- மழைச்சாரல்: சிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Tuesday, 20 March 2012

சிதைய ஆரம்பித்திருக்கும் மாணவ சமுதாயம்

முன்பெல்லாம் எவ்வளவோ பராவாயில்லை, மாண்வர்களிடம் இருக்கும் தீராத பிரச்சனை என்றால் அது காதல் தோல்வியால் தற்கொலை அல்லது பெண்களை கேலி செய்வது போன்றவை தான். ஆனால் இப்போது தமிழ்னாட்டில் பெருகி வரும் முறைகேடான கள்ள காதலுக்கு மாணவர்களும் பலியாவது பற்றி நினைக்கும் போது மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரியவந்துள்ளது. அதை விட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டு உள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.
முன்பெல்லாம் இது போன்ற விசயங்களை கேள்வி படும் போது எங்கோ வெளி நாட்டிலோ அல்லது வடனாட்டிலோ நடக்கிறது என்று கதை பேசி கொண்டு இருப்போம், ஆனால் இது போன்ற ஒழுக்கங்கெட்ட விசயங்கள் இப்போது தமிழ் நாட்டில் பெருகி வருகிறது.
இதற்கெல்லாம் யாரை குற்றம் சுமத்துவது? எதை காரணமாக எடுத்துக் கொள்வது என்பது புரியாத புதிராக உள்ளது. அதிக பட்சம் மோசமான விசயங்களை கற்று கொடுக்கும் ஊடகங்களை குறை சொல்லாலாம். இன்றைய கால கட்டத்தில் பாடப்புத்தகங்களில் உள்ள சிரமங்களைவிட பாலியல் ரீதியான சிரமங்கள்தான் மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.இதற்கு என்ன செய்ய போகிறோம்?
மாணவிகளுக்கு பாலியல் துன்பங்கள் தரும் ஆசிரியர்களைப் பற்றித்தான் அதிகம் வெளியாகிவந்தது. மாணவியை திருமணம் செய்து ஆசிரியர்களைப் பற்றித்தான் அதிகம் கேள்விப்பட்டிருந்த தமிழ்நாட்டில் ஆசிரியை ஒருவர் 17 வயது மாணவனை காதலித்து அவனை திருமணம் செய்துகொள்வதற்காக ஊரைவிட்டு ஓடிய சம்பவம் தமிழ்நாட்டு ஆசிரியைகளிடையே அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. 
தமிழ்நாட்டுக்கு இது புதுசு
மாணவனை காதலித்த ஆசிரியை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. அவர் வடநாட்டைச் சேர்ந்தவர். வடநாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. 2010 ம் ஆண்டு 27 வயது ஆசிரியை ஒருவர் 16 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. அதேபோல் ஆந்திராவில் குண்டூர் மாவட்டத்தில் 8 வது படிக்கும் மாணவனை ஆசிரியை ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவமும் நடந்துள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசல் புரசலாக நடந்த போது அதிர்ச்சியடையாத பெற்றோர்கள் தமிழ்நாட்டில் அதேபோல சம்பவம் நடந்த உடன் மாணவர்களைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிட்டனர்.
மாணவனுடன் ஓடிய ஆசிரியை டெல்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது கூட அவரது செயலை நினைத்து எந்த வித கவலையும் பட்டதாக தெரியவில்லை. மாணவனுடனான காதலை (!) வெளிப்படையாக தெரிவித்ததோடு அவனுடன் பழகும் போது பதினாறு வயது பெண்ணாக உணர்வதாக கூறியுள்ளார். இந்த காதலை எந்த வரிசையில் சேர்ப்பது?.
இந்த முறை தவறிய காதல் குறித்து கருத்து கூறியுள்ள ஆசிரியைகள், மாணவன்தான் முதலில் சபலப்பட்டான் என்று கூறினாலும் அவனை நல்வழிப்படுத்தவேண்டியது ஆசிரியையின் கடமைதானே ஒழிய அவனை பயன்படுத்திக்கொண்டது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தெய்வத்திற்கு சமம்
ஆசான் என்பவர் தெய்வத்தை விட முதன்மையானவர். வாழ்க்கைக்குத் தேவையான கல்வியை கற்றுக்கொடுத்து நல்வழிப்படுத்துவதுதான் ஆசிரியர்களின் தலையாய பணி. அதை விடுத்து கற்றுகொடுக்க வேண்டிய ஆசிரியைகளே தடம்மாறிப் போவதனால்தான் மாணவர் சமுதாயமும் தடுமாறும் சூழல் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
2011 ஆம் ஆண்டு இணையதளப் பயன்பாடு குறித்து நடைபெற்ற ஆய்வு ஒன்றில் உலக அளவில் இந்தியாவும், மாநில அளவில் தமிழ்நாடும் முதலிடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதேசமயம் மாணவர்கள் அதிக அளவில் இணையதளத்தில் தேடிய வார்த்தை செக்ஸ் என்பது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு யாரை குற்றம் சொல்வது?.
காதல் பற்றியும், செக்ஸ் பற்றியும் பேசக்கூடாது என்று நினைக்கும் சமூகத்தில் இருந்து வரும் மாணவர்கள்தான் இணையதளத்தின் வாயிலாகவும், ஊடகங்களின் வாயிலாகவும் அவற்றை கற்றுக்கொள்கின்றனர். அரைகுறையாக தெரிந்து கொண்டு காதல் வலையில் சிக்கும் மாணவிகள்தான் கர்ப்பமாகி தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். பாலியல் சுழலில் சிக்கி ஒரு சில மாணவிகள் மன அழுத்தத்திற்கும் ஆளாகின்றனர்.
மாணவ-மாணவிகளுக்கு பாலியல் குறித்த புரிதல் தேவையானதாக இருக்கிறது. எனவே பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவதை என்பதை கற்றுக்கொடுக்கும் கடமை ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
எங்கே போயின நீதி போதனைகள்?
பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புக்களை எடுத்தால் மட்டும் போதாது மாணவர்களுக்கு பாலின ஈர்ப்பு, ஹார்மோன்களின் செயல்பாடு, தொடுதல், நட்பு, காதல் பற்றியும் புரிகிற மாதிரி விளக்கவேண்டும் என்றும் அவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாலியல் கல்வி குறித்து கற்றுத் தர சில ஆசிரியைகள் தயாராக இல்லை என்றாலும் மாணவர்களின் நலன் கருதி படிப்படியாக தமிழ்நாட்டில் பாலியல் கல்வியை அறிமுகம் செய்யவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது.
முதலில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைத் தாண்டி பள்ளி மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தினால் மட்டுமே எதிர்கால சமுதாயம் வளமானதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

2 comments:

  1. useful one even to every common person also kindly care with students. Parents please read it and make care with your childs

    ReplyDelete