களத்து மேட்டிலும் கரன்ட் உற்பத்தி செய்யலாம் ...!

மாற்றுசக்தி!
ஒரு புரட்சி!

 

'கரன்ட் இல்லை... கரன்ட் இல்லை...’ என்கிற குரல் ஒலிக்காத இடமே இல்லை. மாவு மில் தொடங்கி... 'மோட்டார் தயாரிப்பு நிறுவனங்கள்’ வரை பவர் கட் பாதிப்பு, படுத்தி எடுப்பதன் விளைவு சொல்லி மாளாது. விவசாயமும் இதற்கு விதிவிலக்கல்ல. கருகும் பயிர்களைக் காப்பாற்ற இரவுபகலாக மின்சாரத்துக்காக காத்துக்கொண்டு... 'இதற்கான மாற்றுவழியே இல்லையா...?’ என ஏங்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு, நம்பிக்கைக் கீற்றாக ஜொலிக்கிறது, 'சோலார் பவர்’ என்ற சூரியசக்தி மின்சாரம்.

''ஆம்... இது ஒன்றுதான் எதிர்காலத்தில் நம்மைக் காப்பாற்றப் போகிறது. இதுதான் உண்மை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்'' என்று நம்பிக்கையோடு பேசுகிறார்... இந்த சூரியசக்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் இறைத்துப் பாசனம் செய்துகொண்டிருக்கும் கோயம்புத்தூர் மாவட்டம், முருகன்பதி கிராமத்தைச் சேர்ந்த ஆர். விஜயகுமார்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் குளிர்காற்று சிலுசிலுக்க, தோட்ட எல்லையில் ரயில்கள் தடதடக்க, தென்னை மரங்கள் குடை பிடித்துக்கொண்டிருக்க, ரம்மியமாக இருக்கிறது விஜயகுமாரின் தென்னந்தோப்பு. களத்துமேட்டில், தான் அமைத்திருக்கும் சூரியசக்தி மின்சார உற்பத்தி அமைப்புகளை நம்மிடம் காட்டியவர், ''கரன்ட் தட்டுப்பாடை என்னால சமாளிக்க முடியல. அதனாலதான், சோலார் பவர் ஜெனரேட்டர் மூலமா, பம்ப்செட்டை இயக்க ஆரம்பிச்சுட்டேன்.

கோயம்புத்தூர்தான் என்னோட பூர்விகம். போன தலைமுறையில செல்வாக்கான விவசாயக் குடும்பம். ஆனா, நான் இன்ஜீனியரிங் படிச்சுட்டு, 40 வருஷமா மெஷினுக்குள்ளயே வாழ்ந்துட்டேன். ஆனாலும், மனசுக்குள்ள விவசாய ஆசை போகல. பொண்ணு, பையன் ரெண்டுபேரும் படிச்சு அமெரிக்காவுல செட்டிலாகி நல்லா சம்பாதிக்கறாங்க. 'இனி மெஷின் வாழ்க்கை போதும்’னு விருப்ப ஓய்வு வாங்கிட்டேன். கணிசமான பணம் கையில இருந்துச்சு. அதை வெச்சு, செழிப்பா இருக்குற இந்தத் தோப்பை வாங்கினேன்.

வருஷம் முச்சூடும் தண்ணீர் தளும்புற கிணறு. இருந்தாலும், சொட்டுநீர்ப் பாசனம்தான் போட்டிருக்கேன். காய்ப்புக்கெல்லாம் குறையில்ல. அதனால என்னோட விவசாய வாழ்க்கை சந்தோஷமாதான் போயிட்டிருந்திச்சு. ஆனா, கரன்ட் பிரச்னை வந்ததுக்கப்பறம் ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. கிணறு நிறைய தண்ணி இருந்தும் ஒழுங்கா பாசனம் பண்ண முடியாம, மரங்கள்லாம் காய ஆரம்பிச்சுச்சு. குரும்பையெல்லாம் கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.

'என்ன செய்றது’னு தீவிரமா யோசிச்சு நிறைய பேர்கிட்ட யோசனை கேட்டேன். 'ஜெனரேட்டர் வாங்கலாம்’னு சிலர் யோசனை சொன்னாங்க. அதைப்பத்தி விசாரிச்சப்போ... 'அது, சாத்தியமே இல்லை. விவசாயத்தைக் காலி பண்ணிடும்’னு தெரிய வந்துச்சு. அதுக்கப்பறம்தான் 'சோலார் பம்ப்செட்’ பத்திக் கேள்விப்பட்டேன்.

உடனே, ஒரு கம்பெனியில விசாரிச்சேன். ஒருத்தரோட தோட்டத்துல சோலார் மூலமா இயங்குற பம்ப்செட்டை நேர்ல போய் பாத்தேன். 500 அடி ஆழ கிணத்துல இருந்து சோலார் மூலம் தண்ணீர் கொட்டுச்சு. அதைப் பாத்ததும் எனக்கு நம்பிக்கை வந்துச்சு. உடனே, 5 ஹெச்.பி மோட்டாரை இயக்குற அளவுக்கு அரை சென்ட் நிலத்துல சோலர் பேனல்களை அமைச்சுட்டேன்'' என்று சந்தோஷமாகச் சொன்னார் விஜயகுமார்.

இந்த சூரியசக்தி மின்சாரத் தயாரிப்புக்கான ஒரு பேனல், நான்கே முக்கால் அடி நீளமும்... இரண்டேகால் அடி அகலமும் இருக்கும். ஒரு பேனல் 145 வாட்ஸ் திறன் அளவுக்கு மின் உற்பத்தி செய்யும். ஒரு குதிரைத்திறன் மோட்டாருக்கு 1,000 வாட்ஸ் தேவை. இந்தக் கணக்கில் 5 குதிரைத்திறன் மோட்டாரை இயக்க 36 பேனல்கள் தேவைப்படும். இவற்றின் மூலம், ஒரு மணி நேரத்தில் 5 ஆயிரத்து 220 வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

பேனல்கள் டி.சி. மின்சாரத்தைத்தான் உற்பத்தி செய்கின்றன. அதை ஏ.சி. மின்சாரமாக மாற்றினால்தான் பம்ப்செட் இயங்கும். அதற்கான அமைப்புகளும் உள்ளன. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரைதான் நல்ல சூரிய ஒளி கிடைக்கும். அந்த நேரத்தில்தான் இந்த அமைப்பை இயக்க முடியும். இதன் மூலம் மணிக்கு 6 ஆயிரம் லிட்டர் முதல் 8 ஆயிரம் லிட்டர் வரை தண்ணீர் இறைக்க முடியும்.

பம்ப்செட்டை இயக்கிக் காட்டிய விஜயகுமார், ''இதோட விலைதான் ரொம்ப அதிகமா இருக்கு. 5 ஹெச்.பி. மோட்டார் இயங்குற அளவுக்கு பேனல்கள் அமைக்க 5 லட்ச ரூபாய்க்கு மேல செலவாகுது. அரசாங்கம் மானியங்களை அதிகப்படுத்திக் கொடுத்தா, சோலார் மின்வசதியை சிறு-குறு விவசாயிகளும் பயன்படுத்த முடியும்'' என்கிற நியாயமான வேண்டுகோளையும் முன் வைத்தார்.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் துணைப்பொது மேலாளர் சையது அகமதுவிடம் சூரியசக்தி பம்ப்செட் பற்றி பேசியபோது, ''நீர் இறைக்கும் பம்ப்செட்டுக்கு, ஒரு வாட் திறனுக்கு 81 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மானியமாக கிடைக்கும். அண்மையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற வேளாண் மானியக் கோரிக்கையில் கூட, 'சோலார் பம்ப்செட் அமைக்க உதவி செய்யப்படும்’ என்று வேளாண் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். எனவே, வரும் காலங்களில் சோலார் பம்ப்செட்டுக்கு நல்ல காலம்தான். மேலும் தகவல் தேவைப்படுபவர்கள் எங்களது அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்'' என்று சொன்னார்.

தொடர்புக்கு,
விஜயகுமார், செல்போன்: 97900-05054.
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை,
ஈ.வி.கே சம்பத் மாளிகை,
5-வது தளம், கல்லூரிச் சாலை, சென்னை-6.
தொலைபேசி: 044-28224830, 28236592.
பேராசிரியர். வெங்கடாச்சலம்,
செல்போன்: 94429-61793

Comments

  1. Necessity is the Mother of Invention என்று கூறுவார்கள். இப்போதைய தேவை பல வாய்ப்புகளை சிந்திக்க வைக்கிறது.அரசாங்கம் இதனை பரவலாக்கவேண்டும்.
    நல்ல பதிவு கதிர்.

    ReplyDelete
  2. இன்றைய நிலைமைக்கு மட்டுமல்ல... என்றும் தேவைப்படும் தகவல்கள்...

    நன்றி...

    ReplyDelete
  3. எனக்குள் ரொம்ப நாளாக ஒரு சிந்தனை இருக்கு, பெரிய இலைகளுடிய மரங்கள் தென்னை மரம், வாழை மரம் இவை ஒளிச்சேர்க்கையின் மூலம் தான் தனக்கு தேவையான உணவை தாயரிப்பதாக படித்திருக்கிறேன், இந்த ஒளிசெய்ற்கையின் இடத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா என்று பல முறை யோசித்து இருக்கிறேன், தாவரையல் படித்தவர்களும் electrical & electronics engineers கூட்டாக சேர்ந்து ஆராய்ச்சி நடத்தினால் சாத்தியமாகலாம், பொதுவாக நமது அரசு இது போன்ற ஆராய்சிகளுக்கு பணம் செல்வளிக்காது, அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகள் கண்டுபிடிக்கட்டும் பின்பு அதை வாங்கி கொள்ளலாம் என்று இருக்கும்.
    இன்னும் சிலிகான் செல் களில் அந்த அளவுக்கு முழுமையாக மின்சாரம் எடுக்க முடிய வில்லை மாற்று பொருள் கண்டுபிடிக்க வேண்டும் இதற்க்கு நம் அரசு மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டும், நம் நாட்டில் எத்தனையோ பல்கலை கழகங்கள் இருக்கு அங்கும் ஆராய்ச்சி துறை இருக்கு இது வரை எந்த பலகலை கழகமும் உருப்படியாக ஒன்றை கூட கண்டுபிடித்து கொடுத்தது இல்லை, நாம் பயன் படுத்தும் அத்தனை கருவிகளும் வெளிநாட்டின் இறக்கு மதிதான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

இவங்களுக்கெல்லாம் பெரிய புத்திசாலினு நினைப்பு?

Indiana Jones And The Temple Of Doom திரை விமர்சனம்

கலாய்ச்சுட்டாராமாம்...