FERRARI KI SAWAARI திரை விமர்சனம்
அன்பர்களுக்கு வணக்கம், அது என்னவோ தெரியவில்லை, இந்திய சினிமாக்களில் ஒவ்வொரு மாநிலங்களிலும் விதவிதமாய் சினிமாக்கள் வருகின்றன, எனக்கென்னவோ தமிழில் பல்வேறு விதமான படங்கள் வருவது குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. மற்ற மொழிகளில் 10 விதமான படங்கள் வந்தால் தமிழில் 3 விதங்கள் தான், கருத்துள்ள படங்கள் எடுத்தால் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுதான் திரைக்கதை அமைக்கிறார்கள்.
சமிபத்தில் ஹிந்தியில் வெளி வந்த படம் ஒன்றினை பார்த்தேன், படத்தின் பெயர் FERRARI KI SAWAARI, பலர் இப்படத்தினை பார்த்திருப்பீர்கள். 3 இடியட்ஸ் படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்த ஷர்மான் ஜோஷிதான் கதை நாயகன்.
கதைப்படி மகன், தந்தை, தாத்தா என 3 ஆண்கள் மட்டும் வாழும் வீடு, மகனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம், திறமையாக விளையாடுகிறார், அதை முழுமையாய் ஊக்குவிக்கும் அப்பாவாக நாயகன், தெரியாமல் சிக்னலை கடந்ததற்கு போலிஸ் ஐ தேடிப்போய் ஃபைன் கட்டி மகனுக்கு நேர்மையை கற்று தருபவர், எப்போது பார்த்தாலும் எரிந்து விழும் தாத்தா.
நேர்மையாய் வாழ்பவர்களிடம் வருமானம் குறைவாகத்தான் இருக்கும், கிரிக்கெட்டிற்கு தேவையான பொருட்களை கூட இன்ஸ்டால்மென்ட்டில் வாங்கும் நிலைமை, அப்படி இருக்கும் பொழுது லண்டனில் நடக்க இருக்கும் கிரிக்கெட் பயிற்சிக்கு சென்றால் கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் என்ற வாய்ப்பு வருகிறது, ஆனால் அதற்கு 150000 செலவாகும்.
நாயகனும் என்னென்னவோ முயற்சிக்கறார், அலுவலகத்தில் கடனுக்கு முயற்சிக்கிறார், செல்போன் வாங்கினால் லோன் குடுப்பார்கள் என நம்பி செல்போன் வாங்க, அப்பாவிடம் திட்டு வாங்கும் பொழுதுதான் வாக்குவாதத்தில் தாத்தா பெரிய கிரிக்கெட் ப்ளேயர் என்றும் நண்பனின் துரோகத்தினால் வாய்ப்பை இழந்து அதனாலேயே எல்லோரிடமும் எரிந்து விழுந்து வீட்டிலேயெ அடைந்து கிடக்கும் உண்மை வெளிவருகிறது.
இப்போது ஹீரோவுக்கு ஒரு வாய்ப்பு வருகிறது, ஒரு அரசியல்வாதியின் மகனுக்கு திருமணத்திற்கு ஜானவாசத்திற்கு FERRARI கார் தேவைப்படுகிறது, இந்தியாவிலேயே சச்சின் டெண்டுல்கரிடம் மட்டும் தான் அது இருக்கிறது, அதை ஒரு நாள் எடுத்து வந்து குடுத்தால் மகனை லண்டன் அனுப்ப தேவையான பணத்தை தருவதாக ஒரு பெண்ணிடம் இருந்து வாய்ப்பு வருகிறது.
நேர்மையாய் தந்தையின் பெயரை உபயோகித்து கார் வாங்க செல்ல எதெச்சையாய் கார் சாவி கிடைக்க சொல்லாமல் கொள்ளாமல் வண்டி எடுத்து வந்து விடுகிறார், நினைத்தபடி கல்யாணத்தில் அதனை பயன்படுத்தி பணம் வாங்கினாலும் NO PARKING ல் நிறுத்தியதால் காருடன் சேர்த்து பணமும் போய் விடுகிறது.
இப்படி நடந்ததை தந்தையிடம் கூறும் போது கிரிக்கெட் பற்றி விவாதம் வர பேரனின் திறமையினை நேரில் பார்த்ததும் அவரும் பேரனுக்காக களத்தில் இறங்குகிறார். தன்னை ஏமாற்றிய நண்பனை பார்த்து உதவி கேட்க சென்று, ஏமாற்றத்தில் திரும்பும் போது FERRARI கார் கண்ணில் பட அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்.
அதில் இருந்து பணத்தை நைசாக எடுத்துக் கொண்டு ஹீரோ தப்பிக்க ஒரு வழியாய் எல்லாம் செட் ஆகும் பொழுது கார் திருடிய விஷயம் மகனுக்கு தெரிய, தந்தை அடிபட்டு கிடக்கும் நேரத்தில் மகன் காணாமல் போக, நொந்து போகிறார் ஹீரோ. இப்படி எல்லா பிரச்சனைகளையும் தாண்டி எப்படி லண்டன் அனுப்புகிறார் என்பது தான் கதை.
படத்தில் எந்த இடமும் போரடிக்கவில்லை, அதுவுமில்லாமல் காரினை தொலைத்த வாட்ச்மேனும் சச்சின் வீட்டு வேலைக்காரணும் அதை தேடி அலையும் காட்சிகள் ரசிக்கும் காமெடி, விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தந்தை மகன் பாசத்தினை ஒவ்வொரு ஃபிரேமிலும் செதுக்கி இருக்கிறார்கள். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.
படத்தின் டிரைலர்
மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தந்தை மகன் பாசம் என்றால் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteசுருக்கமான நல்ல விமர்சனத்திற்கு நன்றி...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete