மகாதேவன் - கரை சேர்ப்பாளன்
அன்பர்களுக்கு வணக்கம், நேற்று எங்கள் கல்லூரியில் புதிதாய் வந்திருக்கும் பேராசிரியர்களுக்கென ஒரு சுய உந்து நிகழ்ச்சி நடத்தினர், அதில் கோவை பார்க் கல்லூரி முதல்வர் திரு.லக்ஷ்மன் அவர்கள் ஒரு மனிதனை பற்றி மேலோட்டமாக குறிப்பிட்டார், பெயர் கூட கூறவில்லை, செய்யும் வேலையை மற்றவர்கள் மேற்பார்வை செய்கிறார்கள் என்பதற்காக செய்யாமல் தானாக சுயதிருப்திக்காக செவ்வனே செய்பவர்களுக்கு உதாரணமாய் அவரை குறிப்பிட்டார், அந்த மனிதனை பற்றிய விஷயங்கள் என்னை வெகுவாய் பாதித்தது. நமக்குதான் இருக்கவே இருக்கிறதே இணையம், தேடிப் பிடித்தேன், முழுதாய் அறிந்து கொண்டேன். அந்த மனிதனின் பெயர் மகாதேவன். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்காக... பிறந்தது 1961 ஆம் வருடம், கர்நாடகா மைசூரில் அஞ்சுப்புரா என்ற கிராமத்தில் பிறந்த மகாதேவ் தனது 8வது வயதில் பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு தனது உடல்நலமில்லாத தாயுடன் வந்தார், அவரது தந்தையை பற்றிய தகவல் இல்லை, அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் மருத்துவமனை வரான்டாவில் தன் தாயை படுக்க வைத்து விட்டு, அக்கம் பக்கமிருந்தவர்களிடமும் சுற்றி இருந்த கடைகளிலும் பசிக்கு தஞ்சமடைந்துர...