எம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்





நேற்று நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 105 வது பிறந்தநாள்!

விகடனில் இடம்பெற்ற எம்.ஆர்.ராதா 25!

சினிமாவில், சீர்திருத்தக்காரர். நாடகத்தில், கலகக்காரர். அரசியல் மேடையில் சீறினால், இடியாக இறங்குவார். தனிமையில் சீண்டினால், வெடியாக வெடிப்பார். எம்.ஆர்.ராதா... எவருக்கும் அஞ்சாத ராஜா!

மதராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் என்ப தன் சுருக்கம்... எம்.ஆர்.ராதா. ஜெர்மன் போர்க் கப்பலான 'எம்டன்' சென்னையில் குண்டு வீசிய அன்று பிறந்தவர் என்பதால், அவரது வாழ்க்கை முழுவதும் வெடிச் சம்பவங்கள் நிறைய!

அப்பா ராஜகோபாலன், இந்திய ராணுவத்தில் இருந்தவர். முதலாம் உலகப் போரில் பங்கேற்று மெசபடோமியாவில் பலியானவர். அதற்காகப் பெற்ற வீரப் பதக்கத்தை எப்போதும் பொக்கிஷமாகவைத்து இருப்பார் ராதா!

சின்ன வயதிலேயே வீட்டுக்கு அடங்காத பிள்ளை. அதனால் பள்ளியில் படிக்க மனம் இல்லை. 'நான் ஓர் அநாதை' என்று சொல்லி, ஆலந்தூர் அரங்கசாமி நாடகக் குழுவில் சேர்ந்தார். நல்லத்தங்காள் நாடகத்தில் அவள் கிணற்றில் வீசும் குழந்தைகளில் ஒன்றாக மேடையேறியது முதல் அனுபவம். 'நாடகத்தில் நடிக்கச் சொல்லிக்கொடுத்தவர் ஜெகநாதய்யர்தான்' என்பார்!

ராதா நடித்த முதல் படம் 'ராஜசேகரன்' (1937). கடைசிப் படம் 'பஞ்சாமிர்தம்' (1979). சினிமா வாய்ப்பு கிடைத்ததும் பலரும் நாடகத்தை விட்டுவிடுவார்கள். ஆனால், சினிமா - நாடகம் இரண்டையும் விடாமல் வைத்திருந்தவர் இவர் மட்டும்தான்!

'உலகப் பாட்டாளி மக்களே ஒன்று சேருங்கள்' என்று சொல்லி, அரிவாள் சுத்தியல் சின்னத்தைக் காட்டு வதைத் தனது ஆரம்ப கால நாடகங்களில் வழக்கமாக வைத்திருந்த ராதா, அதன் பிறகு திராவிடர் கழகக் கொடியையும் பெரியார் படத்தையும் காட்டிவிட்டுத்தான் நாடகத்தை ஆரம்பிப்பார்!

ரத்தக் கண்ணீர் நாடகம் 3 ஆயிரத்து 21 நாட்கள் அரங்கேற்றப்பட்டது. தூக்குமேடை நாடகம் 800 நாட் களும், லட்சுமிகாந்தன் நாடகம் 760 நாட்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன!

ப்ளைமௌத், அம்பாஸடர், இம்பாலா எனப் பலப்பல கார்களை வைத்திருந்தார். இம்பாலாவில் ஒருநாள் எருமை மாட்டுக்கு வைக்கோல் எடுத்துச் சென்றதைப் பார்த்துப் பலரும் ஆச்சர்யப்பட்டார்கள். 'நமக்குப் பயன்படுறதுக்குத்தானப்பா கார். தகரத்துக்கு கலர் பெயின்ட் அடிச்சதுக்காக, தலையிலயா தூக்கிட்டுப் போகமுடியும்?" என்று கேட்டார்!

நாடகம் நடந்துகொண்டு இருக்கும்போது, செருப்பு, கல், அழுகிய முட்டை போன்றவை எதிரிகளால் வீசப்படுவது வாடிக்கை. அந்தப் பொருட்களை மறு நாள் கண்காட்சியாக வைப்பார். 'நேற்று பேடி கள் விட்டுச்சென்ற சாமான்கள்' என்று அதில் எழுதி வைப்பார்!

எம்.ஜி.ஆரை 'ராமச்சந்திரா' என்றும், சிவாஜியை 'கணேசா' என்றும் அழைப்பார். மற்ற நடிகர்களை எல்லாம் வாடா, போடாதான்!

இவரது நாடகங்களைத் தடை செய்வதற்காகவே காங்கிரஸ் ஆட்சி நாடகத் தடைச்

சட்டம் கொண்டுவந்தது. அந்தச் சட்டம் விவாதத்துக்கு வந்தபோது டவுசர், பனியனோடு சபை வளாகத்துக்குப் போய்விட்டார். ஒரு நாடகத்தைத் தடை செய்தால், அதையே பெயர் மாற்றி மறு நாள் போடுவார்!

என்.எஸ்.கிருஷ்ணனைச் சுடுவதற்காக உளுந்தூர்ப்பேட்டையில் கள்ளத் துப்பாக்கி வாங்கினார். விஷயம் தெரிந்து, 'நண்பன் கையால் சாகக்கொடுத்து வைத்திருக்கணும்' என்று என்.எஸ்.கே. சொன்னதும், மனம் மாறி கட்டி அணைத்தார் ராதா. திருப்பதி கோயிலுக்கு குண்டுவைக்கப் போய் வெடி மருந்தைக் காயவைத்து, அது வெடித்துச் சிறு விபத்தான சம்பவமும் உண்டு!

எம்.ஜி.ஆரை அவரது ராமாவரம் தோட்டத்தில் சுட்டு, தானும் சுட்டுக்கொண்டதாகப் பதிவான வழக்கில் ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. "நண்பர்கள் ரெண்டு பேரும் துப்பாக்கியைவெச்சு விளையாடிக்கிட்டோம். என்னடா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க. நானும் சாகலை... ராமச்சந்திரனும் சாகலை. இதுல எல்லாமா டூப்ளிகேட் வர்றது?" என்று அதற்கும் காமெடி விளக்கம் கொடுத்தார்!

நான்கரை ஆண்டு காலம் சென்னை மத்தியச் சிறையில் இருந்தார். அவர் மீது ஆர்வம்கொண்டவராகக் காட்டிக்கொண்ட கைதி ஒருவர், ஒருநாள் சமையல் செய்து கொடுத்தார். ராதா வளர்த்த பூனை அதை முதலில் சாப்பிட்டதும் சுருண்டு விழுந்து செத்துப்போனது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட அந்த உணவில், விஷம் கலக்கப்பட்டு இருந்தது பின்னர் தெரிய வந்தது!

'அடியே காந்தா... ஃபாரின்ல நீராவியில கப்பல் விடுறான்... நீங்க நீராவியில புட்டு செஞ்சு வயித்துக்குள்ள விடுறீங்க', 'ஊருக்கு ஒரு லீடர்... அவனவனுக்கு ஒரு கொள்கை.. அவனவனுக்கு ஒரு பட்டினிப் பட்டாளம்... நான்சென்ஸ்'-இப்படி ராதாவின் வார்த்தைகளைவைத்தே மிமிக்ரி நடிகர் ஆனவர்கள் அதிகம்!

ராமாயணத்தை அதிகப்படியாகக் கிண்டலடித்தவர். 'கீமாயணம்' என்று நாடகம் போட்டார். ராமன் வேடத் தில் இருக்கும்போதே கைது செய்தார்கள். பக்தர்கள் மனம் புண்படுகிறது என்று வழக்குப் போட்டார்கள். 'மனம் புண்படுபவர்கள் யாரும் வர வேண்டாம்' என்று விளம்பரம் கொடுத்தார்!

'நீங்கள் எதில் அதிக இன்பம் காண்கிறீர்கள்?' என்று கேட்டபோது, 'எதிர்ப்பில்தான். மக்கள் எதை விரும்புகிறார்களோ...அதை எதிர்ப்பதுதான் என் பழக்கம்' என்றார்!

ராதாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எவ் வளவு நீளமான வசனங் களாக இருந்தாலும், யாராவது வாசித்தால் அப்படியே மனதுக்குள் ஏற்றிக்கொள்வார். அவர் சொல்லச் சொல்ல எழுதப்பட்டவை சிறுசிறு வெளியீடுகளாக அந்தக் காலத்தில் வெளிவந்தன. 'அண்ணாவின் அவசரம்', 'ராமாயணமா? கீமாயணமா?' என்ற இரண்டும் அதிக சர்ச்சையைக் கிளப்பியவை!

ரத்தக் கண்ணீர், பாகப்பிரிவினை, பாவ மன்னிப்பு, பலே பாண்டியா, பாலும் பழமும், தாய் சொல்லைத் தட்டாதே, படித்தால் மட்டும் போதுமா, பெரிய இடத்துப் பெண், தொழிலாளி, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய படங்கள் ராதா வாழ்ந்து காட்டிய படங்கள். 118 படங்கள் நடித்த ராதா 1963-ம் ஆண்டில் சாதனையாக 22 படங்கள் நடித்தார்!

மு.கருணாநிதி என்று அதுவரை அழைக்கப்பட்டு வந்தவரை 'கலைஞர் கருணாநிதி' என்று அழைத்துப் பட்டம் கொடுத்தவர். 'நடிகவேளின் தலைமுடியும் நடிக்கும்' என்று கலைஞரும் பாராட்டி இருக்கிறார்!

"திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தில் மலரும் போது ராதாதான் கலைத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார்" என்று பகிரங்கமாக அறிவித்தார் அண்ணா. 67-ல் ஆட்சி மலர்ந்தபோது, ராதா கடுங் காவல் தண்டனை பெற்று சிறையில் இருந்தார்!

தன்னைப் பார்க்க இளைஞர்கள், மாணவர்கள் வந்தால் விரட்டுவார். "போய்ப் படிங்கடா... நாங்க எங்க வேலையைப் பார்க்கிறோம். நீங்க உங்க வேலையைப் போய்ப் பாருங்கடா' என்பார். மாண வர்கள் சினிமா பார்க்கக் கூடாது என்பது அவரது அழுத்தமான கருத்து!

விழாக்கள், பாராட்டுக்கள் ஆகியவற்றில் விருப்பம் இல்லாத காமராஜர், ராதாவுக்கு மட்டும்தான் புனித ஆடை போர்த்தும் விழாவை நடத்தினார். 'ஆடையில் என்ன புனிதம் வேண்டிக்கிடக்கு? போர்த்துகிறவர் புனிதர்... அதனால ஏத்துக்கிறேன்' என்று அங்கும் கர்ஜித்தார் ராதா!

'மக்களின் அஞ்ஞானத்தைப் போக்க விஞ்ஞானம் மட்டும் போதாது. ராதா நடத்துவது போன்ற நாடகங்களும் தேவை' என்று சொன்னவர் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்!

'சுட்டாள்... சுட்டான்... சுட்டேன்' என்ற தலைப்பில் நாடகமும் சினிமாவும் எடுக்கத் திட்டமிட்டார். வி.என்.ஜானகி சுட்டாள், எம்.ஜி.ஆர். சுட்டான், நான் சுட்டேன்... என்று விஷயம் அறிந்தவர்களால் விளக்கம் சொல்லப்பட்டது!

"தமிழினத்துக்குத் துரோகம் செய்கிறவர்களை ஒழிக்க ஒரு தற்கொலைப் படை வேண்டும். அதுதான் என்னுடைய லட்சியம். 300 பேர் அதற்குக் கிடைத்தால் போதும்" என்று தனது கடைசிக் காலத்தில் சொல்லிக்கொண்டே இருந்தார்

Comments

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...