- மழைச்சாரல்: மகாதேவன் - கரை சேர்ப்பாளன்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Wednesday, 17 July 2013

மகாதேவன் - கரை சேர்ப்பாளன்

அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது.

நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக...

 

பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துருக்கிறார். 3 வது நாள் அவரது தாய் மரணித்தது அவரை பெரிதாய் பாதிக்கவில்லை...

ஒரு வயதான பெரியவர் (மகாதேவ் தாத்தா) யாரும் உதவாத நிலையில் மகாதேவ்வின் தாய் உடலை எடுத்து சென்று புதைத்துள்ளார், அவருக்கு தெலுங்கு மட்டுமே தெரியும், மகாதேவ்விற்கு கன்னடம் மட்டுமே தெரியும், இருப்பினும் இருவரும் இணைந்து வாழ்ந்துள்ளனர்...

ஒரு நாள் அந்த தாத்தாவும் போய் சேர்ந்தார், அப்போது வருடம் 1971, மகாதேவ்விற்கு வயது 10, இத்தனை நாள் தாத்தா எவ்வாறு குழி தோண்டி புதைத்தாரோ அதே போல் தாத்தாவையும் அடக்கம் செய்தார், அப்படி செய்ததற்கு அவருக்கு கிடைத்த முதல் வருமானம் 2.50 ரூபாய். அன்று ஆரம்பித்து இதுவரை 77,882க்கு மேலான உற்றாரில்லாத (அனாதை) பிணங்களை புதைத்துள்ளார்...

மகாதேவ்விற்கு இந்த வேலை பிடித்துருந்தது என்பதை விட இந்த வேலை மட்டும்தான் தெரியும், இது சம்பந்தபட்ட ஆட்கள்,இடத்தை மட்டும் தான் தெரியும், வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அதை முழுமையாக செய்ய துவங்கினார், அவர் மிக கஷ்டபட்டது தனக்கான துனையை தேடும்பொழுதுதான்...

யாரும் அவருக்கு பெண் தர முன் வரவில்லை, வெறும் வெட்டியானாக இருப்பவனுக்கு யார் தெருவார்கள், 1979ல் அவருக்கு திருமணம் நடந்தது, தனது திருமணத்திற்காக தன் மாமனாருக்கு 2000 ரூபாய் வரதட்சனை கொடுத்துள்ளார். அது வரை தள்ளுவண்டி மூலமாக உடல்களை கொண்டு வந்தவர். அதன் பின் "அம்மு" என்ற குதிரை மூலமாக வண்டி இழுத்து கொணர்ந்திருக்கிறார்...

42000 உடல்களுக்கு மேல் அம்முவால் இழுக்க முடியவில்லை, 2000 வருடத்தில் அம்முவும் மகாதேவ்விடமிருந்து விடை பெற்றது, பல மரணங்களை கடந்த மகாதேவ்வினால் அம்முவின் பிரிவை ஏற்க இயலவில்லை, அடக்கம் செய்யவிடாமல் அழுது தடுத்திருக்கிறார், அதை பற்றி பேசுகையிலும் அவர் முகத்தில் துக்கம் தெரிகிறது, அம்முவை சரோஜ் நகரில் புதைக்க முடியாமல் போய் விட்டது என வருந்துகிறார்...

தற்போது 3 சக்கர வேன் மூலமாக உடல்களை கொணர்கிறார், அவருடைய வாகனத்தில் "VEHICLE FOR UNCLAIMED BODIES" என எழுதப்பட்டுள்ளது, நகரத்திலுள்ள அனைத்து லோக்கல் போலிஸ் ஸ்டேசனிலும் அவரது நம்பர் உள்ளது, அரசு மருத்துவமனையிலும் ஆள் இல்லாத உடல் வந்து விட்டால் இவருக்குதான் அழைப்பு வரும்...

பிரேத பரிசோதனை முடித்த பின்னர் சட்டப்படி எடுத்து சென்று புதைப்பது வழக்கம், அதற்கு மாறாக எரித்த உடல் ஒன்றே ஒன்றுதான். அது ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலிசாரால் சுட்டுக்கொல்லப் பட்ட "சிவராசன்"னின் உடல்.

நகரத்தில் இருந்து வரும் உடலுக்கு 800 ரூபாயும் அரசு மருத்துவமனையிலிருந்து வரும் உடலுக்கு 200 முதல் 250 வரையிலும் வாங்குவதாக கூறும் மகாதேவ் ஒவ்வொரு உடல் அடக்கத்திலும் 100 முதல் 150 ரூபாய் தான் மீதம் என்கிறார்.

இவரைப் பற்றி கேள்விப்பட்ட பல அறக்கட்டளைகள் இவருக்கு உதவி செய்துள்ளது, அனைத்து உதவிகளையும் தன் மகன் பிரவீனுடைய படிப்பிற்காக மட்டுமேபயன்படுத்துகிறார்.

மகாதேவ் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம், மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, இவரை 3 நாள் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஏசி அறையில் தங்க வைத்து, கடைசி நாளில் அவரே நேரடியாக வந்து மகாதேவ் மகனுடைய படிப்பிற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கியது தானாம்.

இவருடைய வாழ்க்கையில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

1) கிடைத்த வேலையை குறை சொல்லாமல் ஏற்று கொண்டது

2) அந்த வேலையை முழு மனதுடன் நிறைவாக செய்தது.

3) எப்படியும் கரை சேர்வோம் என்ற நம்பிக்கையுடன் எந்த தவறான வழிக்கும் செல்லாமல் நேர்மையாக வாழ்வது

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???

நன்றி :தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

3 comments:

 1. மகாதேவன் போன்றோரைப் பாராட்டியே ஆக வேண்டும், வாழ்க்கை மனிதர்களை எவ்வாறு எல்லாம் மாற்றி விடுகின்றன, இருந்த செய் தொழுகே தெய்வம் என, இழிவு கருதாமல் அவர் ஆற்றிய பணி தெராசாவின் பணிக்கு ஒப்பானது. அநாதரவான உடலங்களை நல்லடக்கம் செய்யும் மகத்துவான இப் பணிக்கு மேன்மேலும் உதவிகளைச் செய்ய நல் உள்ளம் கொண்டோர் முனைய வேண்டும், இவரது இப் பணி இவருக்குப் பின்னாலும் தொடர வழிவகைகள் செய்ய வேண்டும்..

  ReplyDelete
 2. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???//

  அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். மகாதேவன் பாராட்டுக்குரியவர். அவரைப் பற்றி எழுதிய நீங்களும்தான் :/)

  ReplyDelete
 3. பாராட்டுக்குரிய மனிதர்தான்! தேடி பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete