- மழைச்சாரல்: மலையேறிய அனுபவமுண்டா? இது எனது அனுபவம்
expr:class='"loading" + data:blog.mobileClass'>

Sunday, 6 May 2012

மலையேறிய அனுபவமுண்டா? இது எனது அனுபவம்

 அன்பு நண்பர்களே, நீண்ட இடைவெளிக்கு பின் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்வதில் மகிழ்ச்சி. வழக்கம் போல் என்ன எழுதுவதென்று தெரியாமல் பார்க்கும் படங்களுக்கு விமர்சனமும் ரசித்த பதிவுகளை அப்படியே திருடி பகிர்ந்து கொண்டு இருந்தேன், இப்போது முதல் முறையாக சொந்தமாக ஒரு பதிவை எழுதுகிறேன். அதற்காக மறக்காமல் உங்கள் வாழ்த்தினை தெரிவித்துவிட்டு செல்லுங்கள்.

உங்களுக்கு மலையேறிய அனுபவம் உண்டா? மலையேறுதல் என்றால் பழனி, திருப்பதி போன்ற தளங்களுக்கு பஸ்ஸிலோயொ அல்லது படிகளின் வழியாகவோ செல்லுதல் அல்ல, வெறுமனே கால் நடையாக ஏறுதல். என்னை பற்றி உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதிகம் புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவன், இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பாலகுமாரனின் பல புத்தகங்களில் மலையேறுதல் உடலுக்கும் மனதுக்கும் எவ்வளவு நல்லது என கூறியிருப்பார்,
என் நண்பர்கள் பிரபு மற்றும் கண்ணன்

போன வருடம் சித்திரை மாதம் ஆரம்பிக்கும்பொழுதே, என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கும் என் நண்பன் பிரபு (வருசம் தவறாமல் மலையேறுபவன்) என்னை மேட்டூர் பக்கத்தில் இருக்கும் பாலமலைக்கு சித்ரா பவுர்ணமிக்கு செல்லலாம் என்று அழைத்தான்.
ஏதோ நண்பன் அழைக்கிறான் என்று நான் மட்டும் செல்லாமல் என் நணபன் கண்ணனையும் அழைத்து சென்றேன். மேட்டூரில் இருந்து சற்று தொலைவில் செக்கானூர் பேரேஜ்-ல் இருக்கிறது மலை அடிவாரம். அடிவாரத்தை கண்டுபிடிக்கவே ரொம்ப நேரமானது.
போன வரடம் சித்ரா பவுர்ணாமிக்கு முதல் நாள் இரவு 10 மணிக்கு ஏற ஆரம்பித்தோம். மொத்தம் 7 மலைகள்.ஒவ்வோரு மலைக்கும் அவரவர் விருப்பத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். வட்டப்பாறை, தண்ணிர்பாறை, சிங்காரதோப்பு, மலையாளத்தான்காடு,தோட்டக்காடு என்று.
பிரபு உஷாராக லுங்கி கட்டிக் கொண்டு ஏறினான், நான் தெரியாத்தனமாக லோயர் போட்டிருந்தேன்.முடியலை.ஒவ்வொரு மலையாக ஏறுவதற்குள் உடல் முழுக்க வியர்வை பொங்க ஆரம்பித்தது. அதுவும் எனக்கு சொல்லவே தேவையில்லை, படித்து முடித்து 3 வருடங்களில் வீட்டு சாப்பாட்டால் வளர்ந்திருந்த தொப்பையை தூக்கி கொண்டு ஏறுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது, முதல் மலையை பாதி கடப்பதற்குள்ளே நாக்கு உண்மையிலேயே தள்ள ஆரம்பித்துவிட்டது.
இதில் பெரிய காமெடி என்னவென்றால் கிளம்பும் போது என் உருவத்தை பார்த்து பிரபுவின் அப்பா பிரபுவிடம் "வழியில் முடியவில்லையென்றால் பைகளை இந்த தம்பியிடம் குடுத்து விடு" என்று சொன்னார். உண்மையில் முக்கால்வாசி தூரம் என் பைகளை பிரபுதான் தூக்கிக் கொண்டு சென்றான்.
மூச்சு அதிகம் வாங்கியதாலும் அதிக வியர்வையினாலும் உடலின் உஷ்ணம் அதிகமானது, அது எப்படியோ பிரபு பாதி வழியிலேயே மழை வருவதற்குள் 2 வது மலை ஏறி அங்கிருக்கும் மரத்தடி பாறையில் அமரலாம் என்று முன்பே தெரிந்தவன் போல் சொன்னான், அவன் சொன்னது போலவே நாங்கள் அங்கு போனதும் மழை வந்தது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியில் மலை ஏறி இறங்குவதற்குள் கண்டிப்பாக மழை வந்து விடுமாம்.
மழையின் பின் காற்று சிலுசிலுவென வீசவும் ஏறுவத்ற்கு சுலபமாக இருந்தது.3வது மலையிலிருந்து 4 வது மலைக்கு போகும் வழிக்கான அடையாளம் மாறிப் போயிருந்ததால் பாதை கண்டு பிடிக்க கொஞ்சம் சிரமப்பட்டோம். 4வது மலைக்கு போய் சேரும் வரை போய் கொண்டிருக்கும் பாதை சரியா என்ற சந்தேகத்திலேயே போனோம்.
4 வது மலைதான் சாப்பாட்டு பாறை இங்குதான் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு காலையில் எழுந்து சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும். அதனால்தான் இந்த பெயர் என்று நினைக்கிறேன். படுத்து தூங்குவது என்றால் எப்படி என்று நினைக்கிறீர்கள்? வெறும் பாறையில் நிலாவை பார்த்துக்கொண்டு கொண்டு போயிருந்தால் ஒரு பெட்சீட்டை வைத்து தூங்க வேண்டும்.
மலையின் உச்சியில் எவ்வளவு பனி இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், இரவு 2 மணிக்குதான் அங்கு சென்றோம், அந்த பனியிலும் உறங்கி விட்டோம், அவ்வளவு களைப்பு, இருப்பினும் விடியற்காலை பனி எழுப்பிவிட்டு விட்டது. பக்கத்தில் இருந்த குச்சிகளை வைத்து நெருப்பு பற்ற வைத்து குளிர் காய்ந்தோம்.

பக்கத்திலேயே ஊத்து தண்ணிர், அங்கிருக்கும் மலைவாசிகள் வீட்டில் குடம் வாங்கி குளித்தோம், தொடந்து குளித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல சுகமாக இருந்தது. சாப்பிட்டு விட்டு 7 மணிக்குள் தொடர்ந்து மலை ஏற ஆரம்பித்தோம்.எனக்கு இதுவே அதிகம், எங்களுடன் வந்த பிரபுவின் ஊர்க்காரர்கள் 4 மணிக்கு ஏறிப் போய் திரும்பி வந்துக் கொண்டிருந்தார்கள். கொஞ்ச நேரம் தூங்கியதில் கால் ரத்தம் கட்டி இருந்தது. நேற்று விட ஏறுவதற்கு கஷ்டமாக இருந்தது.
ஆனால் பரவாயில்லை. 6 வது மலை ஒரளவிற்கு சமமாக நடந்து செல்வது போல்தான் இருந்தது.கோவில் கோபுரம் கண்ணுக்கு தெரிந்ததும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை, அப்பாடா ஒரு வழியாக மலைஏறிவிட்டோம் என்று.
அதிலும் ஒரு ஆப்பு இருந்தது. கொஞ்ச தூரம் இறங்கி தீர்த்த குளத்திற்கு சென்று விட்டு படிக்கட்டில் ஏறும் போதுதான் கால் இன்னும் பயங்கரமாக வலிக்க ஆரம்பித்தது. பிரபு ஏற்கனவே கன்னனை கைப்பிடித்து மேலே ஏற்றி செல்வதால் நான் மெதுமெதுவா ஏறினேன். கடைசியாக படிகள் முடிந்ததும் முழுவதும் செங்குத்தான பாறைகள். ஸ்பைடர் மேன் மாதிரி 4 காலில்தான் ஏறினேன்.
கோவிலை அடைந்ததும் ஏதோ சாதித்தது போல் இருந்தது. வரிசையில் காத்திருந்து சாமி பார்த்தபின் அங்கே இருந்த பாறையில் அமர்ந்தோம்.11 மணி வெயில் அடிக்கற காற்றில் தெரியாமல் போய்க் கொண்டிருந்தது.
இங்கே ஒரு ஐதீகம் உண்டு, இங்கிருக்கும்(சிங்காரத் தோப்பு) புல்லினை ஒரு கையால் மனதில் ஏதாவது வேண்டுதல் வைத்துக் கொண்டு முடிச்சு போட்டால் அது கண்டிப்பாக நடக்கும் என்று, அப்படி நடந்தால் அடுத்த வருடம் வந்து ஏதாவது புல்லில் இருக்கும் முடிச்சை அவுக்க வேண்டும், முக்கால் வாசி வரும் வாலிபர்கள் காதலுக்காகவும் கல்யாணத்திற்காகவும் தான் முடிச்சிடுவார்கள், அது நிறைவேறியதும் அடுத்த வருடம் அவர்கள் துணையுடன் வந்து முடிச்சினை அவிழ்ப்பார்கள்.
இப்படி ஜோடியாக ஏறும் போழுது ஆண்கள் தங்கள் மனைவியின் கையை பிடித்துக் கொண்டும் சிலர் ரொம்பவும் முடியாத பெண்களை தூக்கி தோளில் போட்டுக் கொண்டும் ஏறுவார்கள், எல்லோரும் கிராமத்து வாசிகள், ஜிம்மிற்கு போகமலேயெ 6 பேக் வைத்திருப்பவர்கள். ஜோடியாக ஏறுபவர்களை பார்க்கும் போது எனக்கும் திருமண ஆசை வந்து போனது.
இறங்குவது வேறு வழியில், சின்ன பள்ளம் வழி, ஒரு மலை இறங்கி ஊத்து தண்ணீர் இருக்கும் இடத்தில் மதிய உணவு  சாப்பிட்டு விட்டு கையில் ஒரு கோலினை எடுத்துக் கொண்டு ஊன்றி ஊன்றி இறங்கினோம், சில சிறுவர்கள் ஏதோ ஓடிப் பிடித்து விளையாடுவது போல் வேகமாக இறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் தோளில் அவருடைய பையனை தூக்கிக் கொண்டு ஜம்ப் பன்னி ஜம்ப் பன்னி இறங்கி கொண்டிருந்தார்.
வெயில் அதிகமாக இருந்ததால் அதிகமாக தாகம் எடுத்தது, பிரபுதான் அளந்து அளந்து குடுத்தான், கடைசி மலை இறங்கும் போது தரை கண்ணுக்கு தெரிந்தது, ரொம்ப நேரம் இறங்கி மறுபடியும் பார்த்தால் தரை முன்பு பார்த்த அதே தொலைவில் தான் இருக்கும், அப்ப வரும்  பாருங்க ஒரு கோபம், யார் மேல வருதுனு தெரியாது.
ஒரு வழியாக இறங்கி அங்க பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல இருந்த பைப்பில் அப்படியே தலையை நீட்டி நனைத்துக் கொண்டு பஸ் ஏறினோம், பஸ்ஸில் அமர்ந்து கண்ணை மூடி திறப்பதற்குள் ஊர் வந்து விட்டது, செம தூக்கம், வீட்டிற்கு வந்து மாலை 6 மணிக்கு படுத்தவன் அடுத்த நாள் 8 மணிக்குதான் எழுந்தேன். நடக்கும் போது கால் பயங்கரமாக வலித்தது, அந்த வலி 3 நாட்களில் சரியாகி விட்டது. ஆனால் ஒரு மாதம் உடலும் மனமும் பயங்கர உற்சாகமாக இருந்தது. மனதிற்குள் அடுத்த வருடமும் கண்டிப்பாக மலையேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 
இது போன வருடம் 2011 ல் நான் மலையேறியது தொடர்பான பதிவு, இந்த வருடத்திற்கான பதிவு விரைவில் வரும். உங்களுக்கு தோன்றும் கருத்துகளை மறக்காமல் தெரிவியுங்கள், இப்பதிவு பிடித்திருப்பின் பகிந்து கொள்ளவும்.

என்றும் அன்புடன்

கதிரவன்

No comments:

Post a Comment