பெருந்திணை - படலம் - 3

 டைப் செய்த கமெண்டை போஸ்ட் செய்யாமலே டெலிட் செய்தான் அசோக். போனை லாக் செய்து பாக்கெட்டில் போட்டவன் மீண்டும் பத்து வினாடிகளுக்கு பிறகு எடுத்து சைந்தவி படத்தைப் பார்த்தான். முந்தைய படங்களை ஒவ்வொரு படமாக ஓட்டிப் பார்த்தான். சில படங்கள் எடுத்த தினத்தில் அவள் கூடவே இருந்திருக்கிறான். பெரும்பாலும் வெளியே சுற்றுகையில் அதை எங்கே என்று திட்டமிடுவது அனிதாவும் சைந்தவியுமாக சேர்ந்தே திட்டமிடுவார்கள். அத்தினங்களில் அவ்வபோது அசோக்கும் உடனிருப்பது உண்டு.


அப்போதெல்லாம் அசோக்கிற்கு சைந்தவி மீது பெரிதாக எந்த ஈர்ப்புமில்லை. அப்போதும் அழகுதான். யார்தான் அழகில்லை? இப்படி சொல்வதை விட யாருக்குத்தான் தங்களை அழகாக காட்டிக் கொள்ள தெரியாமலிருக்கிறது என்று கேட்பது பொருத்தமாக இருக்கும். அது ஒரு கலை. உடலை வாகாக பராமரிக்க வேண்டும். அவ்வபோது அழகு நிலையங்களில் பொருத்தமாக பட்டைத் தீட்டிக் கொள்ள வேண்டும். முக்கியமாக அதை வீட்டிலும் வாழ்க்கை முறையாய் மாற்றியிருக்க வேண்டும். அடுத்து நேர்த்தியான உடைகள். அதில் தவறில்லை. எப்போதும் தங்களை அழகாக வைத்துக் கொள்பவர்கள் மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகிறார்கள்தானே? 


அசோக்கின் மனம் தன்னைத் தானே நொந்துக் கொண்டது. இன்று காலையில் தன் பார்வையினை அவள் எதிர்கொண்டது ஞாபகத்திற்கு வந்தது. எல்லா நேரமும் ஒரே போலிருக்காது. ஒவ்வொரு முறையும் இதையேதான் நினைக்கிறோம். ஆனால் செயல்படுத்துவதில்லை என்பது கடுப்பாக இருந்தது.


எந்தவொரு செயலும் தொடரும்போது பழக்கமாகும். நிறுத்த வேண்டும் என நினைத்து இயலாமல் தொடர்ந்தால் அதற்கு அடிமையாவோம். அடிமைகளுக்கு எப்போதும் அவமானங்களுக்கு பஞ்சமிருக்காது. இதெல்லாம் புரியாமலில்லை. புரியாத விசயம் ஒன்றுதான். ஏன்?


அனிதாவுடன் எல்லாம் ரொம்ப நன்றாகவே சென்றுக் கொண்டிருக்கிறது. பெரிதாக எந்த குறையுமில்லை. தேவையிருந்தாலும் அதற்கு எத்தனை வழிகளிருக்க எதற்காக இவளை குறிவைக்க வேண்டும்? 


வெறுப்பாக இதை நிறுத்த வேண்டும் என்று யோசித்தாலும் அவன் மனதின் இன்னொரு கிளை அவளை வேறு கோணத்தில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒருபக்கம் எத்தனை தூரம் இதை நிறுத்த வேண்டுமென்ற எண்ணம் வளர்கிறதோ, அதே தூரத்திற்கு இன்னொரு பக்கம் ஆசையும் வளரும். மானங்கெட்ட மனம். ஆகையால் இதை யோசிப்பதை நிறுத்தி விட்டு வேலைகளில் கவனம் செலுத்த முயற்சித்தான். கொஞ்சம் அது பலனளிக்கவும் செய்தது.


ஓரிரு நாட்கள் கட்டுப்பாடாக இருக்க முடிந்தது. அவ்வார இறுதியில் அவர்களது அபார்ட்மெண்டிலேயே ஒரு சமூக அரங்கமொன்று உள்ளது. அதிலொரு பிறந்த நாள் கொண்டாட்டம். அங்கு மற்ற நிகழ்ச்சிகளை கூட தவிர்த்து விடலாம். இது போன்ற குட்டீஸ்கள் தொடர்பான கொண்டாட்டங்கள் மிக முக்கியமானவை. வீட்டில் அதே வயது பிள்ளைகள் வைத்திருப்பவர்களை சொல்கிறேன். ஏனென்றால் இது அவர்கள் உலகத்தில் பெரிய விசயம். வீட்டில் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கும்வரைதான் நாம் நிம்மதியாக இருக்க முடியும். இல்லையென்றால் முதலில் அவர்கள் கடுப்பாவர்கள், அது மனைவிமார்களை எரிச்சலாக்கும். அவர்கள் கத்தத் தொடங்கிய பின் எப்படி நிம்மதியாக இருக்க முடியும். அதற்கு பயந்துதான் பிள்ளைகள் இழுத்த இழுப்பிற்கு செல்வதெல்லாம்.


அசோக் அந்த நிகழ்வு துவங்கும் போதெவெல்லாம் செல்லவில்லை. ஆனால் இரவு உணவு அங்குதான் என்று சொல்லி விட்டதால் வந்தான். அவன் வரும்வரை அனிதாவும் சைந்தவியும்தான் ஒன்றாக இருந்தார்கள். இது போன்ற சமயங்களில் பேசிக் கொள்ளலாம் என்று ஒதுக்கி வைத்திருந்தவற்றை ஒவ்வொன்றாக பேசித் தீர்த்தார்கள். அசோக் வரவும் அது நின்றது. குடும்பம் சகிதமாக பிரிந்தார்கள். அசோக்கும் நல்ல பிள்ளையாக இருந்தான். கொஞ்ச நேரம்தான்.


அதன்பின் அவனுக்கு மனதிற்குள் போராட்டம் துவங்கியது. ஒரு நொடி சைந்தவியை பார்ப்பது. அடுத்த இரு நிமிடங்கள் அவளை மனதிற்குள் நிற்க வைத்து ஒவ்வொரு ஆடையாக கழட்டுவது. அப்புறம்? அவ்வளவுதான். ஏன்? ஏனென்றால் ஆடைக்குள் எதுவுமே தெரிவதில்லையே. ஒவ்வொரு ஆடையாக நீங்க  உள்ளுக்குள்ளிருக்கும் உடலை அவனால் கற்பனை செய்ய முடியவில்லை. மீண்டும் ஒரு நொடி பார்ப்பான். மீண்டும் துகிலுரியும் படலம். ஆனாலும் அவனுக்கு இது பிடித்திருந்தது.


உள்ளே என்ன இருந்தால் என்ன? எதுவுமே இல்லையென்றால்தான் என்ன? ஒவ்வொன்றாக நீக்கும் அனுபவம் இருக்கிறதே… அடடா. ஒருமுறை அவன் ஒதுங்கி அவளையே நிதானமாக களையச் சொன்னான். 


அவளே வெளிப்படுத்துவது எப்படி இருக்கும்? American Beauty என்றொரு படம். ஒருவன் படுக்கையில் படுத்திருப்பான். மேலே சீலிங்கில் அவனுக்கு பிடித்த பெண். நிர்வாணமாக… அவள் உடலெங்கும் ரோஜா இதழ்கள் மூடியிருக்கும். ஒவ்வொரு இதழாக அவளை விலகி இவன் மீது கொட்டும். 








பிரமீளின் பிரபலமாக கவிதை ஒன்றுள்ளது. 


சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று 

காற்றின் தீராத பக்கங்களில் 

ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது…


அது போல் சைந்தவியை உச்சத்தில் நிறுத்தி, அவளின் உடலிலிருந்து சொட்டும் ஒவ்வொரு ரோஜா இதழும் அவனை வந்தடைவதற்கிடையிலான வெளியில் என்னென்னவெல்லாம் எழுதக்கூடும் என யோசித்தான்.


ஏன் எழுத வேண்டும்? வரையட்டும். அவள் அங்கங்களை… அவள் கொங்கைகளை வரையட்டும். வரைவதெல்லாம் உயிர் பெறட்டும். அத்தனையும் அவன் மேல் பூப்பந்துகளாக வந்து கொட்டட்டும். அதன் ஒவ்வொரு அடியையும் மனதிற்குள் உணரலானான்…


அவன் கண்கள் திறந்துதான் இருந்தன. ஆனால் அவன் மனம், அவன் உண்டாக்கிய கற்பனையிலேயே சிக்கிக் கொண்டது. உடல் திடிரென சில்லிடத் தொடங்கியது.


- தொடரும்

Comments

Popular posts from this blog

எதற்காக வாசிப்பு?

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்