத்ரி கூடத்தானே வந்த?"

"டேய் என்னடா ஏதோ நாங்க திட்டம் போட்டு ஒன்னா வந்த மாதிரி பேசற?"

"நான் கேட்டாலாம் நீ சொல்ல மாட்ட? பசங்க வரட்டும், நைட் பஞ்சாயத்து உனக்குதான்டி"

வழக்கமாக கல்யாணமென்றால் முந்தின இரவு சரக்கு இருக்கும், சீட்டு கச்சேரி இருக்கும், இவர்கள் கூட்டத்தில் பஞ்சாயத்து இருக்கும். யாராவது ஒருவன் அன்று சிக்குவான், அவனுக்கு மட்டும் சரக்கு தரப்படமாட்டாது, மற்றவர்கள் முழுவதுமாய் ஏற்றிக்கொண்டு விட்டு ஒவ்வொருவனாய் அவனை திட்டி கேள்வி கேட்பார்கள், போன முறை ஒருவன் யாருக்கும் தெரியாமல் புது சட்டை எடுத்ததற்கு சிக்கினான்.

"டேய், அவ்வளவுதானா?"

"உனக்கு எங்களை விட சட்டை முக்கியமா போச்சா?"

"சட்டை விசயத்தையே மறைச்சவன் இன்னும் எதை எதைடா மறைச்சுருக்க?"

"இதுக்கு நீ எனக்கு விஷம் கொடுத்து கொன்னுருக்கலாம்டா"

"உனக்கு தெரியுமா? எங்க பெரியப்பா என்ன சொல்லிருக்கார் தெரியுமா?"

"அதை விடுறா, எங்க 5வது அறிவியல் வாத்தியார் என்ன சொல்லிருக்கார் தெரியுமா?"

"டேய் அவனுங்களை விடுங்கடா, சட்டை விசயத்தை மறைச்சவனை பார்த்து கேட்கிறேன், நீ உண்மையில் தமிழ் மண்ணில் பிறந்தவனா? உனது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சரியாய் உள்ளதா?"

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0p1XgJ8AEZJgdVBoXVZqsuo0t2zKu9o_tWXmiBBK_z7ruQ0xVNHBKZNTYR34QgCWVHylHFbRka1_g_CYJ8TTZTax7iF8mnQrOXBeaewDzIjSOR6IjAF85Im68jkR3M046zox2tPl-bF1-/s1600/nalla+ulagam.jpg

இப்படிலாம் ஒருத்தனை சுத்தி உட்கார்ந்து சம்பந்தமே இல்லாத கேள்வியா கேட்டு எழுந்து போகவும் விடாம கடைசியா அவனா அந்த சட்டைய கிழிக்கற வரைக்கும் விடாம சாவடிப்பாங்க. 

இந்த மாதிரியான பஞ்சாயத்தில் தான் உட்கார நேர்ந்தால்? ஹரிக்கு தலை சுற்ற ஆரம்பித்தது, அதை மறக்கலாம் என்று மெத்தியில் கண்களுக்கு குறுக்காக கையை வைத்துக் கொண்டு படுத்தான்.

கனவும் வந்தது.

காயத்ரி அவள் தோழிகளுடன் நடந்து வருகிறாள், எதோ சொல்ல விழைகிறாள்

"மச்சான், தூங்கிட்டியா?"

"ஏன்டா?"

"உன் செல்ல குடுறா, கேம் விளையாடறேன்"

எடுத்து கொடுத்து விட்டு மனதிற்குள் 

"நான் அடிச்சு சொல்றேன், நான் கனவுல காயத்ரி கூட சந்தோசமா இருக்கிறது தெரிஞ்சு வேணும்னேதான் இந்த பையன் எழுப்பி இருக்கான், இல்லைனா செல்ல வாங்கிட்டு சாவிய தூக்கிப்போட்டு பிடிச்சுகிட்டுருக்கான் பாரு"

மீண்டும் கடுமையாய் முயற்சித்து கனவை வரவழைக்கையில் மீண்டும் சூர்யா

"மச்சான், போன்டா"

"யாரு?"

"பாலா"

"ஏன் நீ பேச மாட்டியா?"

"ஏன் நீ பேச மாட்டியா?"

ஹரி போனை பிடுங்கி முறைத்துக் கொண்டே பேசினான்

"சொல்லு மச்சி"

"மாமா வந்துகிட்டே இருக்கோம், சரக்கு வாங்கிட்டியா?"

"நைட் பேசிக்கலாம், நீ வாடா முதல்ல"

"5 மணிக்குள்ள வந்துருவோம்டா, பஸ் ஸ்டாண்ட் வந்துருங்க"

"சரிடா"

ஹரி மீண்டும்  படுத்தான், இம்முறை கனவு வரவில்லை, உண்மையிலேயே தூக்கம் வந்து தூங்கி விட்டான்.



Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...